ராமநாதபுரம் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி சுகாதார துணை இயக்குனர் டாக்டர் குமரகுருபரன் மேற்பார்வையில் சுகாதாரத்துறையினர் பல்வேறு ஆய்வு பணிகளில் ஈடுபட்டுஉள்ளனர். இதன்தொடர்ச்சியாக சுகாதாரத்துறையினர் கீழக்கரை நகரசபை பகுதியில் நகரசபை பணியாளர்களுடன் இணைந்து அதிரடி ஆய்வில் ஈடுபட்டனர்.
நகரசபை ஆணையாளர் வசந்தி தலைமையில் துப்புரவு ஆய்வாளர் திண்ணாயிரமூர்த்தி, சுகாதாரத்துறை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பக்கீர் முகம்மது, சுகாதார ஆய்வாளர் செல்லக்கண்ணு ஆகியோர் துப்புரவு பணியாளர்கள் மூலம் தீவிர ஆய்வில் ஈடுபட்டனர். கீழக்கரை வள்ளல் சீதக்காதி சாலை, கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுகள் முக்கியமாக டயர் கிடங்குகள் மற்றும் டயர் சேமித்து வைத்திருக்கும் இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு டெங்கு கொசுபுழுக்கள் உற்பத்தியாகும் வகையில் வைக்கப்பட்டிருந்த டயர்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றி அழிக்கப்பட்டன.
மேலும், டெங்கு கொசு உற்பத்தியாவதற்கு வசதியாக டயர்கள், தேங்காய் சிரட்டைகள், முட்டை ஓடுகள், பழைய டப்பாக்கள் போன்ற பழைய பொருட்களை வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும் என்று பொதுமக்களிடம் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். இது சம்பந்தமாக விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டன.
You must be logged in to post a comment.