அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் அப் குரூப் ஆரம்பியுங்கள்: டிஜிபி சுற்றறிக்கை..

காவல் நிலையங்களில் வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிக்க வேண்டும் என டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அனைத்து காவல் நிலையங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி பதில் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

தமிழக காவல்துறை காலத்திற்கு ஏற்றார்போல் நவீனமாகி வருகிறது. எப்.ஐ.ஆர் பதிவை ஆன்லைனில் ஆரம்பித்தது, குற்றவாளிகள் குறித்த தகவல்களை அனைத்து டேட்டாக்களையும் சேகரித்து ஒருங்கிணைத்தது, காவல்துறை சான்றிதழ் பெறுவது, நற்சான்றிதழ் பெறுவது உள்ளிட்ட விஷயங்களும் ஒருமுகப்படுத்தப்பட்டு நவீனப்படுத்தப்பட்டது.

குற்றவாளிகளின் தகவல்களை சேகரித்து பேஸ் டிடெக்டர் எனும் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு அது அனைத்து காவலர்கள் செல்போனில் பதிவேற்றப்பட்டதால் வாகனச்சோதனையில் குற்றவாளிகளை அடையாளம் காண எளிதாக முடிந்தது. இதேபோன்று மதுபோதையில் வாகனம் இயக்குவதை கண்டறியும் கருவி, அபராதம் வசூலிப்பதை ஆன்லைனில் மாற்றியது என காவல்துறை நவீனமடைந்து வருகிறது.

தகவல் தொடர்பில் செல்போன் பயன்பாட்டை போலீஸார் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் அப் குழுக்களை துவக்குவது குறித்து டிஜிபி டி.கே.ராஜேந்திரன் அனைத்து காவல் ஆணையர்கள், எஸ்பிக்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அனைத்து காவல் நிலையங்களிலும் வாட்ஸ் அப் குழுக்களை ஆரம்பிக்க வேண்டும்.

இதன் அட்மினாக ஆய்வாளர் அல்லது உதவி ஆய்வாளர் இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப்பில் அந்தந்த காவல்துறையினர் செய்யும் வேலைகளில் சிறப்பானவற்றை பாராட்டி புகைப்படம் மற்றும் சிறு குறிப்பையும் போடவேண்டும் என குறிப்பிட்டுள்ள அவர் வரும் 18-ம் தேதிக்குள் வாட்ஸ் அப் குழுக்கள் பெயர், யார் அட்மின், அவரது பெயர், அவரது பதவி, எத்தனை உறுப்பினர்கள் அதில் உள்ளனர், எப்போது ஆரம்பித்தது என்பது குறித்த விபரங்களை அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கெனவே காவல் நிலையங்களில் பணியாற்றும் காவலர்கள், மற்றும் காவலர்களே தங்களுக்குள் வாட்ஸ் அப் குரூப்களை ஆரம்பித்து செயல்படுத்திவரும் நிலையில் காவல் நிலையங்களில் அதிகாரபூர்வமாக வாட்ஸ் அப் குரூப் ஆரம்பிக்க டிஜிபி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர்:-அபுபக்கர்சித்திக்