Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி -2

கப்ளிசேட்

அப்பாஸிய பேரரசு-5

(கி.பி 750-1258)

அரண்மனையின் பாதுகாப்பு வளையங்களை மீறி அம்பு எய்த அந்த வீரனை பாதுகாப்பு படை வீரர்கள் சுற்றி வளைத்தனர்.

நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட போராட்டங்கள், கிளர்ச்சிகளை மன்னரின் அப்பாஸிய படை வீரர்கள் சிறப்பாக கையாண்டு அடக்கினர்.

அந்த கிளர்ச்சி கும்பலை சேர்ந்தவனாக இந்த வீரன் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்தனர்.

அலவி குடும்பத்தை சேர்ந்த யஹ்யா இப்னு அப்துல்லாஹ் தைலமி என்பவர் குராசான் பகுதியின் மன்னராக தன்னை அறிவித்துக் கொண்டார். பதுல் இப்னு யஹ்யா தலைமையில் சென்ற படை இவர்களை வெற்றி கொண்டது.

சிரியா பிரதேசத்தில் வட மற்றும் தென் அரபிக்கோத்திரங்கள் இடையே சண்டைகள் நடந்தன.

வட ஆப்பிரிக்காவில் பெர்பர்கள், குவாரிஜுகள் கிளர்ச்சி செய்தனர். வலீத் இப்னு துரைப் தலைமையில் சென்ற படை இவர்களை அடக்கியது.

பைசாந்தியர்கள் கிளர்ச்சி செய்தனர். அவர்களும் அடுக்கப்பட்டு அவர்களோடு அமைதி ஒப்பந்தம் போடப்பட்டது.

அம்பு எய்த வீரனை அப்பாஸிய நீதிமன்றத்தில் நிறுத்தி விசாரணை நடைபெற்றது.

விசாரணையில் அவன் பைசாந்திய வீரன் என்பதும் அமைதி ஒப்பந்தம் பிடிக்காததால் ஒரு கல்வித்துறையின் பேராசிரியர் உடையில் அரண்மனைக்குள் ஊடுறுவி மன்னரை நோக்கி அம்பு எய்து கொல்ல முயற்சித்ததை தயங்காமல் ஒப்புக்கொண்டான்.

பாதுகாப்பு ஏற்பாடுகளிலுள்ள குறைபாடுகள் களையப்பட்டது. மேலும் சில உள்வட்ட வளையங்கள் ஏற்படுத்தப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

“தாருல் ஹிக்மா” என்று இருந்த சர்வகலாசாலையை மேலும் மெருகூட்டி, “பைத்துல் ஹிக்மா” என்று பெயர் சூட்டினார். இது உலகின் மிகச்சிறந்த கல்விச்சாலையாக விளங்கியது.

மன்னர் ஹாரூன் அர்ரஷீத் அவர்களின் அவையில் நகைச்சுவை நாயகராக அபூநவாஸ், ஜிப்ரில்பின் பக்திசு சிறந்த வைத்தியராகவும், வாஹிதி வரலாற்று ஆசிரியராகவும், விளங்கினார்கள்.

அல் அதாயி சிறந்த கவிஞராகவும், சிந்தனை யாளராகவும், அல்மயி சிறந்த இலக்கிய வாதியாகவும், அபூ யூசுப் காஜியாகவும், சுப்யானுத்தௌரி அவர்கள் சிறந்த மார்க்க அறிஞராகவும் விளங்கினார்கள்.

இவர்கள் அரசவையை அலங்கரித்ததோடு பைத்துல் ஹிக்மாவிலும் பணியாற்றினார்கள்.

கலைகளின் வளர்ச்சியிலும், கல்வியின் வளர்ச்சியிலும் அதிக ஈடுபாட்டோடு இருந்த மன்னர் அவர்கள், ஏராளமான பரிசுகளை இவர்களுக்கு வழங்கினார்.

பைத்துல் ஹிக்மா பல்கலைகழகத்தில் சட்டக்கலை, இலக்கியம்,இசை, விஞ்ஞானம், மருத்துவம், தத்துவம், மொழிபெயர்ப்பு என பல துறை கல்விகள் கற்பிக்கப்பட்டது.

கல்வித்துறையின் பொற்காலம் என இந்த காலம் மக்களால் புகழப்பட்டது.

மன்னரின் நிர்வாகக் கட்டமைப்பு மிகச்சிறப்பாக இருந்தது. தபால் சேவை, ஒற்றர் படை உருவாக்கம்,ஞ விவசாயம், பல்தொழில்கள், கைத்தொழில்கள் செழிப்பாக இருந்தன.

பாதைகள், பாலங்கள் கால்வாய்கள் , மருத்துவமனைகள், உடல் ஊனம் உற்றவர்களுக்கு பாதுகாப்பு இல்லங்கள்,பல மஸ்ஜிதுகள், மதரசாக்கள் என சிறப்பான கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன.

இவருடைய ஆட்சியில் நாடு சமாதானத்தோடும் அமைதியோடும் திகழ்ந்தது.

மன்னர் தனது அடுத்த வாரிசுகளாக அமீன், மஃமூன்,முஹ்தஸின் ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக மன்னராக ஆகவேண்டும் என்று இவர்களை இந்த வரிசையில் இளவரசர்களாக அறிவித்தார்.

மன்னர் எப்போதும் இரவு நேரங்களில் மாறுவேடம் பூண்டு நாட்டை சுற்றி வருவார்.அப்போது ஒரு வீட்டிலிருந்து வந்த அழுகுரல் மன்னரின் மனதை ஏதோ செய்தது. அந்த வீட்டினுள் மன்னர் நுழைந்தார்.

வரலாறு படைக்க வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com