Home செய்திகள்கீழக்கரை செய்திகள் பழனியில் மாற்றுத்திறனாளிகளின் விரோத நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் பழனி சார் ஆட்சியருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்…

பழனியில் மாற்றுத்திறனாளிகளின் விரோத நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவரும் பழனி சார் ஆட்சியருக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம்…

by ஆசிரியர்

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநிலக்குழு கூட்டம் மாநிலத்தலைவர் ஜான்சிராணி தலைமையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நேற்று (09.03.19) நடைபெற்றது. சங்கத்தின் மாநில துணைத்தலைவர் D.லட்சுமணன், மாநில பொதுச்செயலாளர் நம்புராஜன், மாநில பொருளாளர் சக்கரவர்த்தி உள்ளிட்ட சங்கத்தின் அனைத்து மாநில நிர்வாகிகளும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்டாட்சியர் தலைமையிலான மாற்றுத்திறனாளிகள் குறைகேட்பு கூட்டம் முறையாக நடத்தப்படுவதில்லை. குறிப்பாக கோட்டாட்சியர் கலந்துகொள்வதில்லை. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அடிப்படையான வசதிகள் செய்து தரப்படுவதில்லை. மனுக்களை வாங்குவதும், பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுவது குறித்து தகவல்கள் பராமரிப்பதோ, வெளிப்படைத்தன்மையுடன் குறைதீர் கூட்டங்களில் பகிர்ந்துகொள்வது இல்லை. மேலும், சம்மந்தப்பட்ட இதர அதிகாரிகள், மருத்துவர்கள் அனைவரும் பங்கேற்கும் கூட்டங்களாக மாநில வருவாய் நிர்வாக ஆணையர் அவர்களின் வழிகாட்டுதல் அடிப்படையில் இக்குறைதீர் கூட்டங்கள் நடத்தப்படாமல் சம்பிரதாயப்பூர்வமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இக்குறைபாடுகளை சுட்டிக்காட்டி திண்டுக்கல் மாவட்ட சங்கத்தின் சார்பில் மனு அளித்தும், நேரில் புகார் தெரிவித்தும், பலகட்ட போராட்டங்களை நடத்தியும் பழனி கோட்டாட்சியரின் செயல்பாடுகள் மாறவில்லை. மேலும், பழனி கோட்டாட்சியர் அவர்கள் எங்களது சங்கத்தையும், சங்க தலைவர்களையும் எதிரிகளாக பாவித்து பொய் வழக்கு போடுவதும், சங்கத்திற்கு எதிராக பத்திரிக்கை செய்தியாக அவதூறு பரப்புவதும், சங்க செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டை போடும் விதமாக போர்ஜரியான மாற்றுத்திறனாளி அமைப்பின் பெயரில் சங்க தலைவர்கள் மீது பொய்யான புகார் கொடுப்பதும் உள்ளிட்ட பல்வேறு அடாவடியான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

எனவே, பழனி கோட்டாட்சியரின் மாற்றுத்திறனாளி விரோத நடவடிக்கைக்கும், சங்கத்தின் மீது அவதூறு மற்றும் பொய் புகார்கள் கூறுவதற்கும் சங்கத்தின் மாநிலக்குழுவின் சார்பில் வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். மேலும், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உடனடியாக இப்பிரச்சனையில் தலையிட்டு திண்டுக்கல் மாவட்டம் பழனி கோட்டத்தில் முறையாக மாற்றுத்திறனாளி குறைதீர் கூட்டம் நடத்தவும், தவறான நடவடிக்கைகளை கையாண்டு வரும் பழனி கோட்டாட்சியர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமாறும் இம்மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது .

கீழை நியூஸுக்காக

திண்டுக்கல் மாவட்டம். ஒளிப்பதிவாளர் அழகர்சாமி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!