Home செய்திகள் மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால், இந்தப் பாம்பு தலை தூக்கும்- எச்சரிக்கை.. கி. வீரமணி எச்சரிக்கை..

மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால், இந்தப் பாம்பு தலை தூக்கும்- எச்சரிக்கை.. கி. வீரமணி எச்சரிக்கை..

by Askar

 

ஓபிசி -எஸ்சி -எஸ்டி பிரிவினருக்கான இட ஒதுக்கீடில் “தகுதியானவர்கள்” கிடைக்காவிட்டால், பொதுப் பிரிவாக அறிவிப்பாம்!

கடும் எதிர்ப்புக் கிளம்பியதால், தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது; மீண்டும் பி.ஜே.பி. ஆட்சிக்கு வந்தால், இந்தப் பாம்பு தலை தூக்கும்- எச்சரிக்கை!

நமது இந்திய அரசமைப்புச் சட்டம் அனைவருக்கும் அளித்துள்ள முக்கிய உரிமை – அதுவும் மக்கள் அவர்களாகவே அவர்களுக்கு அளித்துள்ள மாற்றப்பட முடியாத, மறுக்கப்பட முடியாத உரிமை (inalienable right) சமூகநீதியாகும்.
மற்றும் பொருளாதார நீதி, அரசியல் நீதி என்பவற்றின் வரிசையில் முதல் இடம், முன்னுரிமை பெற்றுள்ள இடம் சமூகநீதி ஆகும்.

சமூகநீதி – கல்வி ரீதியாக
இட ஒதுக்கீடு என்பதை மாற்றும் தந்திரம்!

பிரதமர் மோடி தலைமையில் கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. என்ற மனுதர்ம ஆட்சியில் இட ஒதுக்கீட்டை அறவே பறிக்கும் முயற்சியை பற்பல ரூபத்தில், படிப்படியாக அமல்படுத்தி உயர்ஜாதியினரான பார்ப்பனர் மற்றும் அவர்களுக்கு அடுத்தபடியாக உள்ள முன்னேறிய வகுப்பினர் நலனைப் பாதுகாக்கும் ஆட்சியாகவே இந்த பத்தாண்டு கொடுத்த உறுதிமொழிக்கு முற்றிலும் மாறாகவே நடைபெற்றும், மூன்றாம் முறையும் ‘இராமர் பக்தி’ என்ற மயக்க மருந்தினை – பாமர வாக்காளர்களுக்குத் தந்து, அவர்களிடம் உள்ள வாக்குகளைப் பறிக்க பக்தி என்ற பகல் வேஷம் கட்டி ஆடுகிறது!
சமூகநீதிப்படி சமூக ரீதியாகவும், கல்வி ரீதியாகவும் பிற்படுத்தப்பட்டுள்ள Socially and Educationally Backward மற்றும் எஸ்.சி., எஸ்.டி., பழங்குடியினர், ஆதிதிராவிடர் ஆகியவர்களுக்கு இட ஒதுக்கீட்டினை மாற்றி, அதன் வேரில் வெந்நீர் ஊற்றுவதுபோல், EWS என்ற ‘பொருளாதாரத்தில் நலிந்த’ முன்னேறிய (பார்ப்பனர் மற்றும் சிலர்) உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு கல்வியிலும், உத்தியோகங்களிலும் தனி ஒதுக்கீடு தந்து, ‘புளியேப்பக்காரர்களுக்கு’ மேலும் அஜீரணம் உண்டாகும் வண்ணம், தனியே ஒரு அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை நுழைத்தனர்; தங்களிடம் உள்ள புல்டோசர் மெஜாரிட்டியை பயன்படுத்தி, இரண்டு, மூன்று நாள்களிலேயே அதனை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று, புயல் வேகத்தில் சட்டமாக்கியதோடு, அவசர அவசரமாக அதற்குத் தேவையான நிதியும் ஒதுக்கினார்கள்.

இட ஒதுக்கீட்டை ஒழிக்கப் புதிய திட்டம்!

பச்சை சமூக அநீதி அரங்கேறியது. தமிழ்நாட்டில் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உள்ள ‘திராவிட மாடல்’ ஆட்சி ஒன்று மட்டும் அதை அமல்படுத்தவிடாது சமூகநீதியை ஊனப்படுத்தாது தடுத்து வருகிறது!

இப்போது மற்றொரு பேரிடியைத் தந்து – நோட்டம் பார்ப்பதுபோல் – பல்கலைக் கழகங்களில் – உயர்கல்வி நிறுவனங்களில் அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை அமல்படுத்துவதற்கான வரைவு – வழிகாட்டுதல்களை உருவாக்கி உள்ள பல்கலைக் கழக மானியக் குழு (யு.ஜி.சி.) வெளியிட்டுள்ள திட்டத்தில்,

ஆழம் பார்க்கும் வேலை!

ஓ.பி.சி. (OBC), எஸ்.சி. (S.C.), எஸ்.டி. (S.T.) பிரிவினருக்கான இட ஒதுக்கீட்டுக்கு ‘‘தகுதி வாய்ந்தவர்கள் கிடைக்காவிட்டால்’’ அந்த இடங்களை ரத்து செய்து, பொது பிரிவாக அறிவித்து, மற்ற பிரிவினரை – அதாவது உயர்ஜாதியினரை பணி நியமனம் செய்யலாம் என்று அறிவித்துள்ளது!
இதற்கு உடனடியாக சுனாமிபோல எதிர்ப்புக் கிளம்பத் தொடங்கியதைக் கண்டு, ஒன்றிய கல்வி அமைச்சகம், ‘அய்யோ, இப்படி பொதுத் தேர்தல் சமயத்தில், இந்தப் பூனைக்குட்டியை வெளியே விட்டுவிட்டதே – இந்த யு.ஜி.சி.மூலம் நாம் இட ஒதுக்கீட்டின் ஒவ்வொரு முக்கியக் கல்லாகப் பிடுங்கி எடுத்து, கட்டடத்தையே வீழ்த்திட போட்ட ரகசியத் திட்டம் வெளியாகிவிட்டதே’ என்று புரிந்து, உடனடியாக இந்த அறிவிப்பு ‘வாபஸ்’ வாங்கப்படுகின்றது என்று அறிவித்துள்ளது!
இதைக் கண்டு சமூகநீதிக்கான பல கட்சி, பல பிரிவு போராளிகளும்கூட உடனடியாக வந்த ஆபத்து நீங்கிவிட்டது என்று கருதி, முழுமையான புரிதலோடு இந்த ‘‘ஆர்.எஸ்.எஸ். க(ஆ)ட்சியின் வித்தை’’களைப் புரியாதவர்கள் நினைக்கக் கூடும்.
இது ஒரு ஆழம் பார்க்கும் வெள்ளோட்டம்; இப்படி ஓர் அறிவிப்பு இப்போது பின்வாங்கப்பட்டாலும், தேர்தல் முடிந்து மீண்டும் பலவித தந்திரங்களாலும், பக்தி மயக்க பிஸ்கெட்டுகளாலும் மூன்றாவது முறையா£க மோடி தலைமையிலான ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. ஆட்சி அமைய – மக்கள் ஏமாந்து ஓட்டுப் போட்டுவிட்டால், இத்திட்டம் வெளிப்படையாகவே அது சட்டமாகவே ஆகிவிடும் பேராபத்து உள்ளது; அந்தக் கரு கலைக்கப்படவில்லை.
அந்த ஆர்.எஸ்.எஸ். இட ஒதுக்கீடு ரத்து திட்டம் என்ற பாம்பு தன் விஷத்தோடு மீண்டும் புற்றுக்கு வெளியே தலைநீட்டி நோட்டம் பார்த்தபின், உள்வாங்கியுள்ளது!

பி.ஜே.பி. பாம்பு தலையைப்
புற்றுக்குள் இழுத்துள்ளது!

புற்றும், பாம்பும் அப்படியே ‘தற்கால சாந்தி’யாக தலையை உள்ளே இழுத்துக் கொண்டதாலேயே இத்திட்டம் இனி வராது என்று எவரும் எண்ணி அலட்சியமாக சும்மா இருந்துவிடக் கூடாது!

பி.ஜே.பி. ஆட்சி- மோடி ஆட்சி மீண்டும் ஏற்பட்டால், இந்த இட ஒதுக்கீட்டினை ‘‘தோலிருக்க சுளை முழுங்கியதுபோல்’’ ஆகி ஒரே அடியாக ஒழித்துவிடுவதே ஆர்.எஸ்.எஸின் இலக்கு.
எனவே, மாணவர்களே, 18 வயது இளைய வாக்காளர்களே, இளந்தலைமுறையினரே, உங்கள் எதிர்கால இருள்பற்றி கவலையோடு சிந்தியுங்கள்! வாக்காளர்களாகிய நீங்களும் புரிந்து, மற்றவர்களுக்கும் தெளிவுபடுத்துங்கள்!

‘நீட், கியூட்,நெக்ஸ்ட்’ என்னும் முட்டுக்கட்டைகள்!

முன்பே ‘நீட்’ தேர்வு, கியூட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வு என்று உங்களது கல்வி வளர்ச்சிக்குப் பல்வேறு முட்டுக்கட்டைகள் இத்திட்டத்தில், இட ஒதுக்கீடு – ஒடுக்கப்பட்ட எஸ்.சி., எஸ்.டி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ரத்து என்ற தயார் நிலை ஒளிந்துள்ளது.
இளைஞர்களே, ஏமாறாதீர்!
உடனே, இதனை மக்களிடம் ‘இந்தியா’ கூட்டணிக் கட்சியினர் பிரச்சாரம் செய்வது அவசர, அவசியம்!

கி.வீரமணி,
தலைவர்,
திராவிடர் கழகம்

 

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!