தூத்துக்குடியில் பல் வேறு தேர்தல் பிரச்சாரம் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள்..

தேர்தல் திருவிழா: ”100 சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற வாக்காளர்கள் முன்வர வேண்டும்”. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  கல்லூரி மாணவ,மாணவிகளிடையே வேண்டுகோள்.

தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் வாக்காளர் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்சந்திப் நந்தூரி தலைமை வகித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மாணவ, மாணவிகளால் உருவாக்கப்பட்டிருந்த கண்காட்சியை பார்வையிட்டார்.

பின்னர் அவர் மாணவர்களிடையே பேசுகையில் “2019 தேர்தல் திருவிழாவில் வாக்காளர்கள் 100சதவீதம் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்ற முன்வர கல்லூரி மாணவ, மாணவிகள் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் ”

“2019 தேர்தல் சிறப்பு வாய்ந்த ஒரு தேர்தலாக அமைந்துள்ளது. 100சதவீதம் வாக்களித்து தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்ற வேண்டும்” என்று பேசினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) அணு, திருச்செந்தூர் கோட்டாட்சியர் தனபிரியா, வட்டாட்சியர் காளிராஜ், துணை வட்டாட்சியர் சேகர், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் சீனி வாசன், நாசரேத் பேரூராட்சி செயல் அலுவலர் கே.ஆர்.பி.மணிமொழி செல்வன் ரெங்கசாமி, கிராம நிர்வாக அதிகாரி சுப்பிரமணியன், தலையாரி முருகன், கண்ணன், நாசரேத் ஜெயராஜ் அன்னபாக் கியம் சி.எஸ்.ஐ. பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கோயில்ராஜ் ஞானதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதே போல்  நடைபெற உள்ள பாராளுமன்ற மற்றும் சட்ட மன்ற இடைத் தேர்தலில் 100சதவீதம் வாக்குப்பதிவை எட்டும் வகையில் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஆட்சியர் சந்தீப் நந்தூரி . பொதுமக்கள், மாணவர்கள், என ஆங்காங்கே விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்

இந்நிலையில் தருவைகுளம்  ஊராட்சியில் கடலோரப் பகுதியில் 2019 பொது தேர்தல் தொடர்பாக படகு உரிமையாளர்கள் சார்பாக அலங்கார விளக்குகள் மூலமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படும் வகையில் செய்யப் பட்டுள்ளது. இது பொது மக்களிடையே பெரும் வரவேற்பையும் ஆர்வத்தையும் ஏற்படுத்தி யுள்ளது குறிப்பிடத்தக்கது.

தூத்துக்குடியில் நடைபெற்ற திமுக தேர்தல் பிரச்சாரத்தில்  நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி  திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் நாட்டு படகு மீனவர்களை சந்தித்து வாக்கு சேகரித்து குறைகளை கேட்டறிந்தார்.

இதை தொடர்ந்து பேசிய அவர் மீனவர்களுக்கு திமுக ஆட்சி காலத்தில் செய்து கொடுக்கப்பட்ட பல்வேறு நலத் திட்டங்களை அதிமுக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். இந்த தேர்தலுக்குப் பிறகு அதிமுக அரசு அகற்றப்பட்டு திமுக ஆட்சிக்கு வரும் பொழுது மீனவர்களின் குறைகளை, அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய என்னால் முடிந்த வரையில் எல்லா உதவிகளையும் நான் செய்வேன்.

டீசல் மானியம், மீன்பிடித் தடை காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை, மற்றும் மீனவர்கள் மாயமானால் இறப்பினை உறுதிசெய்ய 7 ஆண்டுகள் வரை காத்திருக்கும் நிலை உள்பட மக்களை, சுற்றுச்சூழலை பாதிக்கும் என்ற எந்த ஒரு திட்டத்தையும் திராவிட முன்னேற்றக் கழகம் அனுமதிக்காது என பேசினார். இதைத் தொடர்ந்து, தமிழிசை சௌந்தரராஜனின் கருத்து சுதந்திரம் குறித்த கேள்விக்கு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கருத்து சுதந்திரம் என்பது எனக்கானது அல்ல.

திமுக என்ற இயக்கத்தின் சார்பாக சொல்கிறேன். மாணவி சோபியாவிடம் கருத்து சுதந்திரம் உள்ளதா? என்பது குறித்து தமிழிசை செளந்திரராஜனை கேட்க சொல்லுங்கள் என கூறினார். மேலும் தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதி மக்களை சந்தித்து வாக்கு கேட்ட கனிமொழி, மீனவர்களுக்கான தனி வங்கி , தூண்டில் பாலம் போன்றவை திமுக ஆட்சிக்கு வந்தால் நிச்சயம் அமைத்து தரப்படும் என்று வாக்குறுதி கொடுத்தார்