Home செய்திகள் சிவகாசி அருகே  பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து சேதம்..

சிவகாசி அருகே  பட்டாசு கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டாசுகள் எரிந்து சேதம்..

by ஆசிரியர்

சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள பாறைப்பட்டி, மீனம்பட்டி, அனுப்பங்குளம், மேட்டமலை உட்பட பல ஊர்களிலும் சுமார் 800க்கும் மேற்பட்ட பட்டாசு விற்பனை கடைகள் உள்ளன. தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் பட்டாசு கடைகளில் விற்பனை துவங்கியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக, இந்தப் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில், அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாக பட்டாசுகள் இருப்பு வைத்திருந்ததாகக் கூறி சில கடைகளுக்கு வருவாய்த்துறை அதிகாரிகள் சீல் வைத்தனர். இதனால் சிவகாசி – சாத்தூர் சாலையில் உள்ள பாறைப்பட்டி பகுதியில் பெரும்பாலான பட்டாசு விற்பனை கடைகள் நேற்று மூடப்பட்டிருந்தன. சிவகாசி, புதுத்தெரு பகுதியைச் சேர்ந்த ஜோதீஸ்வரன் (33) என்பவருக்கு சொந்தமான பட்டாசு விற்பனை கடை பாறைப்பட்டியில் உள்ளது. நேற்று மாலை, பூட்டியிருந்த இவரது பட்டாசு கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த சிவகாசி தீயணைப்பு நிலைய அதிகாரி வெங்கடேசன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் பட்டாசு கடையில் வைத்திருந்த பட்டாசுகள் பயங்கரமாக வெடித்து சிதறியதால், தீயணைப்பு வீரர்களால் கட்டிடத்தின் அருகே செல்ல முடியவில்லை. விபத்து நடந்த பட்டாசு கடைக்கு அருகிலும் ஏராளமான பட்டாசு விற்பனை கடைகள் இருந்ததால், அந்தக் கடைகளுக்கு தீ பரவி விடாமல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டனர். சுமார் 3 மணி நேரம் போராடி பட்டாசு கடையில் ஏற்பட்ட தீயை தீயணைப்பு வீரர்கள் அணைத்தனர். அந்தப் பகுதியில் பெரும்பாலான பட்டாசு கடைகள் மூடப்பட்டிருந்ததாலும், தீ விபத்து ஏற்பட்ட பட்டாசு கடையில் வேலையாட்கள் யாரும் இல்லாததாலும் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு கடையில் இருப்பு வைத்திருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து சேதமானதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!