Home செய்திகள்உலக செய்திகள் உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஈஷா மையம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கல்..

உயர் கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஈஷா மையம் சார்பில் கல்வி உதவித் தொகை வழங்கல்..

by Abubakker Sithik

முதல் தலைமுறையாக கல்வி கற்கும் மாணவர்களுக்கு ஈஷா கல்வி உதவித்தொகை..

ஈஷாவை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து முதல் தலைமுறையாக உயர் கல்வி கற்கும் 38 மாணவர்களுக்கு பிப்.25 அன்று கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஈஷாவின் கல்வி உதவித் தொகையின் மூலம் கல்வி கற்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

ஈஷாவில் சந்நியாசியாக இருக்கும் மா சந்திரஹாசா, ஈஷா வித்யா மெட்ரிகுலேஷன் பள்ளியின் முதல்வர் சாவித்ரி, பி.எஸ்.ஜி கன்யா குருகுலம் கல்லூரியின் பேராசிரியர் கவிதா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று கல்லூரி மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகைக்கான காசோலைகளை வழங்கினர்.

இது தொடர்பாக, ஈஷாவின் கிராமப்புற மேம்பாட்டு பணிகளில் ஈடுபட்டு வரும் சுவாமி சிதகாஷா கூறுகையில், ”இந்த கல்வி உதவித் தொகை வழங்கும் பணியை நாங்கள் 2005-ம் ஆண்டு முதல் செய்து வருகிறோம். இதன் மூலம், தற்போது ஏராளமான பழங்குடி குழந்தைகள் முதல் தலைமுறை பட்டதாரிகளாக மாறி உள்ளனர். தாணிக்கண்டி, மடக்காடு, முள்ளாங்காடு, நல்லூர் வயல், சீங்கப்பதி உள்ளிட்ட பழங்குடி கிராமங்கள் மற்றும் மத்வாரயபுரம், செம்மேடு, ஆலாந்துறை, நரசீபுரம் போன்ற இதர கிராமங்களும் இதனால் பயன்பெறுகின்றன. கல்வி உதவித் தொகை வழங்குவதோடு மட்டுமின்றி, ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்புகள், டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளையும் இலவசமாக நடத்தி வருகிறோம்.” என்றார்.

இந்நிகழ்ச்சியில் கல்வி உதவித் தொகை பெற்ற நல்லூர் வயல் கிராமத்தைச் சேர்ந்த மாணவி சஜிதா கூறுகையில், “நான் தற்போது பி.காம் இறுதியாண்டு படித்து வருகிறேன். 1-ம் வகுப்பு படிக்கும் சமயத்தில் இருந்து ஈஷா எனக்கு உதவி செய்து வருகிறது. குறிப்பாக, ஈஷா வித்யா பள்ளியில் படித்ததன் காரணமாக என்னுடைய ஆங்கில பேச்சு திறன் மேம்பட்டுள்ளது. இது எனக்கு கல்லூரியில் மிகவும் உதவியாக உள்ளது. எங்கள் குடும்பத்தில் நான் தான் முதல்முறையாக பட்டப்படிப்பை நிறைவு செய்ய உள்ளேன். அடுத்து எம்.காம் படிக்கவும் முடிவு செய்துள்ளேன்” என்றார். முன்னதாக, இந்நிகழ்ச்சியில் மாணவர்களின் பரத நாட்டியம், களரி, நாட்டுப்புற நடனம் போன்ற கலை நிகழ்ச்சிகள் கோலாகலமாக நடைபெற்றன.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com