இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆறாவது பட்டமளிப்பு விழா ..

இராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஆறாவது பட்டமளிப்பு விழா இன்று (18/02/2019) நடந்தது. அறக்கட்டளை தலைவர் மருத்துவர் பாபு அப்துல்லா தலைமை வைத்தார். கல்லூரி தாளாளர் செல்லத்துரை அப்துல்லா வரவேற்றார். அழகப்பா பல்கலை., அளவில் ரேங்க் எடுத்த சாதனை படைத்து கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவிகளுக்கு மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் எம் ஷாலிகு ,செய்யது அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரொக்கப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார். முதுகலை பட்டதாரிகள் 28 பேர், இளங்கலை பட்டதாரிகள் 453 பேருக்கு காரைக்குடி அழகப்பா பல்கலை துணை வேந்தர் முனைவர் என்.ராஜேந்திரன் பட்டம் வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: இராமநாதபுரம் மாவட்டத்தில் ஏழை , நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் உயர்கல்வி கற்க வேண்டும் என்ற உயரிய நோக்கில் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி துவங்கப்பட்டது. இங்கு ஒழுக்கத்துடன் கூடிய கல்வி பயின்று பட்டம் பெறுவது சிறப்பு. பட்டம் பெறும் மாணவ, மாணவிகளுக்கு சில மறக்க முடியாத கடமைகள் உள்ளன. பெற்றோர், சமுதாயம், நம் வசிப்பிடம் பார்த்து கொள்ள வேண்டும். சமுதாயம், நாட்டை முன்னேற்றும் வகையில் கொள்கை, இலக்குகளை வளர்த்து கொள்ள வேண்டும். பட்டம் பெறும் பட்டதாரிகள் வாழ்வில் பெற்றோர், ஆசியர்களை மறக்கவே கூடாது. அவர்களுக்கு உரிய மரியாதை செய்ய வேண்டும். இப்பகுதியைச் சேர்ந்த எத்தனையோ பெற்றோர் பட்டம் பெற்றிருக்க மாட்டர் . தங்கள் பிள்ளைகள் தான் தங்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரியாக இருக்கலாம். அந்தளவுக்கு தியாக உள்ளத்துடன் கஷ்ட, நஷ்டங்களை தாங்கி கொண்டு உங்களை பட்டதாரியாக பார்ப்பதே அவர்கள் வாழ்வின் உயர்ந்த லட்சியம். பட்டம் பெற வைத்த உங்கள் பெற்றோரை அவர்கள் வயது முதிர்ந்த காலத்தில் உரிய முறையில் பார்த்துக்கொள்ள வேண்டும். சமூக மாற்றத்தில் கூட்டு குடும்பத்தை காண்பது அரிதாகி விட்டது. பட்டதாரிகள் பலர் பணி நிமித்தமாக இடம் பெயர்ந்து உள்ளனர். பிழைப்பிற்காக வெளி மாநிலம் அல்லது வெளி நாடு என சென்று விடுகின்றனர். அது போன்ற சூழலில் பெற்றோரை அந்நியர் மூலம் பார்த்து கொள்கின்றனர். இந்த விரும்பத்தகாத பழக்கத்தை இயன்றளவு தவிர்க்க வேண்டும்.

உங்களின் அறிவு கண்களை திறந்த உங்கள் ஆசிரியரை நீங்கள் என்றென்றும் மறக்கவே கூடாது. இன்று பலர் மிக உயர்ந்த பதவியில் ஒழுக்கத்துடன் இருப்பதற்கு உங்கள் ஆசிரியரே முன் மாதிரி என்பதை ஒரு போதும் மறந்து விடக்கூடாது. நாம் சுதந்திரம் அடைந்த போது 1947ல் 20 பல்கலை., கள், 500 கல்லுாரிகள் இருந்தன. ஆனால்,இன்று 941 பல்கலை., கள் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. அறிவார்ந்த சமுதாயம் உருவாகி விட்டதால் அன்றாட உலக விஷயங்களை மாணவர்கள் தினமும் விரல் நுனியில் வைத்திருக்க வேண்டும். வாழ்வில் சில குறிக்கோள்களுடன் இருக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியதுபோல் லட்சிய கனவு காண வேண்டும். நேரம் என்பது மிக, மிக முக்கியம். பறந்தோடும் காலத்தை பயனின்றி கழித்தால் மீண்டும் பெற முடியாது. பொன் போன்ற நேரத்தை நன்கு உரிய நேரத்தில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். காலத்தை மதித்து செயல்பட்டால் வெற்றி இலக்கை எளிதில் எட்டலாம் இவ்வாறு பேசினார். செய்யது அம்மாள் அறக்கட்டளை கவுரவ உறுப்பினர்கள் மருத்துவர் செய்யதா அப்துல்லா, மருத்துவர் சின்னதுரை அப்துல்லா, ராஜாத்தி அப்துல்லா, கல்லுாரி முதல்வர் அமானுல்லா ஹமீது, நிர்வாக அதிகாரி சாகுல் ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர். 2017-18 இல் பல்வேறு பாடப்பிரிவுகளில் 26 பேர் அழகப்பா பல்கலை., அளவில் ரேங்க் எடுத்த மாணவிகள் : பி.எஸ்சி., கணிதப் பாடத்தில் என்.நஜ்லா சூரத், எம்.பி.கீதா, எஸ்.முர்ஷிதா பானு முதல் மூன்றிடம் பிடித்தனர். எம். ஆயிஷா அஹமது ஆரிபா 5 ஆம் இடம் பிடித்தார். எம்.காம் சிஏ பாடப்பிரிவில் வி.சூரிய பிரபா, எஸ்.உசைனியா ரிஸ்வானா முதல் இரண்டு இடம் பிடித்தனர். பி.எஸ்சி., இயற்பியல் பாடத்தில் எஸ்.ஹர்ஷினி 5 ஆம் இடமும், பி.எஸ்சி., வேதியியல் பாடத்தில் கே. காளீஸ்வரி 9ம் இடம் பிடித்தனர். பி.எஸ்சி., கம்ப்யூட்டர் அறிவியல் பாடத்தில் எஸ்.சவேரி சிந்தியா, கே.பவித்ரா, வி.சுவாதி, ஜெ.ஆர்த்தி, ஏ.தேவிகா ஆகியோர் 2 , 3, 4, 5, 6 ஆம் இடம் பிடித்தனர். பி.காம்., சி.ஏ பாடப்பிரிவில் ஆர்.கஸ்தூரி, கே.சுபா, எஸ்.ஐஸ்வர்யா ஆகியோர் 2 , 6, 9 ஆம் இடம் பிடித்தனர். பி.சி.ஏ., பாடத்தில் என்.சுஷ்மிதா, ஏ. லட்சுமி பிரியா, எஸ்.மைபுன் ஷிபா னா ஆகியோர் 3, 6, 9 ஆம் இடம் பிடித்தனர். எம்.ஏ., ஆங்கில பாடத்தில் ஜி.ஸ்ரீ வர்ஷா, எம்.அபிநயா ஆகியோர் 3, 10 ஆம் இடம் பிடித்தனர். பி.ஏ., ஆங்கில பாடத்தில் எஸ்.நந்தினி, பி.கீர்த்திகா, எஸ்.சுஷ்மிதா ஆகியோர் 3, 8, 9 ஆம் இடம் பிடித்தனர். பி.எஸ்சி., தகவல் தொழில் நுட்ப பாடத்தில் பி.காவியா, எச்.அப்ரிதா ஆகியோர் 3, 9 ஆம் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.