Home செய்திகள் கூட்டணி கட்சிகளை மிரட்டுவதில் பிரதமர் மோடி பலசாலி – தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி..

கூட்டணி கட்சிகளை மிரட்டுவதில் பிரதமர் மோடி பலசாலி – தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பேட்டி..

by ஆசிரியர்

மதசார்பற்ற கூட்டணியின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி வருகிற 13-ஆம் தேதி கன்னியாகுமரி வருகிறார். அங்கு தேர்தல் பிரசாரத்துக்காக மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்துவதற்காக காங்கிரஸ் கட்சி தயாராகிக்கொண்டிருக்கிறது. எங்களது கூட்டணி என்பது கொள்கை சார்ந்த கூட்டணி. தமிழகத்தின் வளர்ச்சி, இந்தியாவின் வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாக வைத்து இந்தக் கூட்டணி அமைத்து இருக்கிறோம். மக்களை ஒன்றுபடுத்த வேண்டும், ஜாதியின் பெயரால், மதத்தின் பெயரால் மக்களை பிரிக்கக் கூடாது என்கின்ற உயர்ந்த லட்சியத்தை அடிப்படையாக கொண்டு இந்த கூட்டணி அமைக்கப் பட்டுள்ளது. அ.தி.மு.க.கூட்டணியை போன்ற சந்தர்ப்பவாத கூட்டணி அல்ல எங்களது கூட்டணி.

இந்த நாட்டினுடைய ஒற்றுமைக்கு கேடு விளைவிக்கக்கூடியவர்கள் ஒன்று சேர்ந்து மதத்தை நம்புகிறவர்கள், ஜாதியை நம்புகிறவர்களும் அந்த கூட்டணியில் இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த நாட்டின் பாதுகாப்பை அரசியல் ஆக்குகிற பிரதமர் அங்கு இருக்கிறார். ரஃபேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றமே மத்திய அரசாங்கம் முறையான ஆவணங்களை தவறவிட்டு இருக்கிறது அப்படி தவற விடுவது நியாயமா? என கேள்வி கேட்கிற அளவுக்கு அவர்களுடைய ஊழல் சென்று இருக்கிறது. காமராஜரும், மோடியும் ஒன்று என தமிழிசை சொல்கிறார். காமராஜருடைய தியாகம் என்ன மோடியினுடைய செயல்பாடு என்ன?. காமராஜரை உயிரோடு எரிப்பதற்காக முயற்சி செய்தவர்கள் ஆர்எஸ்எஸ் காரர்கள். தமிழிசைக்கு இப்படி கூறுவதற்கு எப்படித்தான் வாய் வந்ததோ தெரியவில்லை. காமராஜரையும் மோடியையும் ஒன்று படுத்துகிறார், நியாயப்படுத்துகிறார். சமூக நீதிக்காக போராடும் இயக்கம் எங்களுடைய இயக்கம். காங்கிரஸ் கட்சியும், திராவிட முன்னேற்றக் கழகமும், பொது உடமை கட்சிகளும்தான் தமிழகத்தில் சமூக நீதியை நிலைநாட்டியது. விளிம்புநிலை மக்களை மேம்படுத்த முயற்சி செய்த இயக்கங்கள் நாங்கள். ஆனால் ஒரே மொழி, ஒரே நாடு, ஒரே இனம், ஒரே கலாசாரம், ஒரே வகையான இறைவழிபாடு என்று சொல்லுகிற பாரதிய ஜனதா இட ஒதுக்கீடுக்கு எதிரான இயக்கம். அந்த இயக்கத்தோடு இன்று பலர் கூட்டு சேர்ந்து இருப்பது வியப்பை அளிக்கிறது. எங்களுடைய நோக்கம் பிரதமராக வரவேண்டும், முதல்வராக வரவேண்டும் என்பது மட்டுமல்ல. எல்லாவற்றுக்கும் மேலாக இந்திய இறையாண்மையை கட்டிக் காப்பாற்ற வேண்டும். காந்தி எப்படி இந்த தேசத்தை நம் கையில் கொடுத்தாரோ அதை விட அதிகமாக மேம்படுத்தவேண்டும். பல்லாயிரம் மொழிகளும், மக்களும் இருக்கின்ற நாட்டில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். வேற்றுமையில் ஒற்றுமை காண வேண்டும் என்பதுதான் இந்திய தத்துவம். அந்த தத்துவத்தை மேம்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் கன்னியாகுமரியில் நாங்கள் கூடுகிறோம். காங்கிரஸ் கட்சிக்கு எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்பதை இன்னும் இரண்டு தினங்களில் நாங்கள் முடிவு செய்ய இருக்கிறோம். அனேகமாக ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் அதுபற்றிய அறிவிப்பு வெளியாகலாம்.

இந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்கள், பொதுவுடமைக் கட்சித் தலைவர்கள் என அனைவரும் பங்கேற்கிறார்கள். ராணுவ தாக்குதலில் பாகிஸ்தானில் 300 தீவிரவாதிகள் உயிரிழந்துள்ளனர் என்பதை இந்திய ஊடகங்களுக்கு வேண்டுமானால் மத்திய அரசு சொல்லலாம். ஆனால் பன்னாட்டு ஊடகங்களுக்கு அதுபற்றிய படங்கள் கூட கிடைக்காமலா இருக்கும்.

பிரதமர் மோடி அரசியலில் பலமானவர் அல்ல. அரசியல் பொறுத்தவரையில் அவர் அஞ்சக் கூடியவர். கொள்கைரீதியாக கூட்டணி அமைக்காதது தமிழ் நாட்டின் சாபக்கேடு. தமிழ்நாட்டில் இரண்டு மூன்று அரசியல் கட்சியினர் எந்த பக்கம் எது தருகிறார்கள், என்ன லாபம் கிடைக்கும் என்பதை அடிப்படையாக கொண்டு கூட்டணி பேசி வருகின்றனர். அது முறையானது அல்ல. கொள்கை ரீதியாகத்தான் கூட்டணியை அமைக்க வேண்டும். தமிழகத்தில் வெளிப்படையாக தெரிந்தே அமந்துள்ள சந்தர்ப்பவாத கூட்டணி நாட்டிற்கு ஆபத்து. கூட்டணி கட்சிகளை மிரட்டுவதில் வேண்டுமானால் மோடி பலசாலியாக இருக்கலாம். எனில் அ.தி.மு.க.வுடனான கூட்டணி என்பது நேசமான கூட்டணி அல்ல. மிரட்டிப் பணிய வைக்கப்பட்ட கூட்டணி. இது ஜனநாயகத்திற்கு புறம்பானது. இன்றைக்கு அ.தி.மு.க.- பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருக்கிறது என்றால் அவர்கள் மீது ஏகப்பட்ட வழக்குகள் இருக்கின்றன. அவர்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கின்றது. எனவே அதற்காகவே அவருடன் கூட்டணி அமைத்துள்ளனர். இதை தமிழ் சமுதாயம் உணர்ந்து பார்க்க வேண்டும். டி.டி.வி.தினகரன் குறித்த கேள்விக்கு அவர் பதில் சொல்ல மறுத்து விட்டார். இவ்வாறு அவர் கூறினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!