“பாஜகவுக்கு அடிபணிந்து அதிமுக சுயமரியாதையை இழந்து நிற்கிறது” தூத்துக்குடியில் கனிமொழி M.P. பேச்சு..

தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலைஞர் அரங்கில்  நடைபெற்றது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். விழாவில், மாநில மகளிர் அணிச் செயலாளர் கனிமொழி எம்பி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் உடல் நலம் விசாரிப்பதற்காக மரியாதை நிமித்தமாக சந்தித்து வருகிறார்கள். அதுபோல் திமுக தலைவர் தளபதியாரும் உடல் நலம் விசாரிக்கத்தான் சென்றார். இதனை சிலர் அரசியல் ஆக்குகிறார்கள். அவருடன் கூட்டணி குறித்து பேசவில்லை.

ராகுல்தான் பிரதமர் வேட்பாளர் என்பது திமுகவின் உறுதியான நிலைப்பாடு, அது பற்றிய மற்ற கட்சிகளின் கருத்து பின்னர் பேசி முடிவு செய்யப்படும். ஜெயலலிதா சுயமரியாதையோடு வளர்த்த அதிமுக இயக்கம் இன்றைக்கு இருக்கக்கூடிய தலைவர்களால் பாஜகவுக்கு அடிபணிந்து சுயமரியாதை இழந்து நிற்கக் கூடிய கட்சியாக மாற்றியிருக்கிறார்கள், இதை அந்த கட்சியின் அடிமட்ட உறுப்பினர்கள் சிந்திக்க வேண்டும்.

திமுக கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை, அதிமுக கூட்டணி அமைக்க எப்படி குட்டிகரணம் அடித்தார்கள் என்று எல்லோருக்கும் தெரியும். திமுக கூட்டணிக்கு தேமுதிக வருமா? என்பதை ஸ்டாலின் முடிவு செய்து அறிவிப்பார். திமுக கூட்டணி அமோகமாக வெற்றி பெறும் என்றார்.

விழாவில் பள்ளி மாணவி ஸ்ரீமதி என்பவருக்கு ஸ்போர்ட்ஸ் சைக்கிளை கனிமொழி எம்பி வழங்கினார். மேலும, நிறைமதி என்ற மாணவிக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார். பொதுக்குழு உறுப்பினர் என்பி ஜெகன், மாவட்ட துணைச் செயலளார் ராஜ்மோகன் செல்வின், திமுக நிர்வாகிகள் வழக்கறிஞர் மோகன் தாஸ் சாமுவேல், ரவி, சுரேஷ்குமார், லெட்சுமணன், ஒன்றிய செயலளர் செந்தூர் மணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்.