Home செய்திகள் ரூ.127.71 கோடி மதிப்பில் கடற்பாசி பூங்கா – 6 மாவட்ட மக்கள் பயன்பெறுவர். மத்திய அமைச்சர் பேச்சு..

ரூ.127.71 கோடி மதிப்பில் கடற்பாசி பூங்கா – 6 மாவட்ட மக்கள் பயன்பெறுவர். மத்திய அமைச்சர் பேச்சு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், செப்.3- இராமநாதபுரம் மாவட்டம் திருப்பாலைக்குடி அருகே வளமாவூரில் மீன்வள துறை சார்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா பூமி பூஜை விழா நடந்தது. மத்திய மீன்வளம் கால்நடை பராமரிப்பு, பால்வளம், தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் முன்னிலை வகித்தார். ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா கட்டுமானப்பணி பூமி பூஜையை  மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா துவக்கி வைத்தார்.  அவர் பேசியதாவது: மீன்வளத்துறை மூலம் பல்வேறு திட்டங்களை  பாரத பிரதமர் நரேந்திர மோடி  வழங்கியதால் பொருளாதார முன்னேற்றம் பெரும் துறைகளில் ஒன்றாக மீன்வளத்துறை இருந்து வருகிறது. சாகர் பரிக்ரமா கடல் மீனவர்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் நிறைவேற்றும் வகையில் இப்பயணம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் கடற்கரை ஒட்டிய மீனவ மக்கள் பயன்பெறும் வகையில் ரூ.127.71 கோடி மதிப்பில் பல்நோக்கு கடற்பாசி பூங்கா இந்தியாவில் முதல்முறையாக தமிழகத்தில் தான் துவங்கப்பட்டுள்ளது. இத்திட்டம் மூலம் 6 மாவட்ட மீனவர்கள் நேரடி, மறைமுக வேலைவாய்ப்பு பெற்று பயன்பெறும் வகையில் அமைக்கப்படுகிறது. மீன்வளத்துறை மூலம் கடந்த 9 ஆண்டுகளில் ரூ.38,500 கோடி நிதி ஒதுக்கீட்டில் பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் பொருளாதார முன்னேற்றத்திற்கு கடற்பாசி திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இறால் ஏற்றுமதியில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. மீன்கள் ஏற்றுமதியில் நான்காவது இடத்தில் உள்ளது. கடற்பாசி தொழிலில் அனைவரும் செயல்பட்டு கடற்பாசி ஏற்றுமதியில் இந்தியா முதன்மை நாடாக இடம் பெற வேண்டும்.

விவசாயிகளுக்கு கிசான் கிரெடிட் கார்டு பயன்பாட்டில் உள்ளது போல் மீனவர்களுக்கும் கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்படுகிறது. ராமநாதபுரம் மாவட்டத்தில் இத்திட்டத்தில் பதிவு செய்த 374 பேருக்கு ரூ.4.71 கோடி நிதியுதவி வழங்கப்பட்டு பயன்பெற்று வருகின்றனர். ஆண்டுதோறும் 1000 பேர் பயன்பெறும் வகையில் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். கடற்பாசி வளர்ப்பு திட்டத்தில் கடற்பாசி விதைகள் வழங்குவதால் பொருள்களை சந்தைப்படுத்துவதற்கான பயிற்சி வழங்கப்படுகிறது. மீனவ மக்கள் இத்திட்டத்தில் பங்கேற்று ஒவ்வொருவரும் தனிநபர் பொருளாதார முன்னேற்றத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்றார். பயனாளிகள்  10 பேருக்கு கிசான் கிரெடிட் கார்டு வழங்கப்பட்டது. மத்திய மீன்வளத்துறை இணைச்செயலாளர் நீத்து பிரசாத், தமிழக மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன், உதவி ஆட்சியர் (பயிற்சி) சிவானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!