Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், மேலப்பெருங்கரையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணி: ஆட்சியர் ஆய்வு..

பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், மேலப்பெருங்கரையில் காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணி: ஆட்சியர் ஆய்வு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், ஜன.11-

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஊராட்சி ஒன்றியம், மேலப்பெருங்கரையில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருவதை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் செய்தியாளர் பயணத்தின்போது பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இச்சுற்றுப்பயணத்தின்போது, பரமக்குடி, ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை மேலப்பெருங்கரைப் பகுதியில் இரும்பு குழாய் பதிக்கும் பணியை பார்வையிட்டு பணியின் தன்மை குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். இதைதொடர்ந்து செய்யாமங்கலம், அச்சங்குளம் பகுதியில் புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கான மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டும் பணி, கட்டுமான பொருள்கள் பாதுகாப்பு தன்மையை உறுதிப்படுத்தி பயன்படுத்தும் வகையிலான சேமிப்பு கிடங்கு ஆகியவற்றை பார்வையிட்டார். ராமநாதபுரம் மாவட்டத்திற்கு புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் மூலம் செயல்படுத்த அரசு உத்தரவிட்டு இதற்கான பணிகள் கரூர் மாவட்டம், நஞ்சை புகழூரிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்திற்கு தனி திட்டமாக ரூ.2819.78 கோடி மதிப்பில் பணிகள் துவங்கப்பட்டுள்ளன.

இத்திட்டம் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் 2 நகராட்சிகள், 5 பேரூராட்சிகள், 11 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 2,306 ஊரக குடியிருப்புகள் பயன்பெறும் வகையில் இப்புதிய காவிரி கூட்டு குடிநீர் திட்டம் பயன்பெற உள்ளன. இத்திட்டத்தில் 3 கட்டப்பணிகளாக துவங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 804 மேல்நிலை நீர் தேக்கத்தொட்டிகள் அமைய உள்ளன. இத்திட்டத்தில் நேரடியாக காவிரியிலிருந்து குடிநீர் எடுத்துவரப்பட்டு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன. பிரதான வழியில் 150 கிமீ தூரம் இரும்பு குழாய் பொருத்தும் பணி, 450 கிமீ தூரம் வெளிப்புற பிளாஸ்டிக் குழாய் பொருத்தும் பணி, 20 ஆயிரம் கிமீ தூரம் உயர்ரக விரைப்பு தன்மை குழாய் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

இம்மூன்று கட்ட பணிகளும் இதுவரை 30 முதல் 32 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது. இப்பணிகள் 2024 செப்டம்பருக்குள் முடிக்க காலம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கேற்ப பணிகளை திட்டமிட்டபடி விரைந்து மேற்கொள்ளவும், பணிகளை சரியான முறையில் மேற்கொள்ள அலுவலர்கள் உறுதுணையாக இருந்து கண்காணிக்க வேண்டுமென தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் அறிவுறுத்தினார். தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர்கள் மகாலிங்கம், பாலகிருஷ்ணன், உதவி செயற்பொறியாளர்கள் ராம்குமார், முத்துகிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் ராஜ்குமார், குமரேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com