Home செய்திகள் தரமற்ற போலி நிருபர்கள்.. புகைப்பட கலைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை ஆட்சியரிடம் குறை தீர்க்கும் நாளில் புகார்..

தரமற்ற போலி நிருபர்கள்.. புகைப்பட கலைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க மதுரை ஆட்சியரிடம் குறை தீர்க்கும் நாளில் புகார்..

by ஆசிரியர்

மதுரை அண்ணாநகரை சேர்ந்த வக்கீல். முத்துக்குமார் இவர் மதுரை மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுசூழல் பாதுகாப்பு பிரிவின் மாவட்ட தலைவராகவும் தாமரை சேவகன் குழுவின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். இவர் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதாவிடம் ஒரு மனு அளித்தார். அதில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகத்திற்குள் பெயர் மற்றும் அடையாளம் தெரிந்த சிலரும், அடையாளம் தெரிந்து பெயர் தெரியாத சிலரும்  நிருபர்கள் மற்றும் போட்டோகிராபர்கள் போர்வையில் போலியாக சுற்றி வருகின்றனர். இவர்கள் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் உரிய அனுமதி பெறாமலும், பெயருக்காக ஏதாவது ஒரு பதிவை வைத்துக் கொண்டு ஒரு வருடம் கழித்து ஆர்.என்.ஐ யில் முறையாக பதிவு பெறாமலும் “பிரஸ்” என்று பொறிக்க பட்ட அடையாள அட்டையை கழுத்திலும், முதுகில் கேமரா பையையும் மாட்டி கொண்டு சுற்றி வருகிறார்கள். இவர்கள் வைத்துள்ள இந்த அடையாள அட்டையை வாங்கி பரிசோதித்து பார்த்தால் அது மதுரை மாவட்ட நிர்வாகத்தின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலரால் வழங்க பட்டது அல்ல என்பது நிரூபணமாகிறது. குற்ற வழக்கு உள்ளவர்களுக்கு செய்தியாளர் அடையாள அட்டை வழங்க கூடாதென தமிழக அரசு ஆணை வழிகாட்டு விதிமுறைகள் தெளிவாக உள்ளது. ஏற்கனவே செய்தியாளர் அடையாள அட்டை பெற்ற நபர்கள் மீது ஏதாவது குற்ற வழக்குகள் இருந்தது தெரிய வந்தாலும், செய்தியாளர் அடையாள அட்டை பெற்ற பிறகு அவர்கள் ஏதேனும் குற்ற செயல்கள் புரிந்து அதன்பிறகு அவர்கள் மீது குற்ற வழக்கு பதியப் பெற்றாலும் அவர்களின் செய்தியாளர் அடையாள அட்டையை ரத்து செய்ய அந்த அரசு ஆணையின் படி முழு வழிவகை உள்ளது. ஆனால் குற்ற வழக்குகளில் தொடர்புடைய சில நபர்களும் செய்தியாளர்கள் போர்வையில் மதுரை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் காலை முதல் இரவு வரை சுற்றி வருகிறார்கள். இவர்கள் கலெக்டரிடம் மனு கொடுக்க வரும் அப்பாவி பொது மக்களிடம் செய்தி வெளியிடுவதாக கூறி பணம் பறிக்கும் செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அவர்கள் அந்த அப்பாவி பொது மக்களிடமிருந்து அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த புகார் மனுவின் நகலை பெற்று கொள்கிறார்கள். பிறகு அதிலுள்ள எதிர் மனுதாரர்களின் முகவரியை வைத்து அந்த நபர்களிடம் நேரில் சென்று அவர்களை பற்றி செய்தி வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் பணம் கொடுக்க வேண்டுமென மிரட்டி பணம் பறித்து வருகிறார்கள். சுற்றுசூழல் மற்றும் மாசு பாதிப்பு இருப்பதாக கூறி எண்ணெய் நிலையங்கள், சாயப் பட்டரைகள்,  தோல் பதனிடும் நிலையங்கள், மாவு மில்கள், உரக் கம்பெனிகள் ஆகியவற்றின் மீது பொது மக்கள் புகார் அளித்தால் அதை வைத்து இந்த போலி செய்தியாளர்கள் அந்த நிறுவன முதலாளிகளிடம் சென்று மிரட்டி மாதாமாதம் மாமுல் தொகையும் வசூல் செய்து வருகிறார்கள். இதனால் புகார் அளித்த அப்பாவி பொது மக்கள் உரிய பரிகாரம் கிடைக்காமல் கடுமையாக பாதிக்க படுகிறார்கள். இவர்கள் அரசு நிகழ்ச்சிகளிலும் கூட்டத்தோடு கூட்டமாக  வந்து சென்று செய்தி மக்கள் தொடர்பு துறையின் முழு ஆதரவு தங்களுக்கு இருப்பது போல் வெளியில் காட்டி கொள்கின்றனர். இத்தகைய போலி பேர்வழிகள் மதுரை பழைய கலெக்டர் அலுவலகத்தில் ஏற்கனவே செயல்பட்ட  செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் முன்பு உள்ள பிளாட்பாரத்தை தங்களின் இருப்பிடமாக  பயன்படுத்தி வருகின்றனர். அந்த இடத்தில் கண்காணிப்பு கேமரா ஏதும் இல்லையென்பதால் மோசடி நபர்கள் பணம் பறிக்கவும் தாங்கள் பறித்த பணத்தை பங்கு பிரிக்கவும் அந்த இடம் மிகவும் வசதியாக உள்ளது. பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தேடி வரும்போது அவர்கள் அந்த இடத்தை விட்டு ஓடி ஒளிந்து தலைமறைவாகி விடுகிறார்கள். செய்தியாளர் அறைக்கும், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கும் சென்று விசாரிக்கும் போதுதான் இவர்கள் அனைவரும் டுபாக்கூர் பேர்வழிகள் என்பது பொதுமக்களுக்கு தெரிய வருகிறது.

சமீபத்தில் சென்னை உயர் நீதிமன்றம் நான்கு மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் பிரஸ் என்று போலியாக ஸ்டிக்கர் ஒட்டி திரிபவர்களை அடையாளம் கண்டு அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்திரவிட்டது. அந்த உத்திரவு இதுநாள் வரை மதுரை கலெக்டர் அலுவலக வளாகத்திற்குள் சுற்றி திரியும் போலி நிருபர்கள்ம்  மீதும் போலி போட்டோ கிராபர்கள் மீதும் செயல் படுத்த அதிகாரிகள் தயங்கி வருகின்றனர். ஏனென்றால் இவர்களுக்கு சில ஆளும் கட்சி அரசியல்வாதிகளின் ஆதரவும் உள்ளது.  இவர்களில் சிலர் ஆர்.என்.ஐ யில் கொடுத்து பதிய பெற்ற ஆபீஸ் முகவரியில் ஐஸ்கிரீம் பார்லரும், கரும்புச்சாறு பிளியும் மெஷின் மட்டுமே உள்ளது.  பத்திரிகை அலுவலகம் செயல்படுவதற்கான எந்த அறிகுறிகளும் அங்கு காணப் பட வில்லை. இந்த நபர்கள் எங்கேயாவது ஓரிடத்தில் நான்கு பக்கங்கள் மட்டுமே அடங்கிய வெறும் நூற்று கணக்காண செய்திதாள் பிரதிகளை மட்டுமே அச்சடித்து விட்டு பல ஆயிரம் பிரதிகள் அச்சடித்ததாக ஆர்.என்.  ஐ விதிகளை மீறி, பொய் கணக்கு காட்டி,  இந்திய அரசின் வருமான வரி துறையை ஏமாற்றியும், ஜி.எஸ். டி வரி ஏய்ப்பும் செய்து மத்திய அரசுக்கு வருவாய் இழப்பை உண்டாக்கி வருகின்றனர்.   

இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூணாக  விளங்கும் ஊடக த் துறையின் நன்மதிப்பை சீர் குலைக்கும் வகையில் செயல்படும் இவர்கள் தேச நலனுக்கு எதிரானவர்கள் ஆவார்கள். ஆகவே செய்தியாளர்கள் பெயரில் போலியாக திரிந்து பொது மக்களை ஏமாற்றி பிழைக்கும் இத்தகைய புல்லுருவிகளை அடையாளம் காணும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம், மதுரை மாநகர் காவல் துறை, மதுரை மாவட்ட காவல் துறை மேற்பார்வையில் ஒரு சிறப்பு குழு அமைக்கும் படியும், ஆர்.என்.ஐ அனுமதி பெறாமலும் ஆர்.என்.ஐ அனுமதியை பெயரளவிற்கு வாங்கி வைத்து கொண்டு குறிப்பிட்ட இடத்தில் அலுவலகம் நடத்தாமலும், குறைந்த அளவு செய்திதாள் பிரதிகளை அச்சடித்து ஆர்.என்.ஐ விதிகளை மீறி வரி ஏய்ப்பு செய்து மத்திய அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தும் இத்தகைய சமூக விரோத கும்பல் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன் என கூறியிருக்கிறார். மனுவை பெற்று கொண்ட மாவட்ட கலெக்டர். சங்கீதா உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்திரவிட்டார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com