Home செய்திகள்மாநில செய்திகள் காஸாவில் மக்கள் மோசமான துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். உடனடி சண்டை நிறுத்தம் அவசியம!-கமலா ஹாரிஸ்..

காஸாவில் மக்கள் மோசமான துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். உடனடி சண்டை நிறுத்தம் அவசியம!-கமலா ஹாரிஸ்..

by Askar

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ், ஆறு வாரகால போர் நிறுத்தத்திற்கு பாலஸ்தீன போராளி அமைப்பான ஹமாஸ் உடனடியாக ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

அதே சமயத்தில் காஸாவில் மனிதாபிமான உதவிகள் கிடைக்காமல் தவிக்கும் அப்பாவி மக்களுக்கு நிவாரணப் பொருள்கள் விநியோகத்தை அதிகரிக்க வேண்டும் என்று இஸ்ரேலை அவர் கட்டாயப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேல்-காஸா பிரச்சினையில் இதுவரை எந்தவொரு அமெரிக்க தலைவரும் வலுவாகக் கருத்துரைக்கவில்லை. தற்போது திருமதி கமலா ஹாரிஸ், இஸ்ரேலிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்துள்ளதோடு மக்கள் நெரிசல்மிக்க பகுதியில் அதிக உதவிகள் சென்றடைவதற்கான வழிகளை கோடிட்டுக் காட்டியுள்ளார்.

ஐந்து மாத இஸ்ரேலிய அரசாங்கத்தின் தாக்குதலில் ஆயிரக்கணக்கான மக்கள் ராஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர்.

காஸாவில் மக்கள் மோசமான துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். உடனடி சண்டை நிறுத்தம் அவசியமாகிறது. சண்டை நிறுத்த உடன்பாடு தயாராக இருக்கிறது. ஹமாஸ் அதனை ஏற்றுக் கொண்டு போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு வழிவகுக்க வேண்டும்,” என்று திருமதி கமலா ஹாரிஸ் அலாபாமாவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் தெரிவித்தார்.

காஸா மக்கள் பட்டினியால் வாடுகின்றனர். இஸ்ரேலிய அரசாங்கம் நிவாரண உதவிகள் தங்கு தடையின்றி செல்வதற்கு கூடுதலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இனிமேல் இந்த விவகாரத்தில் சாக்குப்போக்குக்கு இடம் கிடையாது, என்றார் அவர்.

மார்ச் 3ஆம் தேதி அண்மைய சண்டை நிறுத்தப் பேச்சு வார்த்தையில் பங்கேற்க ஹமாஸ் போராளிக் குழு கெய்ரோ வந்து சேர்ந்தது.

இந்தப் பேச்சு வார்த்தையில் பல்வேறு தடைகளுக்கு முடிவு காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதில் ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டதா என்பது குறித்து தகவல் இல்லை.

உயிரோடு இருக்கும் பிணைக் கைதிகளின் பட்டியலை முழுமையாகத் தர வேண்டும் என்று இஸ்ரேல் கோரிக்கை விடுத்ததாகவும் இதை ஏற்க ஹமாஸ் மறுத்ததால் பேச்சுவார்த்தையை இஸ்ரேல் புறக்கணித்ததாகவும் இஸ்ரேலிய நாளேடான யெடியோத் அஷ்ரோனோத் இணையத் தளம் தெரிவித்தது.

முன்னதாக போர் நிறுத்த உடன்பாடு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டதால் ரமலானுக்கு முன்பு போர் நிறுத்தம் சாத்தியமாகும் என்று அமெரிக்கா கூறியிருந்தது.

இதற்கிடையே அண்மையில் நூற்றுக்கணக்கான அப்பாவி காஸா மக்கள் கொல்லப்பட்டதையும் காஸாவில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள ஜனநாயகக் கட்சி செனட்டர்கள், போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேலைப் பணிய வைக்க வேண்டும் என்று  பைடனை கேட்டுக்கொண்டனர்.

அப்பாவி மக்கள் கொல்லப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், என்று செனட்டர் டிக் டர்பின் தெரிவித்தார்.

காஸாவில் மருத்துவச் சூழல் மிகப் பயங்கரமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

உலகம் முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்படும் போர் நிறுத்தம் மார்ச் 10 அல்லது 11ஆம் தேதி தொடங்கி ரமலான் மாதம் முழுவதும் சுமார் ஆறு வாரங்களுக்கு நீடிக்கும் எனக் கூறப்படுகிறது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!