Home செய்திகள்கீழக்கரை செய்திகள் தொடர்ந்து வஞ்சிக்கப்படும் கீழக்கரை மக்கள்… கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வார்டு மறுவரையறை பட்டியல்..

தொடர்ந்து வஞ்சிக்கப்படும் கீழக்கரை மக்கள்… கருத்துக்கள் புறக்கணிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள வார்டு மறுவரையறை பட்டியல்..

by ஆசிரியர்

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அறிவுரைப்படி ஜனவரி 2019 ல் வெளியிடப்பட்ட சட்டமன்ற வாக்காளர் பட்டியலை அடிப்படையாக ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்குரிய வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக வரைவு வாக்கு சாவடி பட்டியலும் வெளியிடப்பட்டு, இது சம்பந்தமாக ஆட்சேபனை ஏதும் இருந்தால் தெரிவிக்கலாம் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 2017ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தமிழ்நாடு மறு வரையறை ஆணைய ஒழுங்குமுறைகளின் படி 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு, கீழக்கரை நகராட்சி வார்டுகளுக்கான மறு வரையறை கருத்துருக்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கீழக்கரை நகராட்சியின் மொத்த மக்கள் தொகை 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி, (நகராட்சி அலுவலக ஆவணங்களின் படியும், தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக பெறப்பட்ட தகவல்களின் படியும் 47730 ஆகும். ஆனால் மறு வரையறை பட்டியலில் 38355 என்று குறிப்பிடப்பட்டு, அதன் அடிப்படையில் மொத்த மறு வரையறை பட்டியலும் சட்ட விதிமுறைகளுக்கு முரணாக, முறையற்ற தன்மையில் தயாரிக்கப்பட்டிருந்தது.

மேலும் வார்டு மறுவரையரை பட்டியல் தயார் செய்த நகராட்சி இளநிலை அலுவலர்கள், தப்பும் தவறுமாக பல்வேறு குளறுபடிகளை செய்திருந்தனர். பல வார்டுகள் முறையற்ற தன்மையில் மாற்றி அமைக்கப்பட்டு, அனைத்து வார்டுகளும் குழப்பத்தின் நுழைவு வாயிலாக மறு வரையறை செய்யப்பட்டிருந்தால், 21 வார்டு பகுதி மக்களும் கடும் குழப்பத்தில் பொதுமக்கள் அல்லல்படும் சூழலை உருவாகியிருந்தது. இந்த மறு வரையறை அரசால் அங்கீகரிக்கப்படுமானால் பொதுமக்களின் இயல்பான வாக்குரிமை சதவீதங்கள் துண்டாடப்படும் சூழல் உருவாகிவிடும். அது மட்டுமல்லாது ஆதார், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களில் வார்டு மாற்றம் செய்ய வேண்டிய சூழலில் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாவர்.

இது சம்பந்தமாக பல்வேறு பொது நல அமைப்பினர், 200க்கும் மேற்பட்ட கீழக்கரை நகராட்சி பொதுமக்கள், கடந்த 02.01.2018 அன்று ஆட்சேபனை தெரிவித்து மனு செய்திருந்தனர். அதனடிப்படையில் கடந்த 06.02.2018 அன்று மதுரையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்டத்தில் மேற்சொல்லப்பட்ட வார்டு மறு வரையறை வரைவு கருத்துரு குறித்து ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதோடு, இந்த குளறுபடியான வார்டு மறுவரையரை பட்டியலை ரத்து செய்ய கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டிருக்கும் வார்டு வாரியான வாக்கு சாவடி பட்டியலில்,  ஆட்சேபணை செய்திருந்த அதே வார்டு மறு வரையறை செய்த தகவல்கள், எந்த ஒரு மாற்றமுமின்றி, எவ்வித முன்னறிவிப்புமின்றி வெளியிடப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

இதற்கிடையில் இது சம்பந்தமாக ஆட்சியர் முன்னிலையில் அரசியல் கட்சிகளிடமும் கருத்து கேட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது.  ஆனால் எந்த ஒரு அரசியல்  கட்சியும் இதுவரை பொதுமக்களிடம் கருத்து கேட்டு அதை அரசு அதிகாரிகளிடம் தெரிவித்ததாக அறியவில்லை.  அவ்வாறு கருத்து கேட்பதாக இருந்தால் பொதுமக்கள் அனைவரும் அறியும் வண்ணம் அறிவிப்பு வெளியிட்டு செய்திருக்க வேண்டும். இது போன்ற நகராட்சியின் தன்னிச்சையான செயல் நிச்சயமாக பொது மக்கள் விரோத போக்குதான்… சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் கொள்வார்களா??

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!