Home செய்திகள் விரிவடையும் அண்டக் கோட்பாட்டுக்கான சமன்பாடுகளுக்காகப் பெயர் பெற்ற அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் பிரீடுமேன் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 16,1925).

விரிவடையும் அண்டக் கோட்பாட்டுக்கான சமன்பாடுகளுக்காகப் பெயர் பெற்ற அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் பிரீடுமேன் நினைவு தினம் இன்று (செப்டம்பர் 16,1925).

by mohan

அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் பிரீடுமேன் (Alexander Alexandrovich Friedmann) ஜூன் 17, 1888ல் இசை, நடனக் கலைஞரான அலெக்சாந்தர் பிரீடுமேனுக்கும் பியானோ கலைஞர் உலூத்மிலா இக்னத்தியேவ்னா வொயாச்செக் என்பவருக்கும் புனித பீட்டர்சுபேர்கு நகரில் பிறந்தார். இவர் குழந்தையாக இருந்தபோதே உருசிய மரபுவழி மாதாக்கோயிலில் திருமுழுக்கு செய்விக்கப்பட்டுள்ளார். வாழ்நாளின் பெரும்பகுதியைப் புனித பீட்டர்சுபர்கில் கழித்துள்ளார். இவர் புனித பீட்டர்சுபர்க் அரசு பல்கலைக்கழகத்தில் பயின்று 1910ல் பட்டம் பெற்றார். பிறகு புனித பீட்டர்சுபர்க் சுரங்க கல்விக்கழகத்தில் விரிவுரையாளராகச் சேர்ந்தார். பிரீடுமேன் பள்ளியில் இருந்தே யாக்கோபு தமார்க்கின் என்பவருடன் இணைபிரியா நட்போடு இருந்தார். பின்னாட்களில் இந்த யாக்கோபு தமார்க்கின் பிரவுன் பல்கலைக்கழகத்தில் பெயர்பெற்ற கணிதவியலாரில் ஒருவரானார்.

பிரீடுமேன் உருசியப் பேரரசுக்காக வான்படை வீரராகவும், பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார். முதல் உலகப் போரின் போது உருசியா சார்பில் சண்டையிட்டார். உருசியப் புரட்சிக்குப் பிறகு வானூர்திக் குழுமத்தின் தலைவர் ஆனார். பிரீடுமேன் 1918ல் பெர்ம் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆனார். 1922ல் விரிவடையும் அண்டம் என்ற எண்ணக்கருவை அறிமுகப்படுத்தினார். பின்னர் 1927ல் பெல்ஜிய வானியலாளர் ஜார்ஜசு இலெமைத்ரேயும் தனித்து தானும் இதே கண்ணோட்டத்துக்கு வந்துள்ளனர். 1925ஜூனில் இலெனின்கிராதில் இருந்த முதன்மை புவியியற்பியல் காணகத்துக்கு இயக்குநராக அமர்த்தப்பட்டுள்ளார். 1925 ஜூலையில் ஒரு வளிமக்கலன் ஆய்வில் பங்கேற்று 7400 மீ (24,300 அடி) உயரத்தில் இருந்து புவி குறித்த நோக்கீடுகளை எடுத்து வரலாறு காணாத புதிய பதிவை உருவாக்கியுள்ளார்.

அவார்டு பெர்சி இராபெர்ட்சனும், ஆர்தர் ஜெப்ரி வாக்கரும் தம் ஆய்வுகளை வெளியிடுவதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பே,”மாறாத எதிர்வளைமை உள்ள வெளியமைந்த உலகத்துக்கான வாய்ப்புகள்” என்ற ஆய்வுட்பட்ட பிரீடுமேனின் ஆய்வுகள் செருமானிய இதழில் 1925 ஜூன் திங்களில் வெளியிடப்பட்டமை, அவர் புடவி சார்ந்த நேர், சுழி, எதிர் வளைமைப் படிமங்கள் குறித்த புரிதலைக் கைவரப் பெற்றிருந்தமைக்கான செயல்விளக்கமாக அமைந்தது. இந்தப் பொதுச் சார்பியலுக்கான அண்ட இயங்கியல் படிமங்கள் பெரு வெடிப்புக் கோட்பாடு, நிலைத்த நிலைக் கோட்பாடு ஆகிய இரண்டு கோட்பாடுகளுக்கும் தேவைப்பட்ட செந்தர வடிவங்களாகும். இவரது பணி இருகோட்பாடுகளையும் சமமாகத் தாங்கிப்பிடித்தது. இருந்தாலும், அண்ட நுண்ணலைப் பின்னணிக் கதிர்வீச்சின் கண்டுபிடிப்பிற்குப் பிறகே பெருவெடிப்புக் கோட்பாடு ஏற்கப்பட்டு மற்றது தள்ளப்பட்டது. ஐன்ன்ஸ்டைனின் புலச் சமன்பாடுகளுக்கான செவ்வியல் தீர்வு ஓர் ஒருபடித்தான சமச்சீர்மை அண்டம் ஆகும். இது பிரீடுமேன்-இலாமைத்ரே-இராபெட்சன்-வாக்கர் வெளி என இப்போது அழைக்கப்படுகிறது. பிரீடுமேனுக்குப் பிறகே மற்ற மூவரும் 1920களிலும் 1930களிலும் இந்தச் சிக்கலை ஆய்வுக்கு எடுத்துக்கொண்டு தனித்தனியாக இதே தீர்வைக் கண்டடைந்தனர். பொது சார்புடைமையைத் தவிர, நீரியங்கியலிலும், வானிலையியலிலும் அவருக்கு ஆர்வமிருந்தது.

விரிவடையும் அண்டக் கோட்பாட்டுக்கான சமன்பாடுகளுக்காகப் பெயர் பெற்ற அலெக்சாந்தர் அலெக்சாந்திரோவிச் பிரீடுமேன், செப்டம்பர் 16, 1925ல் தனது 37வது அகவையில் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் என்புருக்கிக் காய்ச்சலில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். இவரது நினைவாக நிலாவின் எரிமலைவாய் ஒன்று பிரீடுமேன் எரிமலைவாய் எனப் பெயரிடப்பட்டுள்ளது. அலெக்சாந்தர் பிரீடுமேனின் பன்னாடுக் கருத்தரங்கம் குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து நிகழும் அறிவியல் நிகழ்ச்சியாகும். இதன் நோக்கம், சார்பியல், ஈர்ப்பு, அண்டவியல், மேலும் இவைசார்ந்த புலங்களில் பணிபுரியும் அறிவியலார்களிடையே தொடர்பை ஏற்ப்டுத்துவதே ஆகும். முதல் ஈர்ப்பு, அண்டவியல் சார்ந்த இக்கருத்தரங்கம் அவரது நூற்றாண்டு நினைவாக 1988ல் நடந்தது. Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!