Home செய்திகள் குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து 16 பேர் உயிரிழந்த நூறாண்டு நினைவு தினம் :தலைவர்கள் அஞ்சலி . உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் -மறைக்கப்பட்ட வரலாறு .

குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து 16 பேர் உயிரிழந்த நூறாண்டு நினைவு தினம் :தலைவர்கள் அஞ்சலி . உசிலம்பட்டி அருகே உள்ள பெருங்காமநல்லூர் -மறைக்கப்பட்ட வரலாறு .

by ஆசிரியர்
சுட்டு வீழ்த்தப்படுவோம் என்று தெரிந்தே அச்சட்டத்திற்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக எதிர்த்து நின்ற வீரத் தியாகிகள் நினைவு தூணுக்கு  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டெல்லி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத், அமைச்சர் செல்லூர் ராஜு, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,  உசிலம்பட்டி எம்எல்.ஏ. பா.நீதிபதி  உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி  தலைவர்கள் அஞ்சலி
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெருங்காமநல்லூரைச் சேர்ந்த மக்கள் குற்றப் பரம்பரைச்  சட்டத்தை எதிர்த்து போராடி 16 பேர் உயிரிழந்த தினம் கடந்த (03.04.2019) மூன்றாம் தேதியுடன்  நூறு ஆண்டுகள் ஆகிறது. ஒரு மனிதனின் வாழ்நிலையை அவனது பிறப்பு தான் தீர்மானிக்கும் என்று மனுதர்ம சட்டம் கூறுகிறது. அதே கருத்தைத்தான் பிரிட்டானியர் ஆட்சிக்காலத்தில் கொண்டுவரப்பட்ட குற்றப்பரம்பரைச் சட்டம் கூறுகிறது.
பத்தொன்பதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற மேற்கத்திய நாடுகளில் சுரண்டலுக்கு  எதிராகவும், சமூக-பொருளாதார மாற்றத்திற்காகவும் கலகங்கள் வெடித்தன. பிரெஞ்சு புரட்சியால் உத்வேகமடைந்த மக்களை கண்டு நடுங்கிய மேலைய  வல்லரசுகள் முதலில் சுதந்திரமான வாழ்வியலைக் கொண்ட நாடோடி இனத்தவர்களை கட்டுக்குள் கொண்டுவர விரும்பினார். அதன்பொருட்டு அம்மக்களை சமூக வாழ்விற்கு அன்னியமானவர்கள் என்று கூறி பல்வேறு அடக்குமுறை சட்டங்களை கொண்டு வந்தனர். இந்திய துணைக்கண்டத்தை கைப்பற்றிய பிரிட்டானிய அரசு அதே வழியில் தன் ஆதிக்கத்திற்கு பணியாத  மக்களை காட்டுமிராண்டிகள்,  நாகரீகமற்றவர்கள், படிப்பறிவற்றவர்கள் என்றெல்லாம் முதலில் இழிவு படுத்த தொடங்கியது. பின்னர் அம்மக்கள் மீது பல்வேறு அடக்குமுறை சட்டங்களை ஏவியது.  அந்த  சட்டங்களில் ஒன்றுதான் கைரேகை சட்டம் எனப்படும் குற்றப்பழங்குடிகள் சட்டம் ஆகும்.
பக்கத்து ஊருக்கு செல்வதாக இருந்தால் கூட “நதாரி சீட்டு” எனப்படும் நடமாடும் சீட்டு பெற வேண்டும். விதிகளை மீறுவோருக்கு 6 மாதம் முதல் 3 ஆண்டுகள் வரை தண்டனை உண்டு. 1871 ஆம் ஆண்டு பிரிட்டானிய அரசு கொண்டு வந்த சட்டத்தில் வீடிழந்தோர், குறி சொல்வோர், பாலியல் தொழிலில் ஈடுபடுவோர், பிச்சைக்காரர்கள், நாடோடிகள்,  அரவாணிகள் ஆகியோர் தண்டிக்கத்  தகுதி படைத்தவர்கள் என்று கூறப்பட்டது. பின்னர் மேலும் பல்வேறு திருத்தங்களை அச்சட்டத்தில் கொண்டு வந்து தமிழ்நாடு,  மகாராஷ்டிரா,  மத்திய பிரதேசம்,  பஞ்சாப்,  வங்காளம் ஆகிய மாநிலங்களில் 200க்கும் மேற்பட்ட சாதியினர் குற்றப் பரம்பரையினர் என அறிவிக்கப்பட்டது. தொம்பர்,  சேலம் மேல்நாட்டு குறவர், வெள்ளையங்குப்பம் படையாட்சி, பிரமலை கள்ளர், மறவர்,  அகமுடையார் ஆகிய சாதிகள்  இச்சட்டத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஆங்கிலேயர்களின் அடக்குமுறை சட்டமான  கைரேகை  சட்டத்தை எதிர்த்து உயிர்த் தியாகம்  செய்த பெருங்காமநல்லூர் வீரத் தியாகிகளின் 100வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று அஞ்சலி செலுத்தப் பட்டது. தென்னக ஜாலியன் வாலாபாக் என பதிவு செய்யப் படுகிற பெருங்காமநல்லூர் புரட்சி நடை பெற்று இன்றோடு நூறாவது ஆண்டு தொடங்குகிறது.  1920-ல்  ஏப்ரல் – 3 இதே நாளில் அதிகாலையில் பெருங்காமநல்லூர் என்ற கிராமம் ஒட்டுமொத்தமாக கிளர்ந்து எழுந்து அடக்குமுறைக்கு எதிராக, அதிகாரத்திற்கு எதிராக தன் குரலை பதிவு செய்து 16 தமிழர்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட தினம் இன்று.   ஒட்டு மொத்த கிராமமும் கிளர்ந்து எழ வேண்டிய காரணம் என்ன?  சிக்கல் என்ன? என்று வரலாற்றை திரும்பி பார்க்கும் போது  ஒரு சட்டம்… ஒரே ஒரு சட்டம்…. குற்றப்பரம்பரை சட்டம் .
1860இல் கள்ள நாணயம் தயாரிப்பவர்களை ஒடுக்குவதற்காக இயற்றப்பட்ட சட்டம்.  பின்னாளில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்க்கின்ற பழங்குடி சமூகங்களை  எல்லாம் பழி வாங்குவதற்கு வசதியாக திருத்தப்பட்ட சட்டம்.  1920 களில் ஏவப்படுகிறது இச்சட்டம்.  இந்தியா முழுவதும் ஆங்கிலேயர்களை எதிர்க்கிற  சமூகத்தின் மீது ஏவப்படுவதற்கு வசதியாக 1911-ல் இந்தியா முழுவதும் விரிவுபடுத்தப்படுகிறது.  1913-ல் சென்னை மதராஸில் அமல் படுத்தப்படுகிறது. இந்த சட்டம் சொல்லுகிற 5 ஷரத்துக்கள் மிகவும் ஆபத்தானது. மாவட்ட தலைவர் எந்த ஒரு சமூகத்தையும் குற்றப் பரம்பரையினர் என்று அறிவிக்கலாம். நீதிமன்றம் கூட தலையிட முடியாது.அந்த சமூகத்தில் குற்றவாளி, நிரபராதி என்ற பாகுபாடு இல்லாமல் அந்த சமூகத்தில் பிறந்த அனைவரும் குற்றவாளிகளே என்கிறது இந்த சட்டம்.
18 வயது நிரம்பிய அனைவரும் குற்றவாளிகள் என  காவல் நிலையத்தில் பெயர் முகவரி அனைத்தும் பதிவு செய்ய வேண்டும்.  அந்த சமூகத்தில் பிறந்த ஆண்கள் மாலை 6 மணியிலிருந்து அடுத்த நாள் காலை 6 மணி வரை வீடுகளில் தங்க கூடாது. திருமணம் ஆனவராக  இருப்பினும்,  நோயாளியாக இருந்தாலும்  எந்த விதிவிலக்கும் இல்லாமல்  காவல் நிலைய வளாகத்தில் தங்க வேண்டும். எந்த விசாரணையும், எந்த கருத்தும்,  எந்த எதிர் கருத்தும் ஏற்றுக் கொள்ளப்படாமல்  கைது செய்வதற்கான வசதிகளை இச்சட்டம் செய்கிறது .
தீப்பெட்டி வைத்திருந்ததற்காக, ஒரே ஒரு கத்தரிக்கோல் வைத்திருந்ததற்காக,  கைது செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்ததுண்டு. இச்சட்டம் அமல்படுத்தப்பட்ட  பிறகு , அன்பு என்ற தாசில்தாரின் தலைமையில்  ஒரு காவல் படை ஒட்டுமொத்தமாக இந்த பிறமலைக் கள்ளர் சமூகத்தை குற்றவாளிகள்,  குற்றப் பரம்பரையினர் என அறிவித்துவிட்டு அந்த சமூக மக்கள் வாழ்கின்ற ஒவ்வொரு கிராமமாக சென்று இந்த சட்டத்தை அமுல் படுத்தி,  அவர்களை குற்றவாளிகளாகவே பதிவு செய்து வந்தார்கள். 1920 இதே ஏப்ரல்-3 ஆம் நாள் அதிகாலையில் பெருங்காமநல்லூரை நோக்கி பெரிய காவல் படையோடு தாசில்தார் தலைமையில் ஒரு கூட்டம் செல்கிறது.  அதை எதிர்த்து பெருங்காமநல்லூர் பொது மக்கள் கிளர்ந்து எழுகிறார்கள்.
நாட்டு பெரியவர்கள் ஒன்று திரண்டனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டது.  பக்கத்து ஊர்க்காரர்களுக்கு தகவல் சொல்லப்பட்டது. காளப்பன் பட்டி, குமரம்பட்டி, போத்தம்பட்டி ஊர்களிலும் ஜனங்கள் தயாராகினர். பெருங்காமநல்லூர் மக்களுக்கு ஆபத்தான நிலை ஏற்படுமானால் “படாங்கு”  வேட்டுச்சத்தம் வெடிக்கப்படும். வேட்டு சத்தம் கேட்டவுடன் பக்கத்து ஊர்க்காரர்கள் விரைந்து வந்து உதவ ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நாயக்கமார்கள், செட்டியார்கள், பிள்ளைமார்கள்,  முதலியார்கள் போன்ற இதர சமூகத்தினரும் ஆதரவாக இருந்தனர்.
வீரன் விட்டி பெருமாள் தேவர் சிலம்பக் கலைஞர்களை ஒன்று திரட்டினார். இளைஞர்கள் ஆர்ப்பரித்து எழுந்தனர். பெருங்காமநல்லூர் ஒரு யுத்தத்திற்கு தயாரானது.  அதிகாரிகள் ஊர் மந்தையில் குவிந்தனர். ஆண் பெண் அனைவரும் மந்தையை நோக்கி திரண்டனர்.  ஒரே கூட்டம்!  கூச்சல். கோபாவேசத்தோடு ஜனக்கூட்டம்.  ஆயுதப்படை கிராமத்தை சுற்றி முற்றுகை போட்டது.  கட்டுக்கடங்காத கூட்டம். செம்புழுதி  பறக்க நாலாபக்கமும்  ஓடவும், ஆடவும், விசிலடிக்கவும்,  சிலம்பம் சுற்றவுமாக இளைஞர்கள். மக்கள் கூட்டம் பெருகிக்கொண்டே போனது.
ரேகையை பதிவதற்கு போலீஸ் சிலரை பிடித்தனர். மக்கள் போலீசார் மீது பாய்ந்து ஆட்களை மீட்க முனைந்தனர்.  அரசுக்கு எதிரான சதியில் ஈடுபடுகிறோமா?  கொலை, கொள்ளை போன்ற பாதகச் செயல்களில் ஈடுபடுகிறோமா?  இப்படி எதுவுமே இல்லாமல் அனைவரும் குற்றவாளிகள் என்று சொல்வது எங்கள் சமுதாயத்தின் தன்மான பிரச்சனை. அதை விட்டுத் தர முடியாது என்று மக்கள் எதிர்த்து நின்றார்கள்.  எதிர்த்து நின்றவர்களை  கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்த ஆணையிடுகிறார் உசிலம்பட்டி டெபுடி தாசில்தார் ஜான் அன்பு நாடார்.  சர்க்கிள் இன்ஸ்பெக்டர் ராஜு பிள்ளையும், சப்இன்ஸ்பெக்டர் சீனிவாச நாயுடுவும், போலீஸ் பட்டாளமும் சரமாரியாக சுட்டது.
அடுத்த கணமே போராடுபவர்களுக்கு தண்ணீர் கொடுத்த மாயக்காள் என்ற பெண் உட்பட சுட்டு வீழ்த்தப்பட்டு சம்பவ இடத்திலேயே பதினொரு பேர் உயிரிழக்கிறார்கள். 5 பேர் மருத்துவமனையில் உயிர் இழக்கிறார்கள்.  ஒட்டு மொத்தமாக 16 பேர் சுட்டு வீழ்த்தப்பட்ட தினம் ஏப்ரல் 3. காவல்துறையின் ரத்த வெறியோ அடங்க மறுத்தது.  மேலும் 200க்கும் மேற்பட்டோரை கைது செய்தது.  கையிலும்,  காலிலும் சங்கிலி பிணைத்ததோடு,0 நீரும் உணவும்  தரமறுத்து  20 கிலோமீட்டர்  தொலைவில்   உள்ள திருமங்கலம் நீதிமன்றத்திற்கு ஆடு மாடுகளை ஓட்டிச் செல்வது போல கால்நடையாகவே  அழைத்துச் சென்றது.
ரௌலத் சட்டத்திற்கும் இதற்கும் என்ன தொடர்பு என்றால் ரௌலத் சட்டமும் இதே விதிமுறைகளை கொண்டதுதான். அதிகாரிகளுக்கு எதிராக, அரசுக்கு எதிராக  கிளர்ச்சி செய்பவர்கள் மீது பதியப்படும் சட்டம்தான் ரௌலத்  சட்டம். சுடப்படுவோம்  என்று தெரியாமல் இந்த  சட்டத்திற்கு  எதிராக பம்பாயில்  ஜாலியன் வாலாபாக் என்ற மைதானத்தில் நடந்த கண்டன பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டார்கள். ஆனால், பெருங்காமநல்லூரில் கூடியவர்கள் சுட்டு வீழ்த்தப்படுவோம் என்று தெரிந்தே அச்சட்டத்திற்கு எதிராக, அடக்குமுறைக்கு எதிராக எதிர்த்து நின்றார்கள்.  ஆனால் வரலாறு பெருங்காமநல்லூர் கலவரம் என்றே பதிவு செய்கிறது. இது வரலாற்றின் பிழை. சிப்பாய் கலகம் என்று தமிழகம் முழுக்க ஆங்கிலேயருக்கு எதிராக எழுகின்ற எல்லா புரட்சிகளையும் பெரும் கலகமாக கலவரக்காரர்களாக பதிவு செய்தது வரலாற்றுப் பிழை.  இது ஒரு புரட்சி.  பெருங்காமநல்லூர் புரட்சி விதைக்கப்பட்ட தினம் 1920 ஏப்ரல் 3.  விடுதலை வீரர் ஜார்ஜ் ஜோசப், பசும்பொன் முத்துராமலிங்க தேவர், செய்யூர் ஆதிதிராவிடர் ராஜகோபால், வி.ஐ. முனியசாமி பிள்ளை ஆகியோர் கடும் போராட்டம் நடத்தினர்.
1946 ஆம் ஆண்டு மே 30ஆம் நாள் பேராயக் கட்சி ஆட்சி காலத்தில் சுப்பராயன் அவர்கள் கொண்டு வந்த  தீர்மானத்தின் மூலம்   இந்த சட்டம் அடியோடு நீக்கப்பட்டது.  பெருங்காமநல்லூர் கிராமத்தில் உயிர் நீத்த 16 பேர்களின் பெயர் தாங்கிய நினைவுத்தூண்  எழுப்பப்பட்டுள்ளது. அடுத்த தலைமுறைக்கு பெருங்காமநல்லூர் அடையாளப்படுத்துவோம்.
இந்த நாள் பெருங்காமநல்லூர் வீரத் தியாகிகள் நினைவு நாள் என ஒவ்வொரு வருடமும் அனுசரிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும்  ஏப்ரல் 3ஆம்  தேதி உயிர்த் தியாகம்  செய்தவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில்  பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வீர வணக்கம் செலுத்துவது வழக்கம்.  இந்த ஆண்டு இந்நிகழ்ச்சியில் தமிழக அரசின்  சார்பாக  துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், டெல்லி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத், அமைச்சர் செல்லூர் ராஜு, அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்,  அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்,  உசிலம்பட்டி எம்எல்.ஏ. பாநீதிபதி ஆகியோர் தியாகிகள் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை      செலுத்தப்பட்டது.
பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் நலச்சங்கம்  சார்பாக பால்குடம் எடுக்கப்பட்டது. தேங்காய், பழம் உடைத்து குலதெய்வம் போல வழிபாடு செய்தனர்.  பெருங்காமநல்லூர் அரசு கள்ளர் தொடக்கப்பள்ளி,  அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி,  அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.
பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் மகளிர் நல சங்க அனைத்து கட்சியை சேர்ந்த  50க்கும்  மேற்பட்ட பெண்கள் ஒரே கலரில்,  ஒரே மாதிரி உடை அணிந்து  விநாயகர் கோவிலில்  இருந்து  ஊர்வலமாக ஆரம்பித்து  தியாகிகள் இறந்த நினைவிடத்தில் தேங்காய் உடைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பெருங்காமநல்லூர் வீரமங்கை மாயக்காள் சங்கத்தை சேர்ந்த தலைவி செல்வ பிரித்தா, துணைத் தலைவி ராஜாமணி ஆகியோர் கூறுகையில் பெருங்காமநல்லூர்  தியாகிகள் நூற்றாண்டை முன்னிட்டு மணி மண்டபம் கட்டுவதாக 8.3.2019 அன்று முதலமைச்சர் அறிவித்து இருந்தார். அதை உடனடியாக செயல்படுத்த வேண்டும். துப்பாக்கி  சூடு  நடந்த இடத்தில் மிகப்பெரிய அளவில் நூலகம், அருங்காட்சியகம்,  கார் பார்க்கிங் வசதியுடன் கூடிய  மணிமண்டபம் கட்டித்  தரவேண்டும்.  1920 ஏப்ரல் 3-ம் தேதி வரலாற்று பக்கங்கள் செங்குருதியால் எழுதப்பட்ட நாள்.  ஜனங்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டனர்.  குற்றப்பரம்பரை சட்டத்தை எதிர்த்து வெள்ளையர்களுக்கு எதிராக முதன் முதலில் சுதந்திரப் போராட்டத்தை துவக்கி வைத்தவர்கள் பெருங்காமநல்லூர் மக்கள்.  ஏழை எளிய மக்களை ஒன்று திரட்டி  மாபெரும் போராட்டங்களை நடத்தி அடிமை விலங்கை உடைத்து நொறுக்கினார் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர்.
குற்றப்பரம்பரைச் சட்டத்தை எதிர்த்த  போராட்டத்தை மாணவர்களுக்கு  பள்ளி பாடத்திட்டத்தில்  சேர்க்க வேண்டும்.  ஆங்கிலேயர் காலத்தில்  பெருங்காமநல்லூரில் கட்டப்பட்ட கள்ளர் கல்விக் கழகம் பழமை மாறாமல்  நினைவுச் சின்னமாக மாற்றப்படவேண்டும். வீர மங்கை மாதர் சங்கத்தைச் சேர்ந்த தலைவி செல்வ  ப்ரித்தா, துணைத் தலைவி ராஜாமணி ஆகியோர் தமிழக அரசுக்கு இவ்வாறு கோரிக்கை வைத்தனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com