Home செய்திகள் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் டீசல் விற்பனை நிலையம் திறப்பு..

பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் டீசல் விற்பனை நிலையம் திறப்பு..

by ஆசிரியர்

இராமநாதபுரம், அக்.6- இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் குந்துகால் துறைமுகத்தில் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் சார்பில் மீளவர்களுக்கான டீசல் விற்பனை நிலையம் திறப்பு விழா இன்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் பா.விஷ்ணு சந்திரன் தலைமை வகித்தார். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் முன்னிலை வகித்தார். இந்தியன் ஆயில் நிறுவனம் சார்பில் ரூ.1.50 கோடி மதிப்பில் புதிதாக அமைந்த டீசல் விற்பனை மையத்தை  தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் என்.கௌதமன்  திறந்து வைத்தார்.

அவர் பேசுகையில், இந்தியாவில் பிற மாநிலங்களில் இல்லாத வகையில் தமிழகத்தில் முதலமைச்சர் தலைமையில் மீனவர் மாநாடு நடத்தி சாதனை படைத்தது மட்டுமின்றி மீனவர்களின் குடியிருப்புகளுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டு 5,434 பேருக்கு பட்டா வழங்கி சிறப்பித்து உள்ளார். முத்தமிழறிஞர் கலைஞரால் கான்கிரீட் வீடு மீனவர்களுக்கு வழங்கப்பட்டது. மீன் வளர்ச்சி கழகம் துவங்கப்பட்டு மீனவர்களுக்கு தேவையான திட்டங்கள் வழங்கப்படுகிறது.

தமிழகம் முழுவதும் மீன் வளர்ச்சிக்கழகம் மூலம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுடன் இணைந்து மீனவர்களுக்கு டீசல் விற்பனை நிலையம் அமைக்கும் திட்டம் விரிவு படுத்தப்படவுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்பொழுது செயல்பட்டு வரும் டீசல் விற்பனை நிலையங்களுடன் தொண்டி, பெரியபட்டினம் பகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டீசல் விற்பனை மையத்தில் தற்பொழுது டீசல் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மீனவர்களின் கோரிக்கைக்கேற்ப பெட்ரோல் விற்பனை செய்ய இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்திற்கு கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் வரும் வருமானம் மீன் வளர்ச்சி கழகத்திற்கு பயனுள்ளதாக அமையும். ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் கோரிக்கைகேற்ப தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழகம் மூலம் மீன் விற்பனை அங்காடி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் பேசுகையில், ராமநாதபுரம் மாவட்டத்தை பொருத்தவரை விவசாயம், மீன்பிடித்தொழில் பிரதானமாக உள்ளது. கடற்கரை பரப்பில் அதிக நீளம் கொண்ட இப்பகுதியில் பல்வேறு வகை மீன்கள் பிடிக்கப்படுகின்றன. இங்கு மீன் இறங்கு தளம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. வரும் காலத்தில் இப்பகுதி பெரியளவில் மீன் சந்தை வளாகமாக அமைய வேண்டும். இங்கு மீன்களை பாதுகாக்க குளிரூட்டிய அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது மீனவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். இப்பகுதி மீனவர்கள் மேற்கொண்டு வரும் மீன்பிடித் தொழிலில் அதிகம் ஆர்வம்காட்டி அரசின் திட்டங்களை பெற்று சிறப்புடன் செயல்பட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார்.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைமை மேலாளர் மாரீஸ்வரி, மீன்வளம், மீனவர் நலத்துறை துணை இயக்குநர் பிரபாவதி, உதவி இயக்குநர்கள்  அப்துல் காதர் ஜெய்லானி (ராமேஸ்வரம்) சிவக்குமார் (மண்டபம்), கோபிநாத் (ராமநாதபுரம்), தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக முதுநிலை மேலாளர் ரவிச்சந்திரன், மேலாளர் தமிழ்மாறன்,  உதவி மேலாளர் செல்வலட்சுமி, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் உதவி மேலாளர் பரத், மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரவிச்சந்திர ராமவன்னி உட்பட பலர் கலந்து கொண்டனர்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com