Home செய்திகள்கீழக்கரை செய்திகள் சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் பழனியில் நூதன மோசடி…லட்சக்கணக்கில் பணம் சுருட்டல்..வீடியோ..

சதுரங்க வேட்டை திரைப்பட பாணியில் பழனியில் நூதன மோசடி…லட்சக்கணக்கில் பணம் சுருட்டல்..வீடியோ..

by ஆசிரியர்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நடைபெறும் சம்பவத்தை போல நூதன முறையில் ஏமாற்றி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றிய சம்பவம் அரங்கேறியுள்ளது. அதன் விபரம் வருமாறு:-

பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த சாதாரண மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பலரிடமும் பார்வை குறைபாடுடைய மாற்றுத்திறனாளி தனது பெயரை ஜான் மூர்த்தி என்றும் தனது ஊர் திருச்சி என்று சிலரிடமும் அமரபூண்டிக்கு அருகில் உள்ள கரட்டுப்பிரிவு என்று சிலரிடமும் சொல்லி பழகியுள்ளார். இவ்வாறு பல்வேறு நபர்களிடம் பழக்கம் ஏற்ப்படுத்திய பிறகு தான் மாற்றுத்திறனாளி என்பதால் தனக்கும் தன்னைப்போன்ற பல்வேறு வகையான மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காகவும் வெளிநாட்டில் இருந்து லட்சக்கணக்கில் பணம் வருவதாகவும், இந்த பணத்தை வைத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை என்று கூறி தன்னைப்போன்ற பல்வேறு மாற்றுத்திறனாளிகளிடமும் ஆலோசனை செய்ததில் கஷ்டப்படும் ஏழை எளிய மக்களுக்கு லோன் கொடுப்போம் என்றும் அவ்வாறு லோன் கொடுக்கும்போது வாங்கும் பணத்தில் பாதியை கட்டாமல் மீதமுள்ள பணத்தை மட்டும் கட்டலாம் என்றும் சொல்லி ஒரு நபருக்கு அதிகபட்சமாக மூன்று லட்சம் வரையும் கொடுக்க இருக்கிறோம் என்றும், லோன் வாங்கும் நபர்கள் அதில் பாதியை அதாவது ஒன்னரை லட்சத்தை கட்டினால் போதும் என்றும் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசியுள்ளார்.

மேலும், தான் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்தில் DROவாக (மாவட்ட வருவாய் அலுவலர்) வேலை செய்வதாகவும் அங்குள்ள சிறு குழந்தையை கேட்டால் கூட என்னை தெரியும் என்று சொல்லி அதற்கேற்ற நடை உடை பாவனைகளை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வேலைகளுக்கு தன்னுடன் அமரபூண்டி கரட்டுப்பிரிவை சேர்ந்த சில பெண்களையும் கூட்டி வந்துள்ளார். இதை உண்மை என நம்பிய பழனி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த அப்பாவி பொதுமக்கள் தாங்கள் மிகவும் கஷ்டத்தில் இருப்பதாகவும் தனக்கு இந்த நிதியுதவி கிடைத்தால் எங்கள் குடும்பம் கடனில்லாமல் வாழ முடியும் என்றும் கூறி ஜான் மூர்த்தியிடம் லோன் வாங்கித்தருமாறு கோரியுள்ளனர். இந்த வார்த்தை அப்பாவி பொதுமக்களின் வாயிலிருந்து வரவேண்டும் என காத்திருந்த ஜான் மூர்த்தி தான் உடனடியாக இது தொடர்பான ஆட்களிடமும் அதிகாரிகளிடமும் பேசி லோன் வாங்கித்தருவதாகவும் இந்த லோனை பெற விண்ணப்ப கட்டணம் மற்றும் பல்வேறு செலவினங்களுக்காக ஒவ்வொரு நபரும் 4500 ரூபாய் முன்பணம் கட்ட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இவரது பேச்சை உண்மை என்று நம்பிய 86 பேர் (தோராயமாக) கடந்த ஒரு மாதத்திற்கு முன்னதாக 4500 ரூபாய் முன்பணம் கட்டியுள்ளனர். இவ்வாறு பணம் கொடுத்தவர்களில் பல மாற்றுத்திறனாளிகளும் அடக்கம். இதில் சில பெண்கள் தங்கள் கணவருக்கு தெரியாமல் கடன் வாங்கி பணம் கட்டியுள்ளனர். பொதுமக்களுக்கு எவ்வித சந்தேகமும் வராமல் இருக்க லோனை தயார் செய்வதற்காக பல்வேறு ஊர்களுக்கு செல்வதாக சொல்லி கடந்த ஒருமாத காலமாக கடத்திய பின் நேற்று (29.03.19) அனைவருக்கும் லோன் தர உள்ளோம் என்று சொல்லி ஓரிடத்திற்கு வர செய்து காக்க வைத்துள்ளார். காலை முதல் மாலை வரை காத்திருந்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. காத்திருந்த பொதுமக்கள் ஜான் மூர்த்திக்கு போன் செய்தபோது ஜான் மூர்த்தியின் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த பொதுமக்கள் பல்வேறு இடங்களில் விசாரித்தபோது உண்மை வெளிப்பட்டு சதுரங்க வேட்டை பட பாணியில் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பழனி நகர் காவல் நிலையத்தில் 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஒன்று திரண்டு வந்து தாங்கள் மேற்படி நபரால் ஏமாற்றப்பட்டதாகவும், தங்களது பணத்தை மீட்டுத்தரக்கோரியும் புகார் அளித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவத்தின் மூலமாக பொதுமக்கள் முதலில் தெரிந்துகொள்ள வேண்டியது எந்த ஒரு அறிமுகமில்லாத நபரையும் நம்பக்கூடாது. ஆசை வார்த்தைகளுக்கு அடிபணியக்கூடாது, சந்தேகம் வந்தால் உடனடியாக காவல்துறையிடம் புகார் அளிக்க வேண்டும். பணத்தை கொடுப்பதற்கு முன்னதாக பலமுறை ஆலோசிக்க வேண்டும் என்பதே. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக பல ஆண்டுகளாக பாடுபட்டு வருகிற எங்களிடம் கேட்டிருந்தால்கூட இது பொய் என சொல்லியிருப்போம். வெளிநாட்டில் இருந்து எந்த ஒரு நிதியும் யாருக்கும் வருவதில்லை. இவை அனைத்தும் பொய். இனிமேலாவது முன்பின் அறிமுகமில்லாத நபர்களிடம் பணத்தை கொடுத்து ஏமாறாமல் இருக்க பொதுமக்களையும் மாற்றுத்திறனாளிகளையும் கேட்டுக்கொள்கிறோம். இதன் மூலமாக தமிழக அரசுக்கும், காவல் துறைக்கும் நாங்கள் வைக்கும் வேண்டுகோள் இதுபோன்ற மோசடி குற்றச்சாட்டில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், எடுக்கப்படும் நடவடிக்கைகள் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபட நினைக்கும் அனைவருக்கும் ஒரு பாடமாக இருக்கும் வகையில் அமைய வேண்டுமென அவ்வமைப்பின் மாவட்ட செயலாளர் பகத்சிங் மற்றும் மாவட்ட நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்தார்கள்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!