17-வது ஐ.பி.எல். சீசன் கடந்த 22-ம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று ஜெய்ப்பூரில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , பட்லர் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் ஜெய்ஸ்வால் 5 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். பின்னர் வந்த சாம்சன் 15 ரன்களுக்கு வெளியேறினார். தொடர்ந்து பட்லர் 11 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
பின்னர் ரியான் பராக் , அஸ்வின் இருவரும் இணைந்து சிறப்பாக ஆடினர். அதிரடியாக ஆடிய அஸ்வின் 29 ரன்களுக்கு வெளியேறினார் . மறுபுறம் அதிரடி காட்டிய ரியான் பராக் அரைசதமடித்து அசத்தினார். 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு ராஜஸ்தான் அணி185 ரன்கள் எடுத்தது. ரியான் பராக் 45 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார்.தொடர்ந்து 186 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி விளையாடியது.
தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் டேவிட் வார்னர் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் ஆரம்பம் முதலே அதிரடியில் களமிறங்கினர். இதில் மிட்செல் மார்ஷ் 12 பந்துகளில் 23 ரன்கள் அடித்த நிலையில் பர்கர் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய ரிக்கி புய் சந்தித்த 2-வது பந்திலேயே டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
பின்னர் வார்னருடன் கேப்டன் பண்ட் கை கோர்த்தார். இருவரும் இணைந்து அணியை மீட்க போராடினர். அரைசதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட வார்னர் 49 ரன்களில் ஆட்டமிழந்தார். வார்னர் ஆட்டமிழந்த சிறிது நேரத்திலேயே ரிஷம் பண்டும் அவுட்டானார். அதோடு டெல்லி அணியின் நம்பிக்கையும் தகர்ந்தது.
இறுதி கட்டத்தில் ஸ்டப்ஸ் அதிரடியாக விளையாடினார். கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. ஆனால் அந்த ஓவரை வீசிய ஆவேஷ் கான் வெறும் 4 ரன்கள் மட்டுமே கொடுத்தார். டெல்லி நிர்ணயிக்கப்பட்ட 20 ஒவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் டெல்லி அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய ராஜஸ்தான் திரில் வெற்றியை பதிவு செய்தது.
டெல்லி அணி தரப்பில் அதிகபட்சமாக வார்னர் 49 ரன்களும், ஸ்டப்ஸ் 44 ரன்களும் அடித்தனர். ராஜஸ்தான் தரப்பில் பர்கர் மற்றும் சாஹல் தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தினர். நடப்பு ஐ.பி.எல். தொடரில் இதுவரை 2 போட்டிகளில் விளையாடி உள்ள ராஜஸ்தான் இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.
You must be logged in to post a comment.