Home செய்திகள் பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றிய, நவீன இயற்பியலின் தந்தை கலீலியோ கலிலி பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 15, 1564).

பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றிய, நவீன இயற்பியலின் தந்தை கலீலியோ கலிலி பிறந்த தினம் இன்று (பிப்ரவரி 15, 1564).

by mohan

கலீலியோ கலிலி (Galileo Galilei) பிப்ரவரி 15, 1564ல் இத்தாலியில் பிசா நகரில் பிறந்தார். புகழ்பெற்றிருந்த குழல் இசைக்கருவிக் கலைஞரும் இசையமைப்பாளருமான வின்சென்சோ கலிலி என்பவருக்கும் கியுலியா அம்மனாட்டிக்கும் ஆறு குழந்தைகளில் முதலாவதாகப் பிறந்தார். குழல் இசையைத் தந்தையிடமிருந்து கற்றுத் தேர்ந்தார். தந்தையிடமிருந்தே மேலும் நிறுவப்பட்டிருந்த கோட்பாடுகள் மீதான ஐயங்கள் நன்கு வரையறுக்கப்பட்ட சோதனை முடிவுகளின் மதிப்பு, கணிதமும் சோதனையும் இணைந்து உருவாக்கும் முடிவுகள் ஆகியவற்றின் மீது பிடிப்பு ஏற்பட்டிருக்க வேண்டும். கலீலியோ கலிலீ எட்டாண்டுகள் இருந்தபோது இவரது குடும்பம் புளோரன்சிற்குக் குடிபெயர்ந்த போது, யகோபோ போர்கினியிடம் இரண்டாண்டுகள் விட்டுச் செல்லப்பட்டார். பின்னர் புளோரன்சிலிருந்து தென்கிழக்கே 35 கி.மீ. தொலைவில் உள்ள வல்லம்புரோசாவில் கமல்டோலெசு துறவியர்மடத்தில் கல்வி கற்றார். கலிலியோ முதலில் பைசா பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயிலத்தான் சேர்ந்தார். 1581ல், அவர் மருத்துவம் படிக்கும்போது, ஒரு நாள், வளியோட்டங்கள் பெரிய, சிறிய அலைவுகளில் சரவிளக்கை தனி ஊசல் போல ஆடவைப்பதை கவனித்தார்.

தன்னுடைய இதயத்துடிப்பை வைத்துப்பார்க்கும்போது அந்த சரவிளக்கு பெரிய அலைவிலும் சிறிய அலைவிலும் ஓரலைவை ஒரே நேரம் எடுத்துக் கொள்வதைப் பார்த்தார். தனது வீட்டிற்கு திரும்பியதும் இரண்டு ஒரே நீளம் கொண்ட தனி ஊசல்களை வெவ்வேறு அளவில் அலையவிட்டுப் பார்க்கும்போது அவை இரண்டும் ஒரே நேர அளவில் அலைவதைக் கவனித்தார். இதன் பிறகுதான் கிறித்தியன் ஐகன்சு இந்த நெறிமுறையைப் பயன்படுத்தி ஒரு துல்லியமான கடிகாரத்தை உருவாக்கினார். இதுவரைக்கும் தன் வாழ்வில் தான் கணித படிப்பிலிருந்து தள்ளி இருந்துள்ளார். ஏனெனில் அக்காலத்தில் ஓர் இயற்பியலாளரை விட ஒரு கணிதவியலாளர் குறைந்த பணத்தையே ஈட்ட முடிந்துள்ளது. ஆனால் வடிவவியல் பற்றிய ஒரு சொற்பொழிவைக் கேட்டபிறகு தன் தந்தையைத் தன்னைக் கணிதம் படிக்க இசையவைத்தார். பிறகு அவர் வெப்பநிலைமானியின் முன்வடிவமைப்பை) உருவாக்கினார். 1586ல் தான் கண்டுபிடித்த நீரியல் துலாவைப் பற்றி ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இதுதான் அவரை முதன்முதலாக அறிவியல் உலகிற்கு அறிமுகப்படுத்தியது.

1589ல், இவர் பைசா நகரப் பல்கலைக்கழகத்தின் “கணிதக் கட்டிலுக்குப்” பேராசிரியராக அமர்த்தப்பட்டார். 1591ல் கலிலியோவின் தந்தை இறந்தார். எனவே தம்பி மைக்கேலேஞ்சலோவைப் பார்த்துகொள்ளும் பொறுப்பையும் ஏற்றார். 1592ல், கலிலியோ படுவா பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1610 வரை அங்கு வடிவியல், இயக்கவியல், வானியல் ஆகிய துறைகளில் கல்வி பயிற்றுவித்தார். இந்த காலங்களில் கலிலியோ தூய அடிப்படை அறிவியல் (இயக்கவியல், வானியல்) செயல்முறை அறிவியலில் (பொருட்களின் வலிமை, தொலைநோக்கியின் முன்னேற்றம்) நிறைய கண்டுபிடிப்புகளை உருவாக்கினார். பேராயர் பெல்லார்மைன் கோப்பர்நிக்கசுவின் சூரிய மையக் கோட்பாட்டமைப்பு எற்கப்பட வேண்டுமென்றால், முதலில் புறநிலையாக சூரியன் புவியைச் சுற்றவில்லை எனவும் புவிதான் சூரியனைச் சுற்றுகிறது எனவும் நிறுவிடவேண்டும் என்று 1615ல் கூறினார். கலீலியோ புவி இயங்குவதை நிறுவிடும் புறநிலையான சான்றாகத் தன் ஓதக் கோட்பாட்டைக் கருதினார். இந்தக் கோட்பாட்டின் அருமையைக் கருதியே இருபெரும் உலக அமைப்புகள் பற்றிய உரையாடல் என்ற தன் நூலின் பெயரையே கடலோத உயரோதமும் பாய்வும் பற்றிய உரையாடல் என மாற்றினார். கலீலியோவின் வீட்டுச்சிறையாணைக்குப் பிறகு நூலின் தலைப்பில் இருந்து கடலோத மேற்கோள் நீக்கப்பட்டுவிட்டது.

புவி தன் சாய்வான அச்சில் சூரியனைச் சுற்றிவரும்போது அதன் சுழற்சியில் அமையும் வேக ஏற்றமும் குறைவும் தான், கலீலியோவின் கருத்துப்படி, கடல்நீரில் ஏற்ற வற்றத்தை உருவாக்கி கடலோதங்களை உருவாக்குகின்றன. இவர் முதன்முதலில் தன் ஓதக் கோட்பாட்டை 1616ல் பேராயர் ஆர்சினிக்கு அனுப்பிவைத்தார். இவர் கோட்பாடு தான் முதலில் ஓதங்களின் உருவளவின் மீதும் தோன்றும் நேரத்தின் மீதும் கடல்வடிவம் தரும் விளைவை நன்கு விளக்கியது. இவர் அட்ரியாட்டிக் கடல் நடுவில் ஓதமின்மையையும் முனைகளில் ஓதம் உருவாதலையும் சரியாகக் கூறினார், என்றாலும் ஓதங்களுக்கான பொதுக்கோட்பாடாகத் தோல்வியே கண்டது. இந்தக் கோட்பாடு சரியென்றால் ஒருநாளில் ஓர் உயரோதம் தன் ஏற்படவேண்டும். கலீலியோவும் மற்றவரும் இப்போதாமையை அறிந்தே இருந்தனர். வெனிசில் ஒருநாளில் இரு ஓதங்கள் 12 மணி நேர இடைவெளியில் ஏற்படுவதை அறிந்திருந்தனர். கலீலியோ இந்தப் பிறழ்வைப் புறக்கணித்ததோடு இந்நிலை கடல்வடிவம், கடலாழம் போன்ற பிற காரணிகளால் ஏற்படுவதாக்க் கூறினார். கலீலியோவின் இந்த வாதங்கள் பொய்யானவை என உறுதிப்படுத்திய ஐன்ஸ்டீன், கலீலியோ இந்த நயப்பான வாதங்களை உருவாக்கி சான்றின்றி ஏற்றது புவியின் சுழற்சியைப் புறநிலையாக நிறுவிடவே எனும் கருத்தையும் வெளியிட்டார். நிலா ஈர்ப்பு விசை தான் கடலோதங்களை ஏற்படுத்துகிறது என்ற அவரது சமகாலத்தவரான யோகான்னசு கெப்ளரின் கருத்தைக் கலீலியோ புறக்கணித்தார். மேலும் கெப்ளரின் கோள்களின் நீள்வட்ட வட்டணைகளில் கலீலியோ ஆர்வம் காட்டவில்லை.

கலீலியோ 1619ல் இயேசுசார் உரோமனோ கல்லூரியில் கணிதவியல் பேராசிரியராகவிருந்த ஒராசியோ கிராசியுடன் முரண்பட நேர்ந்துள்ளது. முதலில் இது வால்வெள்ளிகளின் தன்மை குறித்த விவாதமாகத் தொடங்கி, கலீலியோ தன் மதிப்பீடு நூலை 1623ல் வெளியிட்டதும், கடைசியில் இவ்விவாதம் விரிவடைந்து, அறிவியலின் தன்மை குறித்த முரண்பாடாக முற்றியுள்ளது. நூலின் முதல் பக்கம் இவரை தசுக்கனி பேரரசின் முதன்மைக் கணிதவியலாளராகவும் மெய்யியலாளராகவும் குறிப்பிடுகிறது. மதிப்பிடு நூலின் அறிவியல் நடைமுறை பற்றிய கலீலியோவின் வளமான எண்ணக் கருக்கள் செறிந்திருந்ததால், இது அவரது அறிவியல் கொள்கை அறிக்கையாகவே கருதப்படுகிறது. பாதிரி கிராசி 1619ன் தொடக்கத்தில், 1618 ஆம் ஆண்டின் மூன்று வால்வெள்ளிகள் குறித்த வானியல் விவாதம் எனும் சிறுநூலைப் பெயரின்றி வெளியிட்டார். இது முந்தைய ஆண்டு நவம்பரில் தோன்றிய வால்வெள்ளியின் தன்மையைக் குறித்து அலசியது. அதில் கிராசி வால்வெள்ளி புவியில் இருந்து நிலையான தொலைவுள்ள பெருவட்டத்தில் இயங்கும் நெருப்பு வான்பொருளாகும் எனும் முடிவை வெளியிட்டிருந்தார். மேலும் இது நிலாவை விட மெதுவாக இயங்குவதால் இது நிலாவை விட நெடுந்தொலைவில் அமைந்திருக்கவேண்டும் எனவும் அறிவித்திருந்தார்.

கலீலியோ தான் இயற்பியல் விதிகளை மிகத் தெளிவாக கணிதவியலாக விளக்கிய முதல் அறிவியலாளர் ஆவார். கலிலியோ 1609ல் 3x உருப்பெருக்கல் கொண்ட ஒரு தொலைநோக்கியை உருவாக்கினார். அதன் பின்னர் அவர் 30x உருபெருக்கல் வரை கொண்ட தொலைநோக்கிகளை உருவாக்கினர். ஒரு கலிலியன் தொலைநோக்கி மூலம் பார்வையாளர் பெரிதான நிமிர்ந்த படங்களை பார்க்க முடியும். கலிலியோ இதை வானத்தை ஆராய பயன்படுத்தினார். அந்த காலத்தில் இந்த தேவைக்கான நல்ல தொலைநோக்கிகளை உருவாக்கக்கூடிய வெகு சிலரில் அவர் ஒருவர். ஆகஸ்ட் 25, 1609ல், அவர் வெனிஸ் நகர சட்டமியற்றுபவர்களிடம் சுமார் 8 அல்லது 9 உருப்பெருக்கல் கொண்ட தன் தொலைநோக்கியை விவரித்தார். அவரது தொலைநோக்கிகளை கலிலியோ கடல்வணிகர்களுக்கு அளித்து பணம் ஈட்டினார். அவ்வணிகர்கள் அத்தொலைநோக்கிகளை கடலில் நன்கு பயன்படுவதாக பார்த்தனர். அவர் சைட்ரஸ் நுன்சியஸ் (விண்மீன்கள் தூதன்) என்ற தலைப்பில் ஒரு சிறிய ஆய்வு கட்டுரையில் மார்ச் 1610 இல் தனது ஆரம்ப தொலைநோக்கி வானியல் ஆய்வுகளை வெளியிட்டார்.

ஜனவரி 7, 1610ல் கலிலியோ வியாழனுக்கு அருகில் மூன்று நட்சத்திரங்களை கண்டார். அதற்கடுத்த இரவுகளில் இந்த “நட்சத்திரங்கள்” வியாழனுக்கு ஒப்பிடும்போது நகர்கின்றன என்பதை கவனித்தார். ஆதலால் அவைகள் நிலையான நட்சத்திரங்கள் அல்ல என்று கண்டறிந்தார். 10 ஜனவரியில் அவற்றில் ஒன்று மறைந்துவிட்டதை அவர் கண்டார். அது வியாழனின் பின் மறைந்திருக்கவேண்டும் என்று அவர் எண்ணினார். ஆதலால் அம்மூன்றும் வியாழனின் நிலாக்களாக இருக்கவேண்டும் என்பதை அவர் கண்டார். அவர் ஜனவரி 13 ஆம் தேதி நான்காவது வியாழனின் நிலாவை கண்டறிந்தார். பிறகு வானவியலாளர்கள் இந்நான்கு நிலைகளையும் கலிலியன் நிலாக்கள் என்று அவர் பெருமையில் பெயரிட்டனர். இந்த நிலாக்கள் தற்போது ஐயோ, ஐரோப்பா, கேனிமெட் மற்றும் கால்லிச்டோ என்று அழைக்கப்படுகின்றன. வியாழன் கோளைப் பற்றிய தனது இந்த கவனிப்புகள் வானவியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது. ஏனெனில் அதுவரை அனைத்து வானியல் பொருட்களும் பூமியையே சுற்றுகின்றன என்ற அரிஸ்டாட்டிலின் கருத்தே உலகில் மேலோங்கியிருந்தது. மேலும் முதலில் நிறைய வானவியலாளர்கள் இதை நம்ப மறுத்தனர். தனது ஆய்வுகள் கிறிஸ்டோபர் க்ளவியசின் ஆய்வுமையத்தால் சரி என்று கூறப்பட்டது. அதன் பின்னர் 1611ல் ரோமுக்கு சென்ற போது அவர் ஒரு நாயகனின் வரவேற்பு பெற்றார். கலிலியோ அடுத்த பதினெட்டு மாதங்களில் செயற்கைக்கோள்களை கண்காணித்து தொடர்ந்து, 1611ன் மத்தியில் அவர் அவை குறித்த குறிப்பிடத்தக்க துல்லியமான மதிப்பீடுகளை பெற்றார். கெப்லெர் இத்தகைய காரியம் சாத்தியமே இல்லை என்று எண்ணினார்.

கலிலியோ சூரியனின் கரும்புள்ளிகளை கவனித்த முதல் ஐரோப்பியர்களில் ஒருவர் ஆவார். கெப்லர் அறியாமல் 1607ல் இதை கண்டார். ஆனால் அப்போது அவர் அதை மெர்குரி என எண்ணினார். அவர் முன்னர் மெர்குரி என்று சார்லிமேக்னி காலத்தில் தவறாக கருதப்பட்ட ஒரு அவதானிப்பை அது உண்மையில் சூரியனின் கரும்புள்ளி என கூறினார். சூரியனின் கரும்புள்ளிகளின் இடமாற்றம் சூரியன் சுழல்கிறது என்ற கெப்லரின் கூற்றை ஆதரித்தது. மேலும் பிரான்செஸ்கோ சிச்சியின் கரும்புள்ளி மீதான கவனிப்புகள் ப்டோலேமியின் வானியல் கூற்றுகளை தகர்த்தது. தனது தொலைநோக்கி மூலம் தாமஸ் ஹாரியட் ஏற்கனவே நிலாவில் வெளிச்சம், அது ஒரு கச்சிதமான உருண்டையாக இருந்திருந்தால் எப்படி பரவ வேண்டுமோ அப்படி பரவவில்லை என்பதை கண்டார். ஆனால் தனது அறியாமையால் அதை சரியாக புரிந்துகொள்ளாமல் போய்விட்டார். கலிலியோவோ அவ்வெளிச்சத்தின் பரவலில் இருக்கும் மாறுதல்களை சரியாக நிலாவில் மலைகளும் குழிகளும் உள்ளன என்று புரிந்துகொண்டார். தனது ஆய்வில் அவர் நிலாவின் டாப்பலாஜிக்கல் வரைபடங்களை வரைந்தார். மேலும் நிலாவின் மலைகளின் உயரத்தை கணிக்கவும் செய்தார். நிலவு நீண்ட காலமாக அரிஸ்டாட்டில் கூறியபடி ஒரு அருமையான உருண்டை அல்ல என்பது அப்போது தெரியவந்தது.

செப்டம்பர் 1610 முதல், கலிலியோ வெள்ளி நிலவை ஒத்த பரிமாணங்களை காட்டின என்பதை கவனித்தார். நிக்கோலஸ் கோப்பர்நிக்கசால் உருவாக்கப்பட்ட சூரியமைய மாதிரி சூரியனை சுற்றி வீனஸ் சுற்றுவதனால் அதன் அனைத்து நிலா போன்ற பரிமாணங்களையும் பார்க்க முடியும் என்று கூறுகிறது. ஆனால் டாலமியின் பூமிமைய மாதிரி மூலம் இதை விவரிக்க முடியாது. ஆதலால் இதன் மூலம் பூமிமைய கொள்கை தகர்க்கப்பட்டது. ஆனாலும் முழு சூரியமைய கொள்கை தேவையில்லாமல் பாதி சூரியமைய மற்றும் பாதி பூமிமைய கொள்கை கொண்டும் இதை விளக்கமுடியும். ஆதலால் நிறைய வானவியலாளர்கள் முதலில் பாதி சூரியமைய மற்றும் பாதி பூமிமைய கொள்கைக்கு மாறி பின்னர் வேறு பிற வாதங்களின் விளைவாக முழு சூரியமைய கொள்கைக்கு மாறினார். கலிலியோ சனி கிரகத்தை கவனித்தார். மேலும் முதலில், அதன் வளையங்களை தவறாக கிரகங்கள் என எண்ணினார். கலிலியோ 1612ல் நெப்டியூன் கிரகத்தை பார்த்தார். அது மங்கலான நட்சத்திரங்களில் ஒன்றாக அவரது கையேடுகளில் குறிப்பிடப்பட்டிருந்தது. அவருக்கு அது ஒரு கிரகம் என்று தெரியவில்லை. ஆனால் அவர் அதை கண்காணிப்பதை இழப்பதற்கு முன் நட்சத்திரங்களுக்கு ஒப்பிடும் போது அது நகர்கிறது என்ற கவனிப்பை ஏற்படுத்தியிருந்தார்.

1595 மற்றும் 1598 க்கு இடையில், கலிலியோ ஒரு வடிவவியல் மற்றும் இராணுவ திசைகாட்டியை உருவாக்கினார். இராணுவ வீரர்களுக்கு இது பீரங்கிகளை சரியாக உயர்த்துவது மட்டுமல்லாமல் எவ்வளவு வெடி மருந்து தேவை என்பதை நிர்ணயிக்கவும் பயன்பட்டது. 1593ல் கலிலியோ ஒரு வெப்பமானி உருவாக்கினார். ஒரு விளக்கில் உள்ள காற்றின் விரிவடைதல் மற்றும் சுருங்குதலை பயன்படுத்தி அதனுடன் இணைக்கப்பட்ட குழாயில் நீரில் இயக்கத்தை உருவாக்கி இச்செயலை அவர் சாத்தியமாக்கினார். கலிலியோவின் மாணவர் வின்சென்சோ விவியாணி கலிலியோவின் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். அதில் வெவ்வேறு எடை கொண்ட பொருட்களை அவர் பைசாவின் சாய்ந்த கோபுரத்தில் இருந்து விழச்செய்து அவை இரண்டும் கீழே வர ஒரே நேரம் எடுத்துக்கொள்கின்றன என்பதை காட்டினார். இது அரிஸ்டாட்டிலின் பொருட்கள் விழ எடுத்துக்கொள்ளும் நேரம் அவைகளின் எடையை பொருத்து அமையும் என்ற கூற்றை பொய்ப்பித்தது. கலிலியோ ஒரு பொருள் விழும் போது அது வெற்றிடத்தில் விழுந்தால் அது சீரான வேகமாற்றத்துடன் விழும் என்று அனுமானித்திருந்தார். மேலும் ஓய்வில் இருந்து ஆரம்பித்து சீரான வேகவளர்ச்சியில் செல்லும் ஒரு பொருளுக்கான இயக்கவியல் விதியை (d ∝ t 2) கலிலியோ சரியாக கணித்திருந்தார். மேலும் இயற்பியல் மற்றும் கணிதம் ஆகிய தூய துறைகளில் நிறைய பங்களிப்புகள் வழங்கியிருக்கிறார்.

பதினேழாம் நூற்றாண்டின் அறிவியல் புரட்சியில் மிக முதன்மையான பங்கை ஆற்றியுள்ளார். கலீலியோ “நோக்கு வானியலின் தந்தை”, “நவீன இயற்பியலின் தந்தை”, “நவீன அறிவியலின் தந்தை” என்று பலவாறாகப் பெருமையுடன் அழைக்கப்படுகிறார். தொலைநோக்கி மூலம் வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தல், வியாழனின் நான்கு பெரிய நிலாக்களைக் (அவரது புகழைச் சொல்லும் வகையில் கலிலியின் நிலவுகள் என்று அழைக்கப்படுகின்றன) கண்டுபிடித்தல், சூரியப்புள்ளிகளை நோக்குதல் மற்றும் ஆராய்தல் ஆகியவை நோக்கு வானியலுக்கு இவர் அளித்த பெரிய பங்களிப்புகள் ஆகும். கலீலியோவின் சூரியமையக் கொள்கை அவரது வாழ்நாளில் பிறரால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. நிறைய வானியலாளர்கள் இந்தக் கோட்பாட்டை எதிர்த்தனர். அக்காலத்தில், பெரும்பாலான வானியலாளர்கள் புவிமையக் கொள்கையையோ, தைக்கோனிக் அமைப்பையோ ஏற்றுக் கொண்டிருந்தனர். கலீலியோ பின்னர் தனது “இருவகை முதன்மை உலகக் கண்ணோட்டம் சார்ந்த உரையாடல்கள்” என்ற புத்தகத்தில் அவருடைய சூரியமையக் கொள்கைக்கு நிறைய சான்றுகளை அளித்தார். சூரியனை மையமாகக் கொண்டு புவியும் மற்ற கிரகங்களும் சுற்றுகிறது என்ற கிறித்தவ சமய நம்பிக்கைகளுக்கு எதிரான உண்மையை மக்களிடையே வெளிப்படுத்தியமைக்காக 1642 முதல் இறக்கும் வரை கத்தோலிக்க திருச்சபையால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

கலீலியோ தன் இறுதிக் காலம் முழுவதையுமே வீட்டுச்சிறையிலேயே கழித்தார். கலீலியோ இப்படி வீட்டுச்சிறையில் இருந்தபோது தான் தன் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றும் இறுதிப் படைப்புமான இரண்டு புதிய அறிவியல்கள் என்ற நூலை எழுதினார். தான் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் நடத்திய, தற்போது இயங்கியல், பொருட்களின் வலிமை என்று அறியப்படும் துறைகளைப் பற்றிய ஆய்வுகளை இந்த நூலில் தொகுத்து அளித்தார். பின்னர் இவர் காய்ச்சலும் இதய குலைவும் கண்டு ஜனவரி 8, 1642ல் தனது 77வது வயதில், ஆர்செட்ரி, இத்தாலியில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். தசுக்கனியி பேரரசரான இரண்டாம் பெர்டினாண்டோ, இவரது தந்தையும் முன்னோரும் அடக்கம் செய்யப்பட்டுள்ள சாந்தா குரோசில் உள்ள பாசிலிக்காவில் முதன்மைப் பகுதியில் அடக்கம் செய்து ஒரு சலவைக்கல் நினைவுச் சின்னமும் எழுப்பிட விரும்பினார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!