Home செய்திகள்உலக செய்திகள் மகாத்மா காந்தி பற்றிய ஆளுநரின் சர்ச்சை பேச்சு; காந்திய அமைப்புகள் கடும் கண்டனம்; ஆளுநர் உரையை திரும்ப பெற வலியுறுத்தல்..

மகாத்மா காந்தி பற்றிய ஆளுநரின் சர்ச்சை பேச்சு; காந்திய அமைப்புகள் கடும் கண்டனம்; ஆளுநர் உரையை திரும்ப பெற வலியுறுத்தல்..

by Abubakker Sithik

ஆளுநர் ஆர்.என். ரவியின் மகாத்மா காந்தி குறித்த சர்ச்சை பேச்சுக்கு காந்தியவாத அமைப்புகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் ஆளுநர் தனது உரையை திரும்பப்பெற வேண்டும் என காந்திய அமைப்பு நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். இது குறித்து அகில இந்திய காந்திய இயக்கத் தலைவர் செங்கோட்டை வி. விவேகானந்தன், N.M பெருமாள் I.A.S தென்காசி, பூ. திருமாறன் சமூக நல ஆர்வலர், வெங்கடாம்பட்டி, Dr. G.S. விஜயலட்சுமி சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மின்நகர்,  Dr. தி. ஏகலைவன் பல் மருத்துவர், முக்கூடல், தி நன்னன், வெங்கடாம்பட்டி, பீமராஜா காந்தியவாதி, இராஜபாளையம் ஆகியோர் கூட்டாக நெல்லையில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர். இந்த சந்திப்பில், பொறுப்பான பதவியில் இருக்கும் மேதகு ஆளுநர் ஆர்.என். ரவி மாணவர்களிடையே உரையாற்றும் போது வரலாறு அறியாதவராக காந்தியடிகளை பற்றி விமர்சித்து உள்ளார். காந்திய இயக்கங்கள் அந்த செயலுக்காக கடுமையான கண்டத்தை பதிவு செய்வதாக தெரிவித்தனர்.

மேலும், ஜனவரி 24ஆம் தேதி நமது ஆளுநர் மாணவர்களிடம் பேசிய சொற்பொழிவு பத்திரிகையில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது. மகாத்மா காந்தியின் பங்கு ஒன்றுமில்லை என்றும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களால் தான் நாடு சுதந்திரம் அடைந்தது என்றும் வரலாற்று தவறான ஒரு செய்தியை அண்ணா பல்கலையில் மாணவர்களிடையே உரையாற்றும் போது தெரிவித்துள்ளார். போராட்டத்திற்காக எண்ணற்ற தியாகிகள் தன் உயிரையும் துச்சமாக மதித்து பலவிதமான போராட்டம் காந்திஜி தலைமையில் நடத்தி, இறுதியில் ஐரோப்பியர்களால் இந்திய நாட்டிற்கு சுதந்திரத்தை தருவது தவிர வேறு வழியில்லை என்ற உந்துதல் காரணமாக 1947ல் லார்ட் மவுண்ட் பேட்டன் இந்திய சுதந்திரத்தை பிரகடனம் படுத்தினார்.

தியாகிகள் வரிசையில் நாட்டிற்காக போராடிய வீரர்களில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பங்கு பெற்றார் என்பதில் யாரும் மறுக்க முடியாது. அகிம்சை மீது நம்பிக்கை இல்லாமல் வன்முறை மூலமாகவே வெற்றி பெற முடியும் என்று நம்பிக்கை கொண்டு நாட்டிற்காகவே போராடி விமான விபத்தில் உயிர்பலி ஆனார். அந்த வன்முறை போராட்டத்தில் நாடு சுதந்திரம் பெற்றது என்று எவரும் இதுவரை கூறியது இல்லை. இந்த உண்மைகளை எல்லாம் அறியாத மேதகு ஆளுநர் தேவையில்லாத ஒரு விஷயத்தை கையில் எடுத்து நேதாஜியால் தான் சுதந்திரம் பெற முடிந்தது என்று கூறியது அபத்தமாகும். அதிலும் குறிப்பாக மகாத்மா காந்தி கையாண்ட ஒத்துழையாமை இயக்கத்தால் நாடு விடுதலை பெறவில்லை என்று கூறியது அவர்களுடைய அறியாமையை காட்டுகிறது. இந்திய தேச மக்கள் அனைவரும் விடுதலை போராட்ட காலத்தில் மகாத்மாவால் மட்டுமே கத்தியின்றி ரத்தமின்றி இந்த யுத்தத்தை செய்ய முடிந்தது என்பதை அனைவரும் உணர்ந்து ஒப்புக் கொண்ட ஒரு விஷயத்தை தேவையில்லாமல் ஆளுநர் மாணவர்களிடையே உரையாற்றி இருப்பது அனைத்து மக்கள் சார்பிலும், காந்திய இயக்கங்கள் சார்பிலும் கடுமையான கண்டத்தை தெரிவித்து கொள்கிறோம்.

ஒத்துழையாமை இயக்கத்தை பற்றி கூறும் ஆளுநர், காந்திஜி தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் ஏன் ஏற்பட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். 1919 ல் பிரிட்டிஷாரால் ரவ்லட் சட்டம் இயற்றப்பட்டது. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை விலக்கும் விதமாக ஏராளமான போராட்டங்கள் காந்திஜி தலைமையில் நடைபெற்றது. அன்றைய பிரிட்டிஷ் அரசாங்கம் காந்திஜி தலைமையிலான அகிம்சை முறையில் போராடும் இந்த போராட்டங்களை அடக்குவதற்கு வேறு வழியில்லாமல் கடுமையான ரவ்லட் சட்டத்தை நிறைவேற்றினார்கள். இந்த சட்டத்தின் மூலமாக இந்தியர்களை அடக்கி காலனி ஆதிக்கத்தை பலப்படுத்தி விடலாம் என்று நினைத்தார்கள். இந்த சட்டத்தை இந்தியர்கள் ஒருபோதும் அனுமதிக்கவில்லை. இந்த சட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்பதற்காக மகாத்மா தலைமையில் ஒத்துழையாமை இயக்கம் தொடங்கியது.

செப்டம்பர் 1920 ல் அன்று தொடங்கிய ஒத்துழையாமை இயக்கம் 1922 வரை நீடித்தது. இந்த காலகட்டத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள வக்கீல்களும், நீதிபதிகளும், அரசு அதிகாரிகளும் தங்களுடைய பணிகளில் இருந்து விலகி அரசு கொண்டு வந்த ரவ்லட் சட்டத்தை எதிர்த்து சட்ட மறுப்பு கொள்கை கடைபிடிக்க தொடங்கினர். பெரிய பெரிய பதவியில் இருப்பவர்கள் முதல் சாதாரண ஊழியர்கள் வரை சட்ட மறுப்பில் ஈடுபட்டதால் நாடே ஸ்தம்பித்தது. அரசு எவ்வளவு அடக்குமுறை கையாண்டாலும் இந்த ஒத்துழையாமை இயக்கத்தை வெல்ல முடியவில்லை. இளைஞர்கள் அனைவரும் உத்வேகம் கொண்டு காந்திஜிக்கு ஆதரவாக ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டனர். செய்வது அறியாத பிரிட்டிஷார் மிகவும் குழம்பி போனார்கள்.

ஆனால் இந்த இயக்கம் மகாத்மாவால் நிறுத்த வேண்டிய சூழ்நிலை ஒரு சமயம் ஏற்பட்டது. காரணம் இந்த இயக்கம் வன்முறையை கையாண்ட மக்களில் சிலர் பிரிட்டிஷாரின் துப்பாக்கி சூட்டிற்கு பதிலடியாக சௌரி சௌரா என்ற இடத்தில் உள்ள காவல் நிலையத்தை தீக்கிரையாக்கினார்கள். இந்த சம்பவத்தில் 22 பேர் காவல் துறையினர்கள் கொல்லப்பட்டார்கள். சத்தியமும், அகிம்சையும் உயிர் மூச்சாக கொண்ட காந்திஜி, நாம் ஒருபோதும் வன்முறையை கையாண்டு காரியத்தை சாதிக்கலாம் என்பது மிகவும் தவறு. எனவே இந்தியர்களுக்கு இன்னும் நான் சரியான பயிற்சி அளிக்கும் வரை இந்த இயக்கத்தை நிறுத்துவதாக அறிவித்தார். இந்திய தலைவர்கள் அனைவருமே இந்த இயக்கம் நின்றதால் அதிர்ச்சி அடைந்தார்கள். எனினும் காந்திஜி தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து அந்த இயக்கத்தை நிறுத்தினார். இந்த இயக்கம் அகிம்சை வழியில் முழுமையாக வெற்றியடையும் என்று கூறிய காந்திஜி கடுமையான அகிம்சை போராட்டத்தில் மக்களை ஈடுபட வைத்தார். இது பிரிட்டிஷாரை அதிர வைத்தது. 

ஒத்துழையாமை இயக்கத்தை காந்திஜி நிறுத்தியதின் விளைவு இந்தியா முழுவதிலும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை நாங்கள் எல்லோரும் காந்திஜி தலைமையில் அகிம்சையை கடைபிடித்து விடுதலை கிடைக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என்று உறுதிமொழி அளித்தனர். அகிம்சை தீ நாடு முழுவதும் பட்டி தொட்டி எல்லாம் பரவி நாடு விடுதலை கிடைக்கும் வரை தொடர்ந்து பரவியது. உலகமே அதிசயமாக நமது மக்களையும் காந்திஜியையும் திரும்பி பார்த்தார்கள். இதையெல்லாம் ஆளுநர் அறிவாரா?

ஏப்ரல் 6, 1930ல் மாபெரும் உப்பு சத்தியாக்கிரகத்தைப் பற்றி ஆளுநர் அறிவாரா? கேவலம் ஒருபிடி உப்பு அள்ளுவதால் என்ன ஆகிவிட போகிறது என்று ஏளனம் செய்த பிரிட்டிஷாருக்கு சரியான அதிரடி காத்திருந்தது என்பதை ஆளுநர் அறிவாரா? ஏழை மக்கள் அன்றாடம் உபயோகிக்கும் உப்புக்கு வரி விதித்து பிரிட்டிஷ் ஆட்சி அடிமட்ட ஏழை மக்களின் வாழ்வையே கேள்விக் குறியாக்கினார்கள், இதைக் கண்டு மனம் வருந்திய காந்திஜி அவருடைய சபர்மதி ஆசிரமத்தில் இருந்து ஒரு அறிக்கை வெளியிட்டார். நாளை இந்திய மக்கள் அனைவரும் சபர்மதி ஆசிரமத்தை உற்று கவனிப்பார்கள் என்று கூறினார். அதற்கு முன்னதாக பிரிட்டிஷ் அரசிடம் தான் உப்பு சத்தியாக்கிரகம் செய்ய போவதாகவும், எனவே உப்பு வரியை ரத்து செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.

சாதாரண உப்பை வைத்து மகாத்மா என்ன காரியம் சாதித்து விட போகிறார் என்று ஏளனமாக பிரிட்டிஷார் எடை போட்டார்கள். மறுநாள் காந்திஜி என்ன செய்ய போகிறார் என்று உலகமே உற்று நோக்கியது. ஆனால் மகாத்மா எந்தவித அறிவிப்பும் இல்லாமல் தண்டி கடற்கரை நோக்கிய ஆசிரமவாசி 18 பேருடன் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நடக்க தொடங்கி விட்டார். வழி நடையிலும் புழுதி மண் ரோடு வழியாக கடுமையான சிரமத்துடன் நடந்து சென்றார்கள். மக்கள் சற்றும் எதிர்பாராத இந்த நடைபயணம் காட்டு தீ போல உலகமெங்கும் பரவியது. வழி நெடுகிலும் மக்கள் தானாக முன்வந்து தெரு நெடுகிலும் தண்ணீர் தெளித்து மலர் தூவி நடைபயணம் மேற்கொண்டவர்களுக்கு சிரமம் இல்லாமல் செய்தார்கள். 320 கி.மீ. தொலைவில் உள்ள தண்டி கடற்கரை நடை யாத்திரையாகவே குழு சென்றது. தண்டி கடற்கரை அடையும் போது ஆயிரக்கணக்கான மக்கள் தானாகவே முன்வந்து யாத்திரையில் கலந்து கொண்டார்கள். இதை பதிவு செய்த வெளிநாட்டு பத்திரிகையாளர்கள் மூக்கின் மேல் விரல் வைத்து எந்தவித ஏற்பாடு இல்லாமல் காந்திஜி நடை யாத்திரைக்கு மக்கள் பேராதரவு தந்தது எங்களை வியக்க வைக்கிறது என்று கூறினார்கள். இந்த செய்தி உலகமெங்கும் பரவியது. 

அப்போது தான் பிரிட்டிஷார் கடற்கரையில் என்ன செய் போகிறார்கள் என்று கூர்ந்து கவனிக்க தொடங்கினார்கள். கடற்கரை வந்தடைந்த காந்திஜி குழு கடலிலேயே நீராடி விட்டு ஒரு கை உப்பு கையில் எடுத்து இந்த இயக்கம் வெற்றியடைந்தது விட்டது என்று கூறினார். இதன் விளைவாக காந்திஜி வழியை பின்பற்றி ஏராளமான தலைவர்கள் ஆங்காங்கே உள்ள கடற்கரையில் உப்பு எடுக்க தொடங்கி விட்டார்கள். அதிர்ந்து போன பிரிட்டிஷார் அடக்கு முறையை கையாண்டார்கள். இருப்பினும் எந்த பயனும் இல்லை. மக்கள் வெறி கொண்டு சட்டத்தை மீறி உப்பு எடுக்க தொடங்கி விட்டார்கள். தாராசனா சால்ட் வொர்க்ஸ் என்ற நிறுவனத்தில் உப்பெடுக்க காந்திஜி குழு திட்டமிட்டது. அதை அறிந்த ஆங்கிலேயர் உப்பெடுப்பதை நாம் சாதாரணமாக எடைபோடுவது தவறு என்று உணர்ந்த பிரிட்டிஷார் அவரை சிறையில் தள்ளியது. ஒரு வருடமாக சிறையில் இருந்த காந்திஜி பிரிட்டிஷாரின் வட்ட மேசை மாநாட்டிற்காக அழைத்த போது அதை ஏற்ற காந்திஜி விடுதலை செய்யப்பட்டார். சாதாரண உப்பு சத்தியாக்கிரகத்தின் விளைவாக காந்திஜியை லண்டனுக்கு அழைத்து பேசுவதற்கு பிரிட்டிஷார் ஏற்பாடு செய்தததை ஆளுநர் அறிவாரா? இதன்பின் சத்தியாக்கிரக போராட்டத்தில் கலந்து கொள்ள கோடானுகோடி மக்கள் கைகோர்த்தததை ஆளுநர் அறிவாரா?

இதன்பின் 1942ல் வெள்ளையனே வெளியேறு என்ற கோஷம் முழங்க இந்திய மக்கள் அனைவருமே போராட்டத்தில் ஈடுபட்டனர். பிரிட்டிஷ் அரசு இந்த போராட்டம் தொடர்ந்தால் காலனி ஆதிக்கம் ஸ்தம்பித்து விடும் என்று அஞ்சினார்கள். இதற்கிடையில் காந்திஜி மாணவர்களிடையே ஒரு அறை கூவல் விட்டார். “செய் அல்லது செத்து மடி”என்ற கோஷத்தை முன்வைத்து இந்திய மக்கள் அனைவரையும் அழைத்து போராட்டத்தில் ஈடுபட வைத்தார். இதை அடக்குவதற்காக பிரிட்டிஷார் ஏராளமானவர்களை ஈவு இரக்கம் இன்றி சிறை பிடித்தனர். இதனால் வெகுண்டு எழுந்த இந்திய மக்கள் ஒவ்வொரு பகுதியிலும் அகிம்சை போராட்டத்தை தீவிரப்படுத்தினார்கள். இது போன்ற போராட்டங்கள் 1946 வரை நீடித்தது. கணக்கில் அடங்காதார் வேதனை அனுபவித்து சிறை சென்றனர். நாளுக்கு நாள் இந்திய மக்கள் தேச பக்தி கூடியதே யொழிய குறைந்த பாடில்லை. இதன்பின் பிரிட்டிஷார் இந்திய மக்களுக்கு விடுதலை அளிப்பதை தவிர வேறு வழி எதுவும் இல்லை என்று உணர்ந்தார்கள். பின் பிரிட்டிஷ் அரசு 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15ஆம் நாள் இந்திய மக்களுக்கு விடுதலை கொடுத்து பிரிட்டிஷார் வெளியேற தொடங்கினார்கள். இதனை ஆளுநர் அறிவாரா?

பிரிட்டிஷாரின் போர்க்கால பிரதமராக இருந்த சர் வின்ஸ்டன் சர்ச்சில் கடுமையான அடக்குமுறை கையாள்வதில் வல்லவர் அப்படிப்பட்ட சர்ச்சில் காந்திஜி பற்றி விமர்சித்தது என்ன என்று ஆளுநர் அறிவாரா? சர்ச்சில் காந்திஜியைப் பற்றி கூறும் போது இந்தியா பீரங்கி கொண்டு எங்களைத் தாக்கினால் நான் இந்தியரை தவிடுபொடி ஆக்கி விடுவேன். ஆனால் காந்திஜி என்ற கோவணாண்டி எந்தவித ஆயுதமின்றி நெஞ்சைத் திறந்து வைத்துக் கொண்டு சற்றும் பயப்படாமல் அகிம்சை என்ற வழியில் மக்களை திரட்டி போராடுவது என்னை கோழையாக்கி விட்டதே என்று கூறினாராம். இதனை ஆளுநர் அறிவாரா?

எண்ணற்ற தியாகிகள் காந்தியின் தலைமையில் அரும்பாடுப்பட்டு விடுதலை வேள்வியில் வெற்றி பெற்ற காந்திஜியை பற்றி ஆளுநர் கூறுவது எவ்வளவு அபத்தமாக இருக்கிறது. அதுவும் மாணவர் மத்தியில் கூறியிருக்கிறார். இதுபோல வரலாறு தெரியாத பெரும் பதவியில் வகிப்பவர்கள் வரலாறு அறிந்து உரையாற்ற வேண்டும். இல்லையெனில் இளைய சமுதாயத்தினரை திசை திருப்பி அவர்களுக்கு தவறான கருத்தை கற்பிக்க கூடும். ஆளுநர் தன் உரையை வாபஸ் வாங்கி வரலாறு அறிந்து உரையாற்ற வேண்டும் என காந்திய இயக்க நிர்வாகிகள், சமூக நல ஆர்வலர்கள் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com