Home செய்திகள் காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர் சுப்பிரமணியன் உடல் 24 குண்டுகள் முழங்க அடக்கம்- கண்ணீருடன் விடை கொடுத்த கிராம மக்கள்..

காஷ்மீர் தீவிரவாதிகள் தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப். வீரர் சுப்பிரமணியன் உடல் 24 குண்டுகள் முழங்க அடக்கம்- கண்ணீருடன் விடை கொடுத்த கிராம மக்கள்..

by ஆசிரியர்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மத்திய ரிசர்வ் காவல் படையினர் சென்ற பேருந்து மீது 14ந்தேதி தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை தாக்குதலில் உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரியைச் சேர்ந்த சிஆர்பிஎப் வீரர் சுப்பிரமணியன் உடல் இன்று அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

கோவில்பட்டி அருகேயுள்ள சவலாப்பேரி கிராமத்தைச் சேர்ந்த கணபதி – மருதாத்தாள் தம்பதி மகனான சுப்பிரமணியன்(28) ஐடிஐ படிப்பு முடித்தார். பின்னர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய ரிசர்வ் காவல் படையில் (சிஆர்பிஎப்) சேர்ந்தார். ஜம்மு-காஷ்மீரில் பணியாற்றி வந்த இவர், கடந்த ஜனவரி மாதம் 13ஆம் தேதி சவலாப்பேரிக்கு வந்துவிட்டு, பிப்ரவரி 10ஆம் தேதி மீண்டும் பணிக்கு புறப்பட்டார்.

இந்நிலையில், பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்முவை சென்றடைந்த சுப்பிரமணியன் ஸ்ரீநகருக்கு வாகனத்தில் செல்லும்போது, தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை தாக்குதலில் உயிரிழந்தார்.

இதையடுத்து, சுப்பிரமணியன் உடல் மதுரை வழியாக இன்று மாலை சவலாப்பேரிக்கு கொண்டு வரப்பட்டு, முழு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

அவரது உடல் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் அஞ்சலிக்காக அவரது வீட்டு முன்பு வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தமிழக அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார் (வருவாய் துறை), கடம்பூர் செ.ராஜு (செய்தி மற்றும் விளம்பரத் துறை), ராஜலட்சுமி (ஆதிதிராவிடர் நலத் துறை), மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா ஆகியோர் அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினர்கள் கீதாஜீவன், வசந்தகுமார், கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமசந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலர் சி.த.செல்லப்பாண்டியன், ஆவின் தலைவர் சின்னத்துரை, முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன், மற்றும் அமமுக தென்மண்டலச் செயலர் மாணிக்கராஜா, மாவட்டச் செயலர் சுந்தரராஜன், மதிமுக மாவட்டச் செயலர்கள் ஆர்.எஸ்.ரமேஷ், செல்வம், மாவட்ட இளைஞரணிச் செயலர் விநாயகா ரமேஷ், காங்கிரஸ் கட்சியின் வடக்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன், பாஜக மாவட்டத் தலைவர் பாலாஜி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் வினோத்குமார், மாநிலப் பொறுப்பாளர் ராமசந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் அர்ச்சுனன், சமத்துவ மக்கள் கட்சியின் மாவட்டச் செயலர் பாஸ்கரன் உள்பட அனைத்துக் கட்சி பிரமுகர்கள் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அவரது உடல் அவர் இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குமாரகிரி சாலையில் அவரது குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தில் உடல் அடக்கம் செய்வதற்காக கொண்டு செல்லப்பட்டது. அங்கு மத்திய நிதி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர், தமிழக துணை முதலமைச்சர், அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மத்திய ரிசர்வ் படை டிஐஜி பிரவீண் சி.காத், கமாண்டன்ட் ரோகினிராஜன், துணை கமாண்டன்ட் ஆறுமுகம், உதவி கமாண்டன்ட் வெங்கடேஷ், மகேந்திரன், சிஆர்பிஎப் எஸ்.பி. அமிர்தராஜ், மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், கோட்டாட்சியர் விஜயா, வட்டாட்சியர் லிங்கராஜ் ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

பின்னர், மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் 24 குண்டுகள் முழங்க அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

ரூ.20 லட்சம் நிவாரணம்: சுப்பிரமணியத்தின் மனைவி கிருஷ்ணவேணியிடம் தமிழக அரசின் கருணைத் தொகையான ரூ,.20 லட்சத்திற்கான காசோலையை துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஆகியோர் வழங்கினர்.

சுப்பிரமணியனின் உடல் அவரது இல்லத்தில் இருந்து மயானம் செல்வதற்காக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். நெல்லை மாவட்ட எஸ்.பி. அருண்சக்திகுமார், நெல்லை துணை ஆணையர்கள் மாலிக் புரோஸ்கான், சுகுணாசிங் மற்றும் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் தர்மலிங்கம், ஜெபராஜ், ரமேஷ், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பொன்ராம் ஆகியோர் தலைமையில் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

முன்னதாக, மதுரையில் இருந்து தரை மார்க்கமாக அவரது சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்ட சுப்பிரமணியன் உடலுக்கு 15க்கும் மேற்பட்ட இடங்களில் நிறுத்தி, அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!