இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ், காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மீன்துறை துணை இயக்குநர் காத்தவராயன் ஆகியோரிடம் பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சே.சின்னதம்பி கொடுத்த மனு :
கடந்த பல ஆண்டுகளுக்கு மேலாக கச்சத்தீவு திருவிழாவிற்கு பாரம்பரிய மீனவர்கள் தங்கள் குடும்பங்களுடன் நாட்டுப் படகில் சென்று வந்தனர். இலங்கை உள்நாட்டு போர் காலத்திலும் எங்களது வழிபாட்டு உரிமையை காக்க நாட்டுப் படகுகளில் சென்று வந்தோம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக வர்த்தக ரீதியாக விசைப்படகுகளில்பயணிகளை அழைத்துச் சென்றதால், நாட்டுப்படகுகளில் கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்ல தடை விதித்தனர்.
இந்நிலையில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை நிலைநாட்டவும், பாரம்பரிய மீனவர்களின் வழிபாட்டு உரிமையை மீட்கும் பொருட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். நாட்டுப்படகுகளில் பாரம்பரிய மீனவர்கள் தங்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் கச்சத்தீவு திருவிழாவுக்கு செல்லலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மீன்பிடி விசைப்படகுகளில் வர்த்தகரீதியாக பயணிகளை ஏற்றிச் செல்ல நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிமன்றம் உத்தரவுப்படி மார்ச்15, 16 தேதிகளில் நடைபெறும் கச்சத்தீவு திருவிழாவிற்கு பாரம்பரிய மீனவர்கள் கலந்துகொள்ள 20 நாட்டுப் படகுகளில் தலா 23 பேர் வீதம் 460 பேருக்கு அனுமதி, பாதுகாப்பு தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
செய்தி:- முருகன், இராமநாதபுரம்
You must be logged in to post a comment.