இந்திய எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை தாக்குதல் மீனவர்கள் குற்றச்சாட்டு….

இந்திய கடல் பகுதியை பாதுகாப்பது குறித்தும் கடத்தல் சம்பவங்கள், சமூக விரோத செயல்களை தடுப்பது குறித்து ராமேஸ்வரம் இந்திய கடற்படை முகாமில் இந்திய கடற்படை, கடலோர காவல்படை அதிகாரிகள், மரைன் போலீசார், சுங்கத்துறை அதிகாரிகள், உளவு பிரிவு அதிகாரிகள் கூட்டத்தில் கடலில் மீனவர்களுக்கு ஏற்படும் பிரச்னை குறித்தும் மீனவர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்திய கடல் எல்லைக்குள் வந்து இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதாக மீனவர்கள் குற்றம் சாட்டினர். இலங்கை எல்லைக்குள் இந்திய மீனவர்கள் வருவதாக புகைப்பட ஆதாரங்களை இலங்கை கடற்படை தங்களிடம் தெரிவித்து வருகிறது. இந்திய எல்லைக்குள் இலங்கை கடற்படை வருவதை ஆதாரத்துடன் நிரூபித்தால் இரு நாட்டு கடற்படை அதிகாரிகளும் சந்திக்கும்போது இதுகுறித்து தெரிவிக்கப்படும் என்றனர்.

மேலும் கடற்படை அதிகாரி வினீத் கூறுகையில்: சர்வதேச கடல் எல்லை வழியாக சட்ட விரோத கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதைத் தடுக்க இந்திய, இலங்கை கடற்படையினர் கூட்டு ரோந்து குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற்று வருகிறது. கடந்தாண்டு 350க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படை சிறை பிடித்தபோது 50 மீனவர்களிடம் மட்டும் அடையாள அட்டை இருந்துள்ளது.

தேசிய பாதுகாப்புப் படை ஆலோசனைப்படி படகுகளில் நவீன கருவி பொருத்தப்பட உள்ளது. முதல் கட்டமாக தமிழ்நாடு, குஜராத், புதுச்சேரி மாநில படகுகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் ஆபத்து காலங்களில் மீனவர்களுக்கு உடனடியாக உதவ முடியும் என்றார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.