Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இலக்கியங்களின் தொன்மை என்பது கவிதையே; நெல்லை இலக்கிய நிகழ்வில் கவிஞர் பேரா பேச்சு..

இலக்கியங்களின் தொன்மை என்பது கவிதையே; நெல்லை இலக்கிய நிகழ்வில் கவிஞர் பேரா பேச்சு..

by ஆசிரியர்

நெல்லை மாநகரில் நடந்த பொருநை இலக்கிய நிகழ்வில் “இலக்கியங்களின் தொன்மை என்பது கவிதையே” நவீன இலக்கியத்தையே இன்றைய இளைஞர்கள் விரும்புகின்றனர்” என தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்க அமைப்பாளர் கவிஞர் பேரா குறிப்பிட்டார். பொருநை இலக்கிய வட்டத்தின் 2047-வது வார கூட்டம் 07.01.2024 ஞாயிறு அன்று நெல்லை மாநகரில் நடந்தது. வருகை தந்தோரை இளைய புரவலர் தளவாய் நாதன் வரவேற்றார். கவிஞர் பாமணி அறிமுக உரையாற்றினார். பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநரும் தமிழ்ச் சங்கங்களின் கூட்டியக்க அமைப்பாளருமான கவிஞர் பேரா “ஹைக்கூ பூக்கள்” என்ற தலைப்பில் உரையாற்றினார். அவரது உரையில் “இலக்கியங்களின் தொன்மை என்பது கவிதையே. இன்றைய நவீன காலத்திற்கு ஏற்றபடி இலக்கியமும் நவீனமாகியுள்ளது மகிழ்ச்சி தரக் கூடியது. நவீன இலக்கியத்தில் கவிதைகளின் தன்மையும் மாறி வருகிறது. அந்த மாற்றத்தின் ஓர் வரவே ஹைக்கூ கவிதையாகும். மகாகவி பாரதியார் உட்பட பலரும் ஹைக்கூ பற்றி எழுதியுள்ளனர். பல்கலைக் கழகங்கள், கல்லூரி பாடங்களிலும் ஹைக்கூ இலக்கியம் இடம் பெற்றிருக்கிறது. அதனால் தான் ஹைக்கூ கவிதை உட்பட நவீன இலக்கியத்தை இன்றைய இளைஞர்கள் விரும்புகின்றனர்” என கவிஞர் பேரா குறிப்பிட்டார். இக்கருத்தை மையப்படுத்தி மருத்துவர் இளங்கோ செல்லப்பா, கவிஞர் வேல்மயில், கோதை மாறன் உட்பட பலர் பேசினர். தொடக்கத்தில் மீனாட்சி நாதன் இறைவணக்கம் பாடினார். இந்த நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!