Home செய்திகள்உலக செய்திகள் உலக கதிரியக்க நாள் – வில்கெல்ம் இராண்ஜன் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு பெற்ற X- கதிர்களை கண்டுபிடித்த தினம் இன்று (நவம்பர் 8, 1895).

உலக கதிரியக்க நாள் – வில்கெல்ம் இராண்ஜன் இயற்பியலுக்கான முதல் நோபல் பரிசு பெற்ற X- கதிர்களை கண்டுபிடித்த தினம் இன்று (நவம்பர் 8, 1895).

by mohan

உலக கதிரியக்க நாள் (International Day of Radiology) என்பது இன்றைய நவீன மருத்துவத் துறையில் மருத்துவப் படிமவியலின் சிறப்பினை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள் ஆகும். X -கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நவம்பர் 8 ஆம் நாள் இது கொண்டாடப்படுகிறது. கதிரியலுக்கான ஐரோப்பியக் கழகம், மற்றும் கதிரியலுக்கான அமெரிக்கக் கல்லூரி ஆகியன இணைந்து 2012 ஆம் ஆண்டு முதன் முதலாக இந்நாளை அறிமுகப்படுத்தின. வில்லெம் கோன்ராடு இராண்ஜன் (Wilhelm Conrad Rontgen ஜெர்மனியைச் சேர்ந்த வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழக இயற்பியலாளர் ஆவார். இவர் நவம்பர் 8, 1895ல், மின்காந்தக் கதிர்வீச்சு அலைத்தொடர் வரிசையில் X-கதிர் (ஊடுகதிர்) என்று இன்று அழைக்கப்படும் அலைகள் பகுதியைக் கண்டுபிடித்தார். இன்று இவை ஊடுகதிர் அலைகள், X கதிர்கள், புதிர்க்கதிர்கள், ரோண்ட்கன் கதிர்கள் என்று பலவிதமாக அழைக்கப்படுகின்றன. இக்கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1901ல் இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.

வில்லெம் இராண்ஜன் மார்ச் 27, 1845ல் ஜெர்மனி, பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் ஒரு துணி தயாரிக்கும் வணிகரும் தொழிலதிபருமான பிரீட்ரிக் கான்ராட் ரோண்ட்கன் என்பவருக்கு ஒரே மகனாகப் பிறந்தார். 1865ல், சூரிக்கில் உள்ள ஃபெடரல் பாலிடெக்னிக் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் பயின்றார். 1869ல் சூரிக் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பல ஆய்வகங்களிலும் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது என ஆய்வுகள் நடந்து கொண்டிருந்தன. இராண்ஜனும் இவ்வாய்வில் தன்னை இணைத்துக் கொண்டார். 1895 ஆண்டு வெற்றிட குழாய் உபகரணங்களின் பல்வேறு வெளி விளைவுகளை ஆய்வு செய்துகொண்டிருக்கும் போது உருவாகும் எதிர்முனை கதிர்கள் அருகே உள்ள பேரியம் பிளாடினோசயனைடு பூசப்பட்ட அட்டையானது ஒளிர்வதை கண்டார். அதைத் தொடர்ந்து அவர் இருட்டு அறையில் மேலும் சில சோதனைகளை செய்து பார்த்தபோது இந்த ஒளிர்தலுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு வகை கதிர்களே காரணம் என்று அறிந்தார். எனினும் அதன் பண்புகள் தெரியாததால் அதற்கு எக்சு கதிர்கள் என்று பெயரிட்டார். பின்னர் அப்பெயரே நிலைத்துவிட்டது. இரண்டு வாரம் கழித்து தனது மனைவியின் கையை முதன்முதலின் ஊடுகதிர் படமெடுத்தார்.

ரோண்ட்கென் மூலக் கட்டுரையான ஒரு புது வகை கதிர்கள் என்ற தலைப்பில் டிசம்பர் 28, 1895 அன்று வெளியிட்டார். ஜனவரி 5, 1896 இல் ஒரு ஆஸ்திரிய பத்திரிகை இராண்ஜன் புதிய வகை கதிர்வீச்சு கதிர்களை கண்டறிந்ததை வெளியிட்டது. அவர் 1895 முதல் 1897 வரை எக்ஸ் கதிர்கள் பற்றி மூன்று ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டார். இன்று இராண்ஜன் கதிர்வீச்சு மருத்துவ சோதனையின் தந்தை எனப்படுகிறார். இராண்ஜன் அவரது கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமைகள் கோரியதில்லை. மேலும் அவருக்கு நோபல் பரிசு மூலம் கிடைத்த பணத்தை வூர்ட்ஃசுபர்கு பல்கலைக்கழகத்திற்கு நன்கொடையாக அளித்தார்.

X-கதிர்கள் (எக்ஸ் கதிர்கள்) மிக அதிக ஆற்றல் வாய்ந்த கதிர்கள் ஆகும். இரும்பு போன்ற உலோகங்களிலும் ஊடுருவிச் செல்ல வல்லவை. இவற்றின் அலைநீளம் 10 நானோமீட்டர் முதல் 0.01 நானோமீட்டர் வரையாகும். மின்காந்த புலங்களால் இக்கதிர்கள் பாதிப்பு அடையாது. எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்தன. ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்புமுறிவு ஒன்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அக்கதிர்கள் பயன்படுத்தப்பட்டன. மனித உடலை ஊடுருவிப் பார்க்க உதவுவது மட்டுமல்லாமல், வானூர்தி தளங்களில் பெட்டிகளைத் திறக்காமலேயே சோதனையிட உதவுகிறது. இக்கதிர்கள் நேர்கோட்டில் செல்கின்றன. இப்பண்பே அவைகள் நோயறி கதிரியலில் (Diagnostic Radiology) கதிர்ப்படம் எடுக்கப் பயன்படுகிறது.

X-கதிர்கள் உயிரியல் விளைவுகளைத் தோற்றுவிக்கின்றன. இப்பண்பு அவைகள் புற்றுநோய் மருத்துவத்தில் பயன்பட காரணமாகும். இம்முறை கதிர் மருத்துவம் (Radiation therapy) எனப்படும். இக்கதிர்கள் கேட்மியம் சல்பைடு (CdS), சிங்கேட்மியம் சல்பைடு (ZnCdS), போன்ற சில பொருட்களில் விழும்போது உடனொளிர்தலைத் (Fluorescence) தோற்றுவிக்கின்றன. இப்பண்பே எக்சு கதிர்களைக் கண்டுகொள்ள உதவியது. மேலும் உடனொளிர் திரையிலும் (fluorescent Screen) வலுவூட்டும் திரையிலும் (Intensifying Screen) பயன்படக் காரணமாகும். படிக இயல் ஆய்விலும் தொழில் துறையிலும் பெரிதும் பயன்பாட்டிலுள்ளன. எக்சு கதிர்கள், சாதாரண ஒளி அலைகளைப்போல் அதே திசைவேகத்துடன் பயணிக்கின்றன. ஓளிஅலைகளின் பண்புகள் யாவும் இதற்கும் பொருந்தும்.

X-கதிர்கள் மற்றும் காமா கதிர்களுக்கு இடையே ஒரு வரையறை வேறுபடுத்தி உலகளவில் ஒருமித்த கருத்து இல்லை. அவற்றின் மூலத்தை வைத்துக்கொண்டே இக் கதிர்வீச்சுக்களை இருவகையாக வேறுபடுத்துகின்றனர். X-கதிர்கள் எலக்ட்ரான்களில் இருந்து உமிழப்பட்டு வெளிவருகின்றன. ஆனால் காமா கதிர்கள் அணுக்கருவிலிருந்து உமிழப்பட்டு வெளிவருகின்றன. மற்றச் செயல்முறைகளின் மூலம் இந்த உயர் ஆற்றலை உருவாக்க முடிவதாலும், சில வேளைகளில் அது உருவாக்கப்படும் முறை தெரியாமல் போவதாலும் இந்த வரையறையில் சிக்கல்கள் உள்ளன. ஒரு பொதுவான மாற்றீடாக அலைநீளத்தின் அடிப்படையில் X-கதிர் மற்றும் காமாக் கதிர்வீச்சுக்கள் வேறுபடுத்தப்படுகின்றன. 10−11 m அலைநீளத்தைக் கொண்ட கதிர்வீச்சு காமாக் கதிர்கள் எனப்படுகின்றது.

X-கதிர்கள் அதிக சக்தியுடைய மின்காந்தக் கதிர்களாகும். இவற்றின் அயனாக்கும் ஆற்றல் புற-ஊதாக் கதிர்களின் ஆற்றலை விட மிக அதிகமாகும். எனவே பொருட்களை அயனாக்கி இரசாயன பிணைப்புகளை உடைக்கும் ஆற்றலை இவை கொண்டுள்ளன. இப்பண்பு காரணமாகவே எக்ஸ்-கதிர்கள் உயிரிகளுக்கு மிகவும் ஆபத்தானவை எனக் கருதப்படுகின்றன. மென்மையான X-கதிகளையும் உரிய பாதுகாப்பின்றி நீண்ட காலம் கையாண்டால் டி.என்.ஏ மூலக்கூறுகளின் ஒழுங்கு குலைந்து புற்று நோய்க்கு உள்ளாகலாம். அதிக சக்தியுள்ள X-கதிர்களினால் புற்று நோய்க் கலங்களை அயனாக்கி அழிக்கவும் இயலும். எனினும் இதன் போது ஆரோக்கியமான கலங்களுக்கு X-கதிர்கள் செலுத்தப்படுதல் தவிர்க்கப்பட வேண்டும். மருத்துவத்தில் X-கதிரைப் பயன்படுத்துவதால் வரும் நன்மை அதனால் வரும் ஆபத்தை விட அதிகமாக இருந்தால் மாத்திரமே அவை பயன்படுத்தப்படுகின்றன.

வலிமையான X-கதிர்களால் பொருட்களை ஊடுருவ முடியும். இப்பண்பே மருத்துவத் துறையில் எக்ஸ்-கதிர்ப் படங்களை எடுக்கப் பயன்படுத்தப்படுகின்றது. விமான நிலையங்களில் பாதுகாப்புச் சோதனையின் போதும் இத்தொழிற்பாடே பயன்படுத்தப்படுகின்றது. X-கதிர்கள் கட்புலனாகும் ஒளி, புற-ஊதாக் கதிர்களை விட மிகக் குறைவான அலை நீளமுடையவை. எனவே எக்ஸ்-கதிர்களைப் பயன்படுத்தும் நுணுக்குக்காட்டிகள் ஒளி நுணுக்குக் காட்டிகளை விட அதிக தெளிவுடையனவாக உள்ளன.

X-கதிர்கள் எலக்ட்ரான்களில் இருந்து உமிழப்பட்டாலும், அவை வெப்ப எதிர்மின்வாயினால் வெளியிடப்படும் எலக்ட்ரான்களை அதிக மின்னழுத்தத்தைப் பயன்படுத்தி வேகத்தினைக் கூட்டும் வெற்றிடக் குழாயகிய எக்ஸ்-கதிர்க் குழாயிலிருந்தும் தயாரிக்கப்படலாம். கதிர்க் குழாயின் எதிர்மின் (கேத்தோடு) வாயிலிருந்து எலக்ட்ரான்கள் குறைந்த அமுக்கமுடைய குழாயினுள் செலுத்தப்படுகின்றன. அதிவேகத்தில் செல்லும் எலக்ட்ரான்கள் உலோக இலக்காகிய நேர்மின்வாயுடன் (ஆனோட்டுடன்) மோதி X-கதிர்களை உருவாக்குகின்றன. மருத்துவத்துறையில் டங்க்ஸ்டன் அல்லது சிறிதளவு ரீனியம் கலக்கப்பட்ட டங்க்ஸ்டன் பயன்படுத்தப்படுகின்றது. இவ்வுலோகம் அதிக ஊடுருவும் ஆற்றலுடைய X-கதிர்களை உருவாக்குகின்றது. குறைந்த ஊடுருவும் ஆற்றலுடைய X-கதிர்கள் தேவைப்பட்டால் மொலிப்டினம் பயன்படுத்தப்படும். மேலும் ஆற்றல் குறைந்த கதிர்கள் தேவைப்பட்டால் செம்பு ஆனோட்டாகப் பயன்படுத்தப்படும். கேத்தோட்டின் மின்னழுத்த வேறுபாட்டிலேயே உருவாக்கப்படும் X-கதிர்களின் சக்தி தங்கியுள்ளது. உதாரணமாக 75 kV மின்னழுத்தம் உடைய கேத்தோட்டால் 75 keV சக்தியிலும் குறைவான சக்தியுடைய X-கதிரையே உருவாக்க முடியும்.

X-கதிர்கள் பிரதானமாக இரு குவாண்டம் முறைகளால் உருவாக்கப்படுகின்றன: 1. X-கதிர் உடனொளிர்வு- வேகமாக வரும் புற இலத்திரன்கள் உலோக அணுவின் எலக்ட்ரான்களோடு மோதி இவற்றின் வினையால் X-கதிர்கள் உருவாகின்றன. இத்தொழிற்பாட்டால் தோற்றுவிக்கப்படும் X-கதிர்களின் நிறமாலை பயன்படுத்தப்படும் உலோகத்துக்கேற்றபடி வேறுபடும்.

2. பிரம்ஸ்ட்ரிலங்க் – வலிமையான மின் புலம் காரணமாக அதிர்வடையும் எலக்ட்ரான்களிலிருந்து வெளியேற்றப்படும் எக்ஸ்-கதிர்களாகும். இத்தொழிற்பாடு தொடர்ச்சியான நிறமாலையைக் கொடுக்கும்.

X-கதிர்களைப் பெற பல்லாயிரக்கணக்கான வோல்ட்டு மின்னழுத்தம் தேவைப்படும். மின்வசதி இல்லாத இடங்களில் மின்சாரமின்றி X-கதிர்கள் (X-rays without electricity) பெறுவதற்கு கதிர் ஐசோடோப்புகள் உதவுகிறன. X-கதிர் குழாயில் ஆற்றல் மிக்க எலக்ட்ரான்கள், டங்ஸ்டன் இலக்கை மோதும் நிலையில் X-கதிர்கள் தோன்றுகின்றன. மிக அதிக மின்னழுத்தத்தில் அவை அதிக ஆற்றலைப் பெறுகின்றன. இதுபோன்ற ஆற்றல் மிக்க எலக்ட்ரான்களை ஐசோடோப்பில் இருந்தும் பெறலாம். ஸ்ட்ரான்சியம் 90, β துகள்களை (எலக்ட்ரான்கள்) வெளியிடுகிறன. காப்பான ஈயக்கட்டியில் ஸ்ட்ரான்சியம் 90 எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதிலிருந்து வெளிப்படும் எலக்ட்ரான்கள் டங்ஸ்டன் இலக்கை தாக்குமாறு அமைக்கப்படுகிறது. இம்முறையில் வெளிப்படும் எக்ஸ் கதிர்களின் செறிவு குறைவாகவே உள்ளது. பாதுகாப்பான முறையில் கருவி அமைக்கப்படுகிறது. 2010ல் உலகளாவிய ரீதியில் 5 பில்லியன் மருத்துவப் படிமவியல் கற்கைகள் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் X-கதிர்கள் பயன்படுத்தப்பட்டன. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com