இராமேஸ்வரம் துறைமுகத்தில் மீன்துறை அதிகாரிகளுக்கும் படகு உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் படகுகளின் ஆய்வு பல மணி நேரம் நிறுத்தம்..

தமிழகத்தில் மீன்பிடி தடைக் காலம் நிறைவடைய சில தினங்களே  உள்ள நிலையில் இராமேஸ்வரத்தில் மீன்துறை அதிகாரிகளுக்கும்,  படகு உரிமையாளர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு படகுகளின் ஆய்வு பணிகள் நிறுத்தப் பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது

கடல் மீன்பிடிப்புள்ள பகுதிகளில்  மீன்கள் இனப் பெருக்கத்துக்காக ராமநாதபுரம், புதுக்கோட்டை,  தூத்துகுடி,  நாகை, தஞ்சை, சென்னை, திருவள்ளுர்  உள்ளிட்ட நீலாங்கரை முதல் குளச்சல் வரையிலான  கிழக்கு கடற்கரை துறை முகங்களில்  தமிழகத்திலுள்ள 13 மீன்பிடி  மாவட்டங்களில் மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்பரல் 15ம் தேதி துவங்கியது. இந்த தடை காலம் வரும் 14 ந் தேதி நள்ளிரவில்  நிறைவடைய உள்ளது.

இந்நிலையில்  இன்று இராமேஸ்வரம் பாம்பன், மண்டபம் உள்ளிட்ட ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள அனைத்து துறைமுகங்களிலும் சென்னை, நாகை,   கன்னியாகுமரி, திருச்சி, புதுக்கோட்டை, தூத்துக்குடி, மதுரை மற்றும்  திண்டுக்கல்  மாவட்டங்களைச் சேர்ந்த நான்கு மீன்துறை உதவி இயக்குநர்கள் தலைமையில் 55  பேர் கொண்ட அதிகாரிகள் குழு படகுகளில் ஆய்வு மேற்கொண்டனர்.  படகுகளில் பொருத்தியுள்ள இயந்திரங்களின் குதிரைத்திறன் (HP )  படகின் நீளம் அகலம், படகுகளின் திறன், புதுப்பிக்கப்பட்ட படகு ஆவணங்கள், காப்பீடு ஆவணங்கள் மற்றும் ஒளிரும் மையால் எழுதப்பட்டுள்ள படகின் பதிவு எண் உள்ளிட்டவைகளை ஆய்வு செய்துவந்தனர்.

இந்நிலையில் ராமேஸ்வரம் துறைமுகத்தில் ஆய்வுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த படகுகளை படம் பிடித்துள்ளனர்.  இதனையடுத்து படகு உரிமையாளார்கள் அதிகாரிகளை தடுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர், அங்கு ஏற்பட்ட பதட்ட நிலைமையால் படகுகளின் ஆய்வு பல மணி நேரமாக நிறுத்தப்பட்டது.

இதனால் ராமேஸ்வரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.   மேலும் மீன்பிடி தடையில்லா சான்றிதழ்கள் வழங்குவதில் சிக்கல் நீடித்து வருவதால் திட்டமிட்டபடி வரும் 16 ந் தேதி மீன்பிடிக்க அனுமதி சீட்டு வழங்கப்படுமா?  என மீன்பிடி தொழிலாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.