ஏர்வாடி சந்தனக் கூடு திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது…

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா தென் மாநிலங்களில் உள்ள புண்ணிய தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது. மத நல்லிணக்கத்திற்கு கடந்த பல நூறாண்டுகளாக எடுத்துக் காட்டாக விளங்குகிறது. நாட்டின் பல இடங்களில் மன நலம் பாதித்த ஏராளமானோர் இங்கு வந்து தங்கி சிறப்பு வழிபாட்டிற்கு பின் குணமாகி வீடு திரும்புகின்றனர். இங்கு சந்தனக் கூடு பிரபலமானது. பாதுஷா நாயகத்தின் 844 ம் ஆண்டு சந்தனக் கூடு திருவிழா ஜூலை 14ல் மவ்லீது ஷரீப்புடன் ஆரம்பமானது. மவ்லீது ஷரீப் தொடர்ந்து 23 நாள் நடைபெறுகிறது.

நேற்று முன் தினம் மாலை அடி மரம் நடப்பட்டது. நேற்று மாலை 5 மணியளவில் பேன்ட் வாத்தியம் இசையுடன் யானை, குதிரைகள் அணி வகுத்து வர கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. இரவு 7. 12 மணியளவில் கொடியேற்றப்பட்டது. ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அறங்காவலர் குமரன் சேதுபதி, தாசில்தார்கள் முத்துலட்சுமி, தமீம்ராஜா உள்பட பலர் பங்கேற்றனர். ஆகஸ்ட் 5 மாலை சந்தனக் கூடு துவங்கி ஆகஸ்ட் 6 அதிகாலை சந்தனக் கூடு ஊர்வலம் வந்து புனித சந்தனம் பூசும் நிகழ்வு நடக்கிறது. ஆகஸ்ட் 12 காலை 8 மணிக்கு குரான் தமாம் செய்து சிறப்பு துவா நடக்கிறது.

அன்றைய தினம் மாலை 5 மணிக்கு கொடி நிறைவு நிகழ்வு நடக்கிறது.ஏற்பாடுகளை ஹக்தர் பொது மகா சபை நிர்வாகத்தினர் செய்துள்ளனர். கீழக்கரை டி எஸ்.பி., ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.