ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் (Alfred North Whitehead) பிப்ரவரி 15 1861ல் இங்கிலாந்தில் பிறந்தார். ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெடின் பாட்டனார் தாமசு வொய்ட்ஹெட் ஆண்பிள்ளைகளுக்காக சாட்டம் வீடு (Chatham House) கல்வியகம் ஒன்றை நடத்திவந்த போதிலும், இவர் இங்கிலாந்தில் டோர்செட் (Dorset) என்னும் இடத்தில் உள்ள, சிறந்த பள்ளிகளில் ஒன்றென கருதப்பட்ட, இழ்செபோர்ன் பள்ளியில் (Sherborne School) படித்தார். இவர் பள்ளியில் கணிதம், விளையாட்டு ஆகிய துறைகளின் மிகச்சிறந்தவராக விளங்கினார். 1880 முதல் 1910 வரையிலான காலப்பகுதியில், இவர் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் டிரினிட்டி கல்லூரியில் தான் கணிதம் கற்றும், கற்பித்தும், படைப்புகள் நிகழ்த்தியும் வந்தார். 1890 களில் இவர் ஆய்ந்து முழுப்பொது இயற்கணித ஆழுரை (Treatise on Universal Algebra) 1898ல் இயற்றினார். 1900களில் தன்னுடைய முன்னாள் மாணவர் பெர்ட்ரண்டு ரசலுடன் சேர்ந்து பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்காவின் முதல் பதிப்பை வெளியிட்டார்.
தான் கேம்பிரிட்ஜில் பேராசிரியர் பதவியைப் பெறுவது குறைந்த வாய்ப்புடையது என்று அறிந்து பிரின்சிப்பியாவின் முதல் தொகுதி வெளிவந்தவுடன் கேம்பிரிட்ஜை விட்டு 1910ல் வெளியேறினார். 1891ல் வொய்ட்ஹெட் பிரான்சில் வளர்ந்த ஈவலின் வேட் என்னும் அயர்லாந்துப் பெண்மணியை மணந்தார். இவர்களுக்கு இரு மகன்களும், ஒரு மகளும் பிறந்தனர். முதல் உலகப்போரில் ராயல் பிளையிங் கோரில் (Royal Flying Corps, அரச வானூர்தியர் குழுவில்) பங்குகொண்ட ஒரு மகன் இறந்துவிட்டார். இக்காலப்பகுதியில் அமைதிக்கொள்கையை வலியுறுத்தியதால் பெர்ட்ரண்ட் ரசல் 1918ன் பெரும் பகுதியை சிறைச்சாலையில் கழித்தார். வொய்ட்ஹெட், ரசலை சிறையில் சென்று பார்த்தார் எனினும், அமைதிக்கொள்கையை பெரிதாக ஏற்றுக் கொள்ளவில்லை. அதேபோல ரசலும் வொய்ட்ஹெடின் பிளேட்டோவியம் (Platonism), யாவும் உள்ளமுடைமை (Panpsychism) என்னும் கொள்கைகள்பால் இருந்த ஈடுபாட்டை கிண்டல் செய்தார். உலகப்போருக்குப் பின்னர் வொய்ட்ஹெடும், ரசலும் அறிவுறவு கொள்ளவில்லை. வொய்ட்ஹெட் பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்காவின் 1925 ஆம் ஆண்டு வெளிவந்த இரண்டாம் பதிப்புக்கு எந்த கருத்தூட்டமும் தரவில்லை.
வொய்ட்ஹெட் எப்பொழுதுமே, குறிப்பாக 1890களில், இறையியலில் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய குடும்பம் சர்ச் ஆஃவ் இங்கிலாந்தில் (Church of England) நிலைபெற்றிருந்தனர். இவருடைய தந்தையும், அவர் உடன்பிறப்புகளும் சர்ச் விக்கார்களாக இருந்தனர். வொய்ட்ஹெடின் உடன்பிறந்தார் தமிழகத்தின் சென்னையில் பிசப்பாக (bishop) இருந்தார். வொய்ட்ஹெடின் மனைவியின் உந்துதலாலும், கார்டினல் நியூமன் அவர்களின் எழுத்துகளாலும், வொய்ட்ஹெட் ரோமன் கத்தோலிக்கம் மீது ஆர்வம் கொண்டார். முதல் உலகப்போருக்கு முன்னர் இவர் தன்னை கடவுள் கொள்கை பற்றிய சாய்வு ஏதுமற்றவராக இருந்தார். பின்னர் கடவுள் நம்பிக்கை உடையவராக மாறினார். எனினும் எந்த திருச்சபையிலும் முறைப்படி சேரவில்லை. இறையொருமையாளர்கள் (யூனிட்டேரியன் கொள்கையர்) இவரை தங்கள் நண்பர் என்று கூறுவர். வொய்ட்ஹெட் இயற்பியலிலும் மிகுந்த ஈடுபாடு காட்டினார். இவருடைய பெல்லோ (Fellow) எனும் மேல் உறுப்பினர் பெருமைக்கான ஆய்வுரையில் ஜேம்ஸ் கிளார்க் மாக்ஸ்வெல் அவர்களின் மின்சாரம் காந்தம் பற்றிய கருத்துக்களை அலசினார்.
கணிதவியல் மற்றும் இயற்பியல் பற்றிய வொய்ட்ஹெட்டின் பார்வையும் கண்ணோட்டமும் தூய அறிவியல்நோக்கு என்பதைவிட கூடுதலான மெய்யியல் நோக்கு எனலாம். அத்துறைகளின் தனிப்பட்ட கருத்துகள் கேள்விகளை விட அவற்றின் பரந்த வளர்ச்சி வாய்ப்பும் இயல்பும் பற்றியே அவர் அதிகம் நுணுகி நோக்கினார். வொய்ட்ஹெட் 1922 முதல் 1923 வரை அரிஸ்டாட்டிலிய குமுகம் என்னும் அறிவியல் சிந்தனை நிறுவனத்தின் தலைவராக இருந்தார். 1910 முதல் 1924 வரை வொய்ட்ஹெட் பெரும்பாலும் யூனிவெர்சிட்டி காலேஜ் இலண்டன், இம்ப்பீரியல் காலேஜ் இலண்டன் ஆகியவற்றில் இயற்பியல், அறிவியலின் மெய்யியல், கல்வியைப் பற்றிய கருத்துகளும் செயற்பாடுகளும் பற்றி எழுதியும் கற்பித்தும் வந்தார். 1903 ஆம் ஆண்டு முதல் ராயல் சொசைட்டி பெல்லோவாக இருந்தார். பின்னர் 1931 ஆம் ஆண்டு பிரித்தானிய கல்விப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இயற்பியலில் பொது பொருளீர்ப்பியல் (general relativity) பற்றி வொய்ட்ஹெட் ஐன்ஸ்டைன் கொள்கைக்கு போட்டியாக ஒரு கருத்தியக் கொள்கையை முன்வைத்தார். ஆனால் இது வரவேற்கப்படவில்லை.
ஏனெனில் இதன்படி பொருளீர்ப்பு நிலைஎண் G (gravitational constant G) நடைமுறை அளவீட்டு மெய்நிலைக்கு மாறாக, மாறுபடும் ஒன்றாக இருந்தது. எனவே வொய்ட்ஹெடின் பொருளீர்ப்புக் கொள்கை ஏற்பு பெறவில்லை. ஆனால் இவருடைய 1919 ஆம் ஆண்டு வெளியான “இயற்கை அறிவின் கொள்கைகள் பற்றிய கேள்விகள்” (Enquiry Concerning the Principles of Natural Knowledge) கருத்துகள் ஏற்றம் பெற்று இருந்தது. இது இயற்பியலின் அடிப்படை மெய்ய்யியல் கோட்பாடுகளை தொகுக்க எழுந்த முயற்சி. ஆனாலும் இது தற்கால இயற்பியலில் பெரிய தாக்கம் ஏதும் ஏற்படுத்தவில்லை. இவர் இயற்கணிதம், ஏரணம், கணிதத்தின் அடித்தளங்கள், அறிவியலின் மெய்யியல், இயற்பியல், மீவியற்பியல், கல்வி ஆகிய பல துறைகளில் பெரும் தாக்கம் ஏற்படுத்திய பேரறிஞர். இவர் பெர்ட்ரண்டு ரசலுடன் சேர்ந்து எழுதிய பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா என்னும் நூல், கணிதவியலில் பேரிலக்கியமாகக் கருதப்படுகின்றது. தலைசிறந்த கணிதவியலர் ஆல்பிரட் நார்த் வொய்ட்ஹெட் டிசம்பர் 30, 1947ல் தனது 52வது அகவையில் மாசசூசெட்ஸ், அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.
You must be logged in to post a comment.