முன்னாள் MLA வீட்டின் எதிரே சாயும் நிலையில் அபாய மின் கம்பம் – கயிறு கட்டி பொதுமக்களை காக்கும் அவலம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவில் கடலாடி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்  MLA ஹாமீது இபுறாகீம் வீட்டின் எதிர் புறம் 19/14 என்கிற நகராட்சி குறியிட்ட மின் கம்பம் ஒன்று பொதுமக்களின் உயிருக்கு ஊறு விளைவிக்கும் விதமாக நிற்கிறது. கடந்த 1975 ஆம் ஆண்டு காலத்தில் நிலை நிறுத்தப்பட்ட இந்த பழமையான இரும்பினாலான மின் கம்பம் மிகவும் துருப்பிடித்த நிலையில் சிதிலமடைந்து காணப்படுகிறது. இந்த 43 ஆண்டு கால மின் கம்பம் என்று சாய்ந்து விழுந்து பேராபத்தை ஏற்படுத்தி விடுமோ..?  என்கிற அச்சத்தில் இந்த பகுதியில் வாழும் பொதுமக்கள் இந்த பகுதியில் நடமாடி வருகின்றனர். அதுமட்டும் அல்லாது இந்த அபாய மின்கம்பத்தில் தெருவிளக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வண்ணம் அந்தரத்தில் தொங்கி கொண்டிருக்கிறது.

இது குறித்து முன்னாள் MLA ஹாமீது இபுறாகீம் கூறுகையில் ”இந்த சிதிலமடைந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்றக் கோரி பல்லாண்டு காலமாக, மின்சார வாரியத்தினரிடம் கோரிக்கை வைத்து வருகிறோம். ஆனால் இன்று வரை எந்த விதமான நடவடிக்கையும் மின்சார வாரியத்தால் எடுக்கப்படவில்லை. இந்த அபாய மின் கம்பம் இன்னும் எத்தனை நாள்களுக்கு நிற்கும் என்று சொல்ல முடியாது. இப்போது தற்காப்புக்காக ஒரு கயிறை போட்டு பக்கத்துக்கு வீட்டு சன்னலில் தெருவாசிகள் கட்டி வைத்துள்ளனர்.

இந்த பகுதி பெரும்பாலும் பெண்கள் புழங்கும் பாதையாக இருப்பதால் பள்ளி மாணவ மாணவிகளும், பெண்களும் அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். மின்சார வாரியம் சுணக்கம் காட்டாமல் உடனடியாக இந்த மின் கம்பத்தை மாற்றி பொதுமக்களின் விலைமதிப்பில்லா உயிர்களை காக்க முன்வர வேண்டும். உள்ளூரில் இருக்கும் சட்டப் போராளிகள் சமூக ஆர்வலர்கள் இது குறித்து சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்