கோவை அரசு மருத்துவமனையில் உயிரிழந்த பெண்ணின் உடலை பூனை கடித்து தின்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அரசு மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் நேற்று உயிரிழந்தார். இறந்தவர் யார்..? அவருக்கு உறவினர்கள் யாராவது இருக்கிறார்களா..? என்ற விவரம் தெரியாத காரணத்தினால், வார்டின் தரையிலேயே இறந்த பெண்ணின் உடல் வைக்கப்பட்டது. இதனிடையே வார்டில் அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த பூனை ஒன்று, யாரும் கவனிப்பார் இன்றி கிடந்த இறந்த பெண்ணின் உடலை கடித்து தின்றது. அதனை பார்த்த மற்றவர்கள் வேகமாக சென்று பூனையை அங்கிருந்து விரட்டினர்.
இதனையடுத்து இதுகுறித்து அங்குள்ள மருத்துவமனை ஊழியர்களிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அப்போதும் இறந்த பெண்ணின் உடல் அகற்றப்படாமல் அங்கேயே வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்களிடம் பிற நோயாளிகளின் உறவினர்கள் தகராறில் ஈடுபட்டனர். உடனடியாக அந்த உடலை அகற்ற வேண்டும். பூனைகளை மருத்துவமனையிலிருந்து விரட்ட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
அரசு மருத்துவமனையில் இறந்த பெண்ணின் உடலை பூனை கடித்து தின்ற சம்பவம் அங்கிருக்கும் பிற நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனை ஊழியர்கள் அலட்சியத்துடன் வேலை பார்க்காமல் சேவை மனப்பான்மையுடன் வேலை பார்க்க வேண்டும் என்றும் மற்ற நோயாளிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
செய்தி:- ஜெ.அஸ்கர், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), திண்டுக்கல் .
You must be logged in to post a comment.