தொடரும் தெரு நாய்களின் அட்டூழியம், மவுனம் கலையுமா கீழக்கரை நகராட்சி…

கீழக்கரையில் தெரு நாய்களின் பெருக்கமும், பாதிப்பும், அச்சுறுத்தல்களும், அராஜகங்களும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்கிறது. இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் பலரும் நகராட்சி மற்றும் மாவட்ட ஆட்சியர்க்கு புகார் மனுக்கள் பல எழுதியும் எந்த பலனுமில்லை.

கீழக்கரையில் நேற்று இரவு 01.00 மணி அளவில் பிரபுக்கள் தெருவில் வசிக்கும் நெய்னா முகம்மது என்பவரது வீட்டில் வளர்க்கப்பட்ட ஒரு வெள்ளாடு அதன் குட்டி ஒன்றையும் பத்து பதினைந்து தெருநாய்கள் ஒன்று சேர்ந்து கடித்து குதறியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் பயத்தில் உறைந்துள்ளனர்.

இது குறித்து சேரான் தெருவைச் சேர்ந்த பாக்கர் கூறுகையில், நாங்கள் வந்து பார்த்த பொழுது ஆடும் அதன் குட்டியும் செத்துவிட்டது. இதை பார்த்ததும் வீட்டிலுள்ள அனைவரும் அதிர்ந்து விட்டார்கள். இந்த நாய் தொல்லைகளைப் பற்றி பலமுறை நகராட்சியில் புகார் அளித்துவிட்டோம். இங்கு திரியும் நாய்கள் எல்லாம் வெறி பிடித்து திரிகிறது. குழந்தைகளை வீதிகளில் விளையாட விட கூட பயமாய் இருக்கிறது. ஒருமாதம் முன்பு ஆனையாளர் நாய்பிடிக்க ஒப்பந்தம் எடுத்தவர்கள் என்று ஒரு செல் நம்பர் தந்தார். அவருக்கு போண் செய்யும் சமயம் எல்லாம் ஒரு பெண் போனை எடுத்து இராமநாதபுரம் அருகே வந்துவிட்டதாய் கூறினார். ஒருமாதம் கடந்து விட்டது, ஆனால் இன்னும் இராமநாதபுரம் வழி தெரியவில்லை போல் இருக்கிறது என்று விரக்தியுடன் கூறி முடித்தார்.

இன்று நாய்களை குதறிய வெறி நாய்கள் பொதுமக்களை குதறும் நாள் தூரம் இல்லை.  நகராட்சி நிர்வாகம் அதற்குள் உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையுடன் பொதுமக்கள் இருக்கிறார்கள். எல்லையை மீறும் பட்சத்தில் நகராட்சி நிர்வாகமே பொதுமக்களை பெரும் போராட்டத்திற்கு தள்ளிவிடும் என்றே தோன்றுகிறது.  சில நாட்களுக்கு முன்பு கீழக்கரை SDPI கட்சியும் அது சம்மபந்னுதமாக  புகார் மனு கொடுத்தது குறிப்பிடத்தக்கது.