கீழக்கரை மேலத் தெருவில் மீண்டும் சுடர் விடும் ஹைமாஸ் விளக்குகள் – நடவடிக்கை எடுத்த நகராட்சிக்கு நன்றி

கீழக்கரை நகரில் நகராட்சி நிர்வாகத்தினரால் ஏர்வாடி விலக்கு, VAO ஆபீஸ் அருகாமை, தட்டாந்தோப்பு, புதிய பேருந்து நிலையம், பழைய மீன் மார்க்கெட், கட்டாலிம்சா பங்களா, மேலத் தெரு பள்ளிவாசல், கிழக்குத் தெரு ஆட்டோ ஸ்டான்ட், கஸ்டம்ஸ் சாலை உள்ளிட்ட மொத்தம் 9 இடங்களில் ஹைமாஸ் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.

ஆனால் அவை சரியாக பல இடங்களில் எரியாததால் பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாட அச்சமடைந்து வந்தனர். இந்நிலையில் கீழக்கரை மக்கள் நல பாதுகாப்பு கழகம், சட்டப் போராளிகள் தளம் வாயிலாக பல்வேறு கேள்விகள், நகராட்சி நிர்வாகத்தினரிடம் ‘ஹைமாஸ் விளக்குகள்’ சம்பந்தமாக கேட்கப்பட்டது.

மேலும் நகராட்சியிடம் இருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விளக்குகளை சரி செய்து தர நகராட்சி ஆணையாளர் சந்திரசேகரிடம் பல்வேறு கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் நீண்ட நாள்களாக எரியாமல் கிடந்த கஸ்டம்ஸ் தெரு ஹைமாஸ் விளக்கு கடந்த மாதம் சீர் செய்யப்பட்டது. இது சம்பந்தமான செய்தியை நாம் ஏற்கனவே வெளியிட்டிருந்தோம்.

அதே போல் மேலத் தெரு 15 வது வார்டு பகுதியிலும் நீண்ட நாள்களாக ஹைமாஸ் விளக்குகள் எரியவில்லை. தற்போது இந்த பகுதியில் மேலத் தெரு புதுப் பள்ளிவாசல் அருகாமையில் இருக்கும் ஹைமாஸ் விளக்கினை நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு உடனடி நடவடிக்கை எடுத்து விளக்குகள் சீர் செய்யப்பட்டு பிரகாசிக்கிறது.

விரைந்து நடவடிக்கை எடுத்த நகராட்சி ஆணையாளர் சந்திரசேகர் மற்றும் நகராட்சி தெரு விளக்கு சீரமைப்பாளர் ரமேஷ் ஆகியோருக்கு கீழக்கரை சட்டப் போராளிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

அதே போல் கீழக்கரை நகரில் உள்ள அனைத்து ஹைமாஸ் விளக்குகளையும் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் பராமரிக்க சட்டப் போராளிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.