Home அறிவிப்புகள் கோவையில் இனி பொதுக்குழாய் இல்லை ..மின்சாரம், பெட்ரோல், டீசலைப் போல் குடிநீருக்கு மீட்டர் கட்டணம்…

கோவையில் இனி பொதுக்குழாய் இல்லை ..மின்சாரம், பெட்ரோல், டீசலைப் போல் குடிநீருக்கு மீட்டர் கட்டணம்…

by ஆசிரியர்

கோவையில் பொதுக்குடிநீர் குழாய்கள் அகற்றப்பட்டு மின்சாரம், பெட்ரோல், டீசலைப் போல் மீட்டர் அளவீட்டில் தேவைக்கேற்ப கட்டணம் செலுத்தி குடிநீரை பெற்றுக் கொள்ள வேண்டும் என நகராட்சி நிர்வாக ஆணை யர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இது கோவை மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளார்கள். கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்தை அடுத்த 26 ஆண்டு காலத்திற்கு பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்திற்கு வழங்க கோவைமாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த மிட்டுள்ளது.

இந்நிலையில் சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு புதனன்று கோவை மாநகராட்சி மைய அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நகராட்சிநிர்வாக ஆணையர் பிரகாஷ், கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன், துணை ஆணையாளர் காந்திமதி உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அப்போது பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

‘உலகம் முழுவதும் பெருநகரங்களில் பொதுமக்களுக்கு குடிநீரை விநியோ கிப்பது பெரும் சவாலாக இருந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டே, அதில் அனுபவமுடைய பிரான்ஸ் நாட்டின்தனியார் நிறுவனமான சூயஸ் நிறு வனத்திற்கு கோவை மாநகராட்சியின் 60வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீரை 24 மணிநேரமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள், தொழில் நிறுவனங்கள் ஆகியவற்றின் பயன்பாட்டின் அடிப்படையிலும், வீட்டின் பரப்பளவு அடிப்படையிலும் குடிநீருக்கான கட்டணம் நிர்ணயிக்கப்படும். அதாவது மின்சாரம், பெட்ரோல், டீசல் போன்றவற்றை எப்படி மீட்டர் அளவில் பெறுகிறோமோ அதேபோல தண்ணீரையும் மீட்டர் அளவில் பெற வேண்டும் என்பது தற்போது உலகளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த முறைதான் இங்கும் அமல்படுத்தப்பட உள்ளது. இதன்படி பயன்பாட்டிற்கு ஏற்பவும், வீடுகளின் சதுர பரப்பளவு கணக்கீட்டின்படியும் குடிநீர் கட்டணம் நிர்ணயிக்கப்படும்’.இவ்வாறு அவர் கூறினார்.

பொதுக் குழாய் இல்லை

அப்படியானால் குடிநீர் கட்டணம் உயர்த்தப்படுமா, பொது குடிநீர் குழாய்கள் அகற்றப்படுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகையில், ‘இதுதொடர்பாக மாநகராட்சி மற்றும் அரசே முடிவு செய்யும். இதில் தனிநபர்களோ, நிறு வனங்களின் தலையீடோ இருக்காது. அதேநேரம், அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்க வேண்டும் என்பதே இலக்கு என்பதால், பொதுக்குழாய் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நாங்களே 24 மணி நேரம் தண்ணீர் தருகிறோமே; அதனால் தண்ணீரை சேமித்துவைக்க டேங்க், தொட்டி ஆகியவற்றிற்கு அவசியம் இல்லை. அதேபோல், இரண்டு மூன்று நாட்கள் சேமித்து வைக்கப்படுகிற குடிநீரில் புளுக்கள் உண்டாகி நோய்கள் பரவுகிறது, இதுவும் தடுக்கப்படும்” என்றார்.

ரூ.15 ஆயிரம் டெபாசிட்

கோவை மாநகரத்தில் உள்ள குடிசைப்பகுதிகளை அகற்றிவிட்டு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. இதன்படி 15 ஆயிரம் வீடுகள் கோவை மாநகரத்தில் கட்டப்பட்டுள்ளது. இவை யனைத்திற்கும் குடிநீர் இணைப்பை கொடுக்கமுடியுமா அல்லது கொடுத்தால் அம்மக்கள் நிர்ணயிக்கப்படும் கட்ட ணத்தை கட்ட முடியுமா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குபதிலளிக்கையில், “குடிநீர் இணைப் பிற்கான முன்வைப்பு கட்டணத்தைப் பொறுத்தவரை அது திருப்பித் தருகிறஒன்றுதான். இருப்பினும் இது மிகப்பெரிய திட்டம் என்பதால் ரூ.10 ஆயிரம் அல்லது ரூ.15 ஆயிரம் வரை முன்வைப்பு கட்டணம் (டெபாசிட்) நிர்ணயிக்கப்படலாம்” என்றார்.

பதில் கிடைக்காத கேள்விகள்

குடிநீர் விநியோகத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், மாநகராட்சி நிர்வாகமும் சீராக செய்து வரும் நிலையில் தனியாருக்கு இந்த உரிமையை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன;மாநகராட்சி குடிநீர் சேவை செய்ய முன்வராதபோது, தனியார் நிறுவனம் லாபத்தை அடிப்படையாகக் கொண்டு தானே இயங்கும்; அப்படியான நிலையில், பொதுமக்கள் குடிநீருக்கு பெரும் செலவு செய்ய வேண்டியது வருமே; குடிநீரை வணிகமாக்குவதுதான் அரசின் திட்டமா என செய்தியாளர்கள் சரமாரியான கேள்விகளை எழுப்பினர்.

ஆனால் இந்த கேள்விகளுக்கு உரிய பதிலளிக்காத நகராட்சி நிர்வாக ஆணையர், “24 மணி நேர குடிநீர் விநியோகத்திற்கான தொழில்நுட்பங்களை அறிந்த பொறியாளர்கள் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் இல்லை” என அபாண்டமாக பொறியாளர்களைப் பழித்தார். இதேபோல், எதிர்க்கட்சிகளின் போராட்டம், அவர்கள் முன்வைக்கிற கோரிக்கை குறித்த அனைத்து விதமானகேள்விகளுக்கும் மழுப்பலான பதில்களையே தெரிவித்தார்.

இதன்பின், சூயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் குறித்த நகலை வெளி யிடுவதற்கு தயக்கம் என்ன என்று அனைத்து செய்தியாளர்களும் ஒருமித்த குரலில் கேள்வி எழுப்பினர். அதற்கு அதுதொடர்பான விவரங்கள் இணை யத்தில் உள்ளது, படித்துக் கொள்ளுங்கள் என்றார். ஆனால், இணையத்தில் அவை வெளியிடப்படவில்லையே என அனை வரும் கேட்டதற்கு, வெளியிடப்பட்டுள்ளது என திரும்பத் திரும்ப பதிலளித்ததுடன், சூயஸ் நிறுவனம் வெற்றிகரமாக குடிநீர் விநியோக திட்டத்தை நடை முறைப்படுத்திய நகரங்கள் குறித்து தெரிவியுங்கள் என்றதற்கு அதையும் அந்த நிறுவனத்தின் இணையப் பக்கத்தில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றுகூறி செய்தியாளர் சந்திப்பை முடித்துக் கொண்டார்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com