கீழக்கரையில் தொடரும் ATM மோசடி – செல்போனில் பேசி ரூ .1 இலட்சம் திருட்டு

கீழக்கரை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பல்வேறு நபர்களிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தான் வங்கி அதிகாரி என்று கூறி மோசடி செய்வது தொடர்கதையாகி வருகிறது. வங்கி சேமிப்பு கணக்கை கையாள வழங்கப்பட்ட ATM அட்டை நிலை குறித்து பரிசோதனைக்காக போன் செய்தாகவும், அட்டையில் உள் 16 இலக்க எண்ணை கூறுங்கள் என்று கேட்கிறார்கள். வங்கி வாடிக்கையாளர் 16 இலக்க எண்ணை கூறியதும் அதனை சரிபார்க்க வேண்டும் என்று கூறி சம்மந்தபட்டவரின் வங்கி கணக்கில் இருந்து ஆன்லைன் மூலமாக பெருந்தொகையினை மோசடி செய்யும் மர்ம கும்பலின் அட்டூழியம் தொடர்ந்து வருகிறது. கடந்த வாரம் இது சம்பந்தமான பதிவினை கீழை நியூஸ் வலைதளத்தில் வெளியிட்டிருந்தோம்.

கீழக்கரையில் ஆன்லைன் மூலம் ரூ.50000 திருட்டு – வங்கி ATM கார்டு வைத்திருபோர் உஷார்

இந்நிலையில் கீழக்கரை மீன் கடை தெருவில் வசிக்கும் சர்புதீன் வீட்டிற்கு போன் ஒன்று வந்துள்ளது. மறு முனையில் பேசிய நபர் தான் வங்கியின் உயர் அதிகாரி பேசுவதாகவும் 2017 புதிய வருடத்திற்கான ஏ.டி.எம் பதிவினை தாங்கள் புதுப்பிக்கவில்லை என்றும் கூறி உள்ளார். ஏ.டி.எம் அட்டையில் உள்ள 16 இலக்க எண்னை கூறினால் உடனடியாக ஏ.டி.எம் கார்டு புதுபிக்கப்படும் என்றும், அவ்வாறு புதுப்பிக்காவிட்டால் தங்களின் ஏ.டி.எம் அட்டைக்கான சேவை நிறுத்தப்படும் என்றும் அவர் அதிகார தோரனையில் பேசி உள்ளார்.

இதை உண்மை என்று நம்பி ஏ.டி.எம் அட்டையில் உள்ள 16 இலக்க நம்பரையும் தன் மொபைல் நம்பருக்கு வந்த OTP நபரையும் கூறியுள்ளார். சில நிமிடங்களில் அவரது வங்கி கணக்கில் இருந்து 1 இலட்சம் ரூபாயை மர்ம ஆசாமி அபகரித்து உள்ளான். இதற்கான எஸ்.எம்..எஸ். விபரத்தை கண்ட சர்புதீன் பதறி அடித்து கொண்டு சம்பந்தப்பட்ட வங்கியினை அணுகி கேட்டபோது அது போல் வங்கியில் இருந்து யாரும் போன் செய்யவில்லை என்று கூறியதால் அதிர்ச்சி அடைந்த அவர் இது சம்பந்தமான புகாரை காவல் துறையில் அளித்துள்ளதாக தெரிகிறது.

நம் இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் இது போன்ற நூதன மோசடி கும்பலை சைபர் கிரைம் உள்ளிட்ட உயர்அதிகாரிகள் கண்காணித்து இத்தகைய தொடர் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பொது மக்கள் வேண்டுகோள் விடுத்து உள்ளனர். இது சம்பந்தமாக பொதுமக்கள் விழிப்புணர்வோடு இருக்க வேண்டும். வங்கி சம்பந்தமான எந்த ஒரு தகவல்களையும் எவருக்கும் தெரிவிக்க கூடாது. ஏதேனும் இது போன்ற சம்பவங்கள் நிகழ்ந்தால், தாமதிக்காமல்  உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கிக்கும், காவல் துறையினருக்கும் தகவல் கொடுக்க தயங்க கூடாது.

#Paid Promotion