இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா உண்டியல்களுக்கு வக்பு வாரியம் சீல் வைப்பு…

இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தமிழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.  அதைத் தொடர்ந்து வக்பு வாரியத்தில் உள்ள குளறுபடிகளை களையவும், வக்பு வாரிய ஆக்கிரமிப்பு சொத்துக்களை மீட்கவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டது.

இந்நிலையில் தமிழ்நாடு வஃபு வாரிய மாநில உதவி செயலாளர் பசிர்அகமது தலைமையில் ஏர்வாடி தர்ஹாவில் உள்ள உண்டியில்களுக்கு சீல் வைக்கப்பட்டது.  இச்சம்பவத்திற்கு முன்னர் தர்ஹாவில் உள்ள  அனைத்து கதவுளையும் அங்குள்ளவர்கள் மூடினர்.  ஆனால் RDO சுமன் தலைமையில் அதிகாரிகள் ஒத்துழைப்புடன் பூட்டை உடைத்து உள்ளே சென்று அங்கிருந்த உண்டியல்களுக்கு போலீஸ் பாதுகாப்புடன் சீல் வைத்தனர்.

இந்த செயலை கண்டித்து தர்ஹாவின் நிர்வாகத்தினர் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.  இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பதற்றமாக காணப்பட்டது.  இச்சம்பவத்தின் போது  கீழக்கரை காவல் துறை துணை கண்காணிப்பாளர் ரவிசந்திரன் தலைமையில் 100கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்ஹா தமிழகத்தில் உள்ள தர்ஹாக்களில் அதிகமான வசூல் ஆகும் இடங்களில் ஒன்றாகும், ஆனால் வக்பு வாரிய சட்டதிட்டங்களுக்கு உட்படாமல் தனி அமைப்பாகவே கால காலமாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.  அதே போல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்களிடம் “அடிமைச் சீட்டு” என்ற பெயரில் அங்குள்ளவர்கள் பணத்தை பெற்றுக் கொண்டு துண்டு சீட்டை உண்டியல் போடுவது போன்ற குற்றச்சாட்டும் உண்டு.

இந்த நடவடிக்கை ஏர்வாடி தர்ஹா போன்ற இடங்களில் சீல் வைப்பதோடு மட்டுமல்லாமல், தமிழகத்தில் பல சமூக விரோதிகளாலும், அரசியல் மற்றும் பிற அமைப்புகளாலும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இஸ்லாமிய சமுதாய மக்களின் எதிர்பார்ப்பு.