இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!
பகுதி -3
கப்ளிசேட்
உஸ்மானிய பேரரசு -33
(கி.பி -1299-1922)
சுல்தான் இரண்டாம் முராத் அவர்களின் காலத்தில் ஐரோப்பாவில் மிகப்பெரிய ஒரு புரட்சி ஏற்பட்டது.
அன்றைய காலகட்டத்தில் புத்தகங்களை கையிலேயே எழுதினார்கள்.
நகலெடுக்க முடியாததால் ஒரே புத்தகத்தை பலர் அமர்ந்து எழுதும் சூழல் நிலவியது.
இதனால் பல அறிவுப் பொக்கிஷங்கள் எல்லோரையும் சென்று அடையாமல் குறிப்பிட்டவர்களிடம் மட்டுமே இருந்தது.
இந்த நிலையில் தான் அந்த அதிசயம் நிகழ்ந்தது. ஐரோப்பாவின் ஜெர்மனி நகரில் கி.பி 1438ஆம் ஆண்டில் கூடன்பெர்க் என்பவர் அச்சிடும் இயந்திரத்தை கண்டுபிடித்தார்.
இது ஐரோப்பிய உலகில் மிகப்பெரிய மாறுதல்களை ஏற்படுத்தியது. உலகின் மற்ற நாடுகளில் ஒரு புத்தகத்தை எழுத பலநாட்கள் ஆனநிலையில் ஜெர்மனியில் மின்னல் வேகத்தில் அச்சிடப்பட்டது.
குறிப்பாக ஏராளமான பைபிள்களும், கிறிஸ்தவ மத நூல்களும் அச்சடிக்கப்பட்டு உலகம் முழுவதும் விநியோகம் செய்யப்பட்டது. இதனால் கிறிஸ்தவம் முழுவீச்சில் பரவியதுடன் பல செய்திகளை பிறருக்கு ஆவணமாக கொடுக்க முடிந்தது.
இந்த அச்சிடும் இயந்திரத்தை உஸ்மானிய கிலாபத்திற்குள் பேரரசர் அனுமதிக்கவில்லை.
இதுபோன்று புத்தகங்களை நகல் எடுத்து எழுதுபவர்கள் தங்கள் தொழிலுக்கு ஆபத்து வந்துவிடும் என்று கருதி ஒரு பொய்யான தகவலை பரப்பினார்கள்.
அச்சிடும் இயந்திரத்தில் மையை ஊற்றி அச்சிடுவார்கள். மீண்டும் அடுத்த முறை அச்சிடும்போது காய்ந்த மையை சுரண்டி எடுத்துவிட்டு புதிய மையை ஊற்ற வேண்டும். அப்போதுதான் அச்சு தெளிவாக இருக்கும்.
ஆகவே காய்ந்த பழைய மையை சுரண்டி எடுக்க பன்றியின் சொரசொரப்பான தோல்களை பயன்படுத்துவதாக ஒரு செய்தியை பரப்பினார்கள்.
ஆகவே இதனை உலமாக்கள் முஸ்லீம்கள் பயன் படுத்தக்கூடாது என்று உத்தரவிட்டார்கள்.
இதனையறிந்த பேரரசரும் தகவல் உண்மையா பொய்யா என விசாரிக்காமல் இந்த அச்சு இயந்திரத்தை உஸ்மானிய பேரரசில் பயன்படுத்த தடை விதித்தார்.
இதனால் இஸ்லாமிய நூல்களும், அறிவுப் பொக்கிஷங்களும் பிற இடங்களுக்கும் மக்களுக்கு பரவலாக கிடைப்பதிலும் சுணக்கம் ஏற்பட்டது.
இந்த அச்சிடும் இயந்திரத்தை பற்றி அறிந்த பல அறிஞர்கள் இதனை உஸ்மானிய பேரரசில் பயன்படுத்த அனுமதி கோரினர்.
ஆனால் இது சாத்தானின் கண்டுபிடிப்பு என புரளிகளை உருவாக்கி இதனை வராமல் தடை செய்தனர்.
கி.பி.1495 ஆம் ஆண்டு ஒரு யூதர் இஸ்தான்ஃபுல் நகருக்கு அச்சு எந்திரம் ஒன்றை கொண்டு வந்தார்.
பேரரசரிடம் நேரடியாக இதன் நன்மைகளை விளக்கிய பிறகு முஸ்லீம் அல்லாதவர்கள் இந்த இயந்திரத்தை பயன் படுத்தி கொள்ள பேரரசர் அனுமதி அளித்தார்.
இஸ்லாமிய நூல்களை இந்த இயந்திரத்தில் அச்சடிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டார்.
தமிழகத்தின் தரங்கம்பாடியில் கி.பி1600 ஆம் ஆண்டே போர்த்துகீசியர்கள் அச்சு இயந்திரங்களை நிறுவி பைபிள்களை அச்சடித்தார்கள்.
தாமதமாக கி.பி 1734 ஆம்ஆண்டு உஸ்மானிய பேரரசில் இந்த அச்சு இயந்திரங்களை முஸ்லீம்கள் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.
காலதாமதமாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால் இது பெரிய தாக்கங்களை ஏற்படுத்தவில்லை.
வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!
You must be logged in to post a comment.