இராமநாதபுரத்தில் தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு ஆளுநர் பங்கேற்பு..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பட்டணம் காத்தான் ஊராட்சியில் நடந்த தூய்மை பாரத இயக்க விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் கலந்து கொண்டார். அங்கு தூய்மை பாரத இயக்க அவசியம் குறித்து பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இதன் பின்னர், மாணவ, மாணவிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் ஆளுநர் தலைமையில் தூய்மை பாரத இயக்கம் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பட்டணம்காத்தான் ஊராட்சி பகுதியில் சுற்றுப்புற தூய்மை பணியை மேற்கொண்டு சுகாதார மேம்பாட்டு அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும் மாவட்ட நிர்வாகம், தூய்மை பாரத இயக்கம் சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணி விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி அரங்கை திறந்து வைத்தார். தூய்மை பாரத இயக்கம் ரதத்தை மக்களின் பார்வைக்கு துவக்கி வைத்தார். முன்னதாக, அரசு விருந்தினர் இல்லத்தில் மக்கள் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றுக்கொண்டார்.

தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் எம். மணிகண்டன், ஆளுநரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால், மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், தென் மண்டல காவல் துறை தலைவர் கே.பி.சண்முக ராஜேஸ்வரன், காவல் துறை துணை தலைவர் என்.காமினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா, மாவட்ட வருவாய் அலுவலர் சி.முத்துமாரி, ஊரக வளர்ச்சி திட்ட இயக்குநர் த. ஹெட்ஸி லீமா அமாலினி, செய்தி துறை இணை இயக்குநர் (ஆளுநரின் மக்கள் தொடர்பு ) சிவ.சரவணன், பரமக்குடி சார் ஆட்சியர் பி.விஷ்ணு சந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோ. அண்ணாதுரை, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) எஸ்.கண்ணபிரான், கோட்டாட்சியர் ஆர். சுமன், ஊராட்சிகள் உதவி இயக்குநர் வீ.கேசவ தாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்