Home செய்திகள் சிறந்த கல்வியாளரும்,புகழ் பெற்ற எழுத்தாளருமான கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி மறைவு…

சிறந்த கல்வியாளரும்,புகழ் பெற்ற எழுத்தாளருமான கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி மறைவு…

by Askar

சிறந்த கல்வியாளரும்,புகழ் பெற்ற எழுத்தாளருமான கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி மறைவு…

இலங்கை பேருவளை ஜாமிஆ நளீமியா கல்விக்கூடத்தின் பணிப்பாளரும், தலைசிறந்த எழுத்தாளருமான கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரியின் மறைவு இலங்கை மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

மாத்தறையை பிறப்பிடமாகக் கொண்ட கலாநிதி சுக்ரி, இலங்கை முஸ்லிம் அறிஞர்களில் மிகவும் குறிப்பிடத்தக்க ஒருவராகவும், பன்முக ஆளுமை கொண்டவராகவும் விளங்கியவர். இலங்கை முஸ்லிம்களின் கல்வி, கலாசார, சமூக வரலாற்றுத் துறைகளில் அவரின் பங்களிப்பு மிக முக்கியமானது.

தீஞ்சுவை சொட்டும் நல்ல பேச்சாளரான இவர், தலை சிறந்த எழுத்தாளராகவும் விளங்கியவர்.தமிழ் மொழியில் பல சிறந்த நூல்களை தந்தவர். மொத்தத்தில் இவர் ஒரு அறிவுக்கடல் என்றால் மிகையல்ல. சமய இலக்கியத்தின் பால் ஈர்க்கப்பட்டு பல்வேறு சிறந்த நூல்களை உலகிற்கு தந்துள்ளார்.

இவரது ஆக்கங்கள் இலங்கையில் மட்டுமின்றி, பிறநாட்டு சஞ்சிகை பத்திரிகைகளிலும் வெளிவந்துள்ளன. அதுமாத்திரமின்றி, பல்வேறு சஞ்சிகைகளின் ஆசிரியராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.

இஸ்லாம் மற்றும் முஸ்லிம்களின் வாழ்வியல் அம்சங்கள் குறித்தும், அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றியும் ஆங்கிலத்தில் பல்வேறு ஆக்கங்களை தந்தவர்.

கலாநிதி சுக்ரியின் தனிச்சிறப்பு எந்த இயக்கத்தையும் சாராமல் இருந்து, இயக்கச் சாயம் எதுவுமே இல்லாது, அவரது கருத்துக்களை எல்லா தரப்பினரும் ஈர்க்கும் வகையில் நடுநிலையோடு செயலாற்றியதேயாகும். அன்னாரிடம் இஸ்லாமிய எழுச்சி குறித்த தெளிவான பார்வையும் தூரநோக்கும் இருந்தது.

இலங்கையில் காணப்படும் முன்னோடி இஸ்லாமிய பல்கலைக்கழகமான பேருவளை ஜாமிஆ நளீமியாவில் பணிப்பாளராக, இறுதி வரை பணியாற்றிய இவர், இலங்கை முஸ்லிம்களின் கல்வி எழுச்சிக்கு வித்திட்டவர். அவரது மாணாக்கர்கள் இன்று சர்வதேச ரீதியிலும், இலங்கையிலும் பல்வேறு துறைகளில் உயர் பதவிகளில் மிளிர்ந்து வகிக்கின்றனர்.

ஜாமிஆ நளீமியாவின் ஸ்தாபகத் தலைவர் நளீம் ஹாஜியாருடன் இணைந்து, நாடளாவிய ரீதியில் பல்வேறு சமய, சமூகப் பணிகளில் ஈடுபட்டவர். அத்துடன் கல்வியை மேம்படுத்தி, அறிவுப்புரட்சியை ஏற்படுத்த நளீம் ஹாஜியாருடன் இணைந்து செயல்பட்டு வெற்றிகண்டவர்.

அது மாத்திரமின்றி, இலங்கை முழுவதிலுமுள்ள வறிய ஏழை மாணவர்களின் கல்விக்காக, நளீம் ஹாஜியாரின் புலமைப்பரிசில் திட்டத்தை சிறந்த முறையில், நாடளாவிய ரீதியில் நடைமுறைப் படுத்தியவர்களில் கலாநிதி சுக்ரியே முதன்மை வகிக்கின்றார். இந்த உதவித் திட்டத்தின் மூலம் வட மாகாணத்திலிருந்து வெளியேறி, தென்னிலங்கையில் வாழ்ந்த அகதிகள்,முஸ்லிம்கள் பயன்பெற்றனர்.

பல்வேறு துறைகளில் ஆளுமைகளை சமூகத்திற்கு உருவாக்கி கல்வி புரட்சியை ஏற்படுத்திய கல்வியாளர் கலாநிதி எம்.ஏ.எம் சுக்ரி தனது 80 வது வயதில் (மே 19.2020) செவ்வாய் கிழமை இறைவனின் அழைப்பை ஏற்று இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார்.இருப்பினும் அவரின் பன்முக தன்மை, கல்வி,கலாசார,இலக்கிய பணிகள் மறையவில்லை.

செய்திதொகுப்பு அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com