கடலில் தவறி விழுந்த மீனவர் மாயம் சக மீனவர்கள் தேடி வருகின்றனர்…

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து நேற்று காலை கடலுக்குள் மீன்பிடிக்க மீனவர்கள் விசை படகுகள் மூலம் சென்று இன்று காலை மீன் பிடித்து கொண்டு கரை திரும்பி கொண்டிருந்தனர்.

இந்நிலையில் தங்கச்சிமடத்தை சேர்ந்த பாஸ்கரன் என்பவருக்கு சொந்தமான படகில் பாஸ்கரன், சிவா, தமிழ், மாணிக்கம், கென்னடி மற்றும் ஜெபநேசன் ஆகியோர் மீன் பிடித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர் அப்போது நடுகடலில் திடீரென ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக படகில் இருந்த ஜெபநேசன் என்ற மீனவர் நடுகடலில் தவறி விழுந்தார்.

இதனை பார்த்த சக மீனவர்கள் உடனடியாக கடலில் குதித்து மீனவர் ஜெபநேசனை அந்த பகுதி முழுவதும் தேடினார்கள் ஆனால் மீனவர் ஜெபநேசனை கண்டுபிடிக்க முடியவில்லை. கடலில் விழுந்த மீனவர் கிடைக்காததால், இந்திய கடலோர காவல் படைக்கு சொந்தமான ரோந்து கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் தவறி விழுந்த மீனவரை தேடி தரும்படி மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.