‘மார்ச் 26’ – கேஸ் சிலிண்டர் வினியோகம் குறித்த ‘குறை தீர்க்கும் கூட்டம்’ – பொதுமக்கள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்க ‘சட்டப் போராளிகள்’ வேண்டுகோள்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் எதிர்வரும் ‘மார்ச் 26’ திங்கள் கிழமையன்று மாலை 5.15 மணியளவில் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற இருக்கும் கேஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பான குறை தீர்க்கும் கூட்டத்தில் வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரடியாக தெரிவித்து தீர்வு பெற்று கொள்ளலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பாக அறிவிப்பு செய்யப்பட்டு உள்ளது.

இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களான இராமேஸ்வரம், திருவாடானை, கீழக்கரை, பரமக்குடி, கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் தாலுகாக்களில் கேஸ் சிலிண்டர் வினியோகம் தொடர்பாக பொதுமக்களிடம் குறைகளை கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது. இந்த கூட்டத்தில் எண்ணெய் நிறுவனங்கள், கேஸ் சிலிண்டர் ஏஜெண்டுகள், முகவர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நல்ல நிகழ்ச்சியில் கீழக்கரை தாலுகாவை சேர்ந்த கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் திரளாக கலந்து கொண்டு தங்கள் குறைகளை நேரடியாக எடுத்துக் கூறி தீர்வு காண பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் முன் வர வேண்டும் என கீழக்கரை சட்டப் போராளிகள் இயக்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்து சட்டப் போராளி தாஜுல் அமீன் கூறுகையில் ”கீழக்கரையில் கேஸ் சிலிண்டர் வினியோகம் செய்யும் ஊழியர்கள் பொதுமக்களிடம் உரிய இரசீது தொகைக்கும் மேல் கூடுதலாக பணத்தை அடாவடியாக வசூலிக்கின்றனர். பல நேரங்களில் கேஸ் சிலிண்டருடைய எடை நிர்ணயிக்கப்பட்ட எடையை விட குறைவாக இருக்கிறது.

மொபைல் மூலமாக கேஸ் சிலிண்டர் பதிவு செய்தவர்களுக்கு முறையாக கேஸ் சிலிண்டர்களை வழங்காமல் சிலிண்டர் நிறுவன ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். இது சம்பந்தமாக வாடிக்கையாளர்கள் தங்கள் குறைகளை மாவட்ட நிர்வாகத்தினரிடம் நேரடியாக சொல்ல நல்லதொரு வாய்ப்பாக கருதி பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் இந்த கூட்டத்தில் பங்கேற்று நம் குறைகளை சொல்லி நிரந்தர தீர்வினை காண வேண்டும்.” இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து முத்துமாரி பிரின்டர்ஸ் நிறுவனர் சமூக ஆர்வலர் மலை ராஜா நம்மிடையே பேசுகையில் ”கீழக்கரை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தனியார் கேஸ் ஏஜென்சி நிறுவனத்தால் விநியோகம் செய்யப்படும் சிலிண்டர்களில் பெருமளவு முறைகேடு நடைபெற்று வருகிறது. பொதுமக்களுக்கு இது சம்பந்தமான விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் பொதுமக்கள் ஏமாற்றப்படுவது தெரிவதில்லை.

கீழக்கரை நகரில் பெரும்பாலான சகோதரர்கள் வெளிநாடுகளில் வசிப்பதால் வீட்டில் இருக்கும் பெண்மணிகளுக்கு குறைபாடுடைய சிலிண்டர்கள் விநியோகம் செய்யப்படும் போதும் சரி, கூடுதல் தொகையை தனியார் கேஸ் ஏஜென்சியில் பணிபுரிவோர் வசூலிக்கும் போதும் சரி, அவர்களால் தட்டி கேட்க முடிவதில்லை.

வீடுகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டிய கேஸ் சிலிண்டர்கள் முறைகேடாக வாகனங்களுக்கு பயன்படுத்துவற்காக வாகன ஓட்டிகளிடம் கள்ள மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் பல நேரம் காலாவதியான சிலிண்டர்களை கூட விநியோகம் செய்து விடுகின்றனர். இது சம்பந்தமாக ‘மார்ச் 26’ அன்று நடக்கும் கருத்து கேட்பு கூட்டத்தில் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். பொதுமக்கள் இது சம்பந்தமாக விழிப்புணர்வு பெற வேண்டும்” இவ்வாறு தெரிவித்தார்.