Home செய்திகள் இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

by Askar

இஸ்லாமிய சிம்மாசனங்கள்..!

பகுதி-1

கப்ளிசேட்

உமைய்யாக்களின் பேரரரசு-18 (கி.பி 661-750)

அலி(ரலி) அவர்கள் காலத்தில் இஸ்லாமிய அரசு இரண்டாக உடைந்தது.

சிரியாவையும் அதனை சுற்றியுள்ள பகுதிகளையும் முஆவியா (ரலி) அவர்கள் ஆட்சி செய்தார்கள்.

அலி (ரலி )அவர்கள் முஸ்லீம் உலகின் பெரும் நிலப்பரப்பின் கலீபாவாக இருந்தார்கள். ஆரம்பத்தில் மதினாவே தலைநகராக இருந்தது.

பிறகு நிர்வாக மற்றும் அரசியல் காரணங்களுக்காக தலைநகரை கூபா‌விற்கு (இன்றைய ஈராக் பகுதி) மாற்றினார்கள்.

அலி (ரலி )அவர்கள் கூபாவிலேயே காரிஜியாக்களால் (உஸ்மான் ரலி அவர்களை கொன்றவர்களை பழிவாங்கவேண்டும் என்று உருவான குழப்பவாதிகளின் ஒரு பிரிவு) கொல்லப்பட்டார்கள்.

அவர்களுக்கு பிறகு மக்களின் ஆதரவாலும் வற்புறுத்தலாலும் ஹஸன் (ரலி) அவர்கள் கலீபாவாக பொறுப்பேற்றுக் கொண்டார்கள்.

முஸ்லீம் பேரரசில் இரண்டு ஆட்சியாளர்கள் வேண்டாம் என்றும் உம்மத்தின் ஒற்றுமையே முக்கியம் எனக் கருதிய அவர்கள் எட்டுமாத ஆட்சிக்குப் பிறகு ஆட்சியை முஆவியா (ரலி) அவர்களிடமே ஒப்படைக்க முடிவு செய்து கூபா மக்களிடம் கருத்துக்கேட்க அந்த அம்மக்கள் அதனை ஏற்கவில்லை.

இதன் உட்சகட்டமாக ஹஸன் (ரலி) அவர்கள் ஒட்டகத்தில் அமர்ந்து வந்தபோது கூபா வாசி ஒருவன் அவர்களின் தொடைப்பகுதியை கோடாரியால் வெட்டினான்.

இருப்பினும் முஸ்லீம் சமூகத்தின் ஒற்றுமை கருதி,முஆவியா( ரலி) மரணத்திற்கு பிறகு ஆட்சியை தன்னிடமோ அல்லது தனது தம்பி ஹுசைன் (ரலி) அவர்களிடமோ ஒப்படைத்து விடவேண்டும் என்று‌ ஒப்பந்தம் போடப்பட்டு அதை முஆவியா (ரலி) அவர்களும் ஏற்றுக் கொண்டார்கள். அவர்களின் ஆட்சியை முஆவியா (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள்.

அதன்பிறகு ஹஸன்(ரலி)அவர்கள் கூபாவை விட்டு மதினா வந்து அங்கு அமைதியான வாழ்க்கை வாழ்ந்தார்கள்.

உமைய்யா அதிகாரிகளால் தூண்டப்பட்ட அவர்களின் மனைவி ஜஹ்தா அவர்களே அவர்களுக்கு விஷம் கொடுத்ததால், அதன் பாதிப்பால் 44 அல்லது 49 வயதிலேயே மரணமும் அடைந்தார்கள்.

விஷம் கொடுத்தது யார் என்பதை அவர்கள் யாரிடமும் தம்பி ஹுசைன் (ரலி) அவர்களிடம் கூட சொல்லவில்லை.

ஹசன் (ரலி )அவர்கள் முஆவியா (ரலி) அவர்களிடம் செய்த ஒப்பந்தப்படி ஆட்சி கிடைப்பதற்கு முன்பே மரணமடைந்து விட்டார்கள்.

முஆவியா (ரலி) அவர்களின் ஆட்சியில் ஏறக்குறைய எல்லா முக்கிய பொறுப்புகளிலும் உமைய்யா பரம்பரையினர் பணியில் இருந்தனர்.

இஸ்லாமிய பேரரசு இன்று இருக்கிற 45 நாடுகளை உள்ளடக்கிய மிகப்பெரிய வல்லரசாக இருந்தது.

இஸ்லாமிய பேரரசின் மிகப்பெரிய கட்டமைப்பை நினைத்து தனக்கு பிறகு பேரரசு சிதறாமல் இருக்கவேண்டுமே என்று கவலைப்பட்டார்கள்.

ஹஸன் (ரலி) அவர்கள் மரணித்தபிறகு தனக்கு பிறகான ஆட்சியாளரை அறிவிக்க முஆவியா (ரலி) அவர்கள் நினைக்கிறார்கள்.

முகைரா(ரலி) அம்ருஇப்னு ஆஸ்(ரலி) போன்ற மூத்த தோழர்களின் வலியுறுத்தல் மற்றும் ஆலோசனைக்கு பிறகே தனது மகன் யஜீதை அடுத்த வாரிசாக அறிவித்தார்கள்.

இறைவனிடம், எனது மகனின் தேர்வு இஸ்லாமிய பேரரசிற்கு பொருத்தம் எனில் அரசை யஜீதிற்கு நிலை பெறச் செய்வாயாக! இல்லையெனில் அவரிடமிருந்து அரசை தகுதியானவர் இடம் ஒப்படைப்பாயாக! என்று பிரார்த்தனை செய்தார்கள்.

யஜீதின் ஆட்சியில் ஏற்பட்ட குழப்பங்களும், பிரிவினைகளும், இழப்புகளும் குறிப்பாக மூன்று நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றின் கருப்புப் பக்கங்கள். அந்த நிகழ்வுகளை ஆராய்வோம்.

வரலாறு படைக்க‌ வரலாற்றை தொடர்ந்து வாசிப்போம்..!

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!