Home செய்திகள் யுரேனியக் கனிமத் தாதுவினை முதன்முதலில் கண்டுபிடித்த, உயிரின் சாத்திய கூறுகளை ஆராய்ந்த விளாதிமீர் இவனோவிச் வெர்னத்ஸ்கி நினைவு தினம் இன்று (ஜனவரி 6, 1945).

யுரேனியக் கனிமத் தாதுவினை முதன்முதலில் கண்டுபிடித்த, உயிரின் சாத்திய கூறுகளை ஆராய்ந்த விளாதிமீர் இவனோவிச் வெர்னத்ஸ்கி நினைவு தினம் இன்று (ஜனவரி 6, 1945).

by mohan

விளாதிமீர் இவனோவிச் வெர்னத்ஸ்கி (Vladimir Ivanovich Vernadsky) மார்ச் 12, 1863ல் புனித பீட்டர்சுபர்கில் பிறந்தார். தனது பதினேழாவது பிறந்தநாள் பரிசாக சிறுவனான வெர்னத்ஸ்கி தன் தந்தையிடம் டார்வினின் நூல்களை பரிசாக கேட்டதிலிருந்து அவரது தேடல் தொடங்கிவிட்டது எனலாம். வெர்னத்ஸ்கியின் தந்தையால் எனது அன்பு மகனுக்கு என கையெழுத்திடப்பட்ட அந்நூல் இன்று மாஸ்கோவில் வெர்னத்ஸ்கியின் நூலக அறையில் காட்சிப் பொருளாக வைக்கப்பட்டுள்ளது. வெர்னத்ஸ்கியின் இல்லமே காட்சியகமாக உள்ளது. இளைஞன் வெர்னத்ஸ்கி தன் 21 ஆம் வயதில் பீட்டர்சுபர்க் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் கலைகளுக்கான மாணவர் அமைப்பில் சமர்ப்பித்த கட்டுரையொன்றில் பின்வருமாறு எழுதியிருந்தான். உயிர் என்றால் என்ன? மேலும் உறழ்திணைப்பொருள்-என்றென்றும் தொடர்ச்சியான விதிக்களூக்குட்பட்ட இயக்கங்களுடன், முடிவற்ற ஆக்கமும் அழிவும் ஓய்வற்ற தன்மையும் கொண்ட அந்த உறழ்பொருள் உயிரற்றதா? இப்பெரும் புடவியில் காண இயலாத ஒரு சிறு புள்ளியின் மேல் மிக மெதுமென்மையாக படர்ந்திருக்கும் ஓர் சிறு படலத்தில் மட்டுமே அத்தனி சிறப்பியல்புகள் உள்ளனவா? அப்பால் இருக்கும் பெரும் பரப்பனைத்தும் உயிரற்ற உறழ்திணைப் பொருளே அரசாள்கிறதா? …காலம் மட்டுமே இக்கேள்விகளுக்கு பதிலளிக்க முடியும். அறிவியல் ஒருநாள் இக்கேள்விகளுக்கு விடையளிக்கும்.அத்தேடலும் தேடலில் ஏற்பட்ட காட்சித் தெறிப்புகளுமே வெர்னத்ஸ்கியின் வாழ்வின் அரும்பணியாக விளங்கின. பெரும் மெய்யியல் கேள்விகள் மனதில் சுழன்றாட தனது தேடலின் பாதையை இயற்கை அறிவியலில் தொடங்கினார். இவர் 1885ல் புனித பீட்டர்சுபர்கு பல்கலைக்கழகத்தில் பயின்று பட்டம் பெற்றுள்ளார். அப்போது அப்பல்கலைக்கழக கனிமவியல் பதவி வெற்றிடமாக இருந்துள்ளது. மண்ணியலாளரான வாசிலி தோகுசேவ் என்பவரும் புவியியலாளரான அலெக்சி பாவ்லோவ் என்பவரும் சிலகாலம் அங்கு கனிமவியலில் பாடம் எடுத்துள்ளனர். வெர்னத்ஸ்கி கனிமவியலில் நுழைய விரும்பினார். இவர் 1888ல் சுவிட்சர்லாந்தில் இருந்த தன் மனைவி நடாஷாவுக்குப் பின்வருமாறு எழுதியுள்ளார்: இன்று பலர் செய்வதைப் போல தரவுகளுக்காகவே தகவல்களை நிறைய திரட்டலாம். திட்டமோ நோக்கமோ ஏதுமின்றி, ஒரு சிறு வினாவாவது எழுப்பி அதற்குப் பதிலாகவோ அன்றி இப்படி செய்வதில் எனக்கு ஆர்வமேதும் இல்லை. வேதித் தனிமங்களின் சிக்கல்களையும் அவற்றி திரலைல் நிகழும் ஒழுங்குமுறையையும் பார்க்கும்போது இன்னமும் இங்கே கண்டறிய பல கமுக்கங்கள் மறைந்துள்ளன. புவியில் பல்வேறு களங்களில் நிகழும் இவை குறிப்பிட்ட விதிகளின்படி தான் விளைகின்றன. ஒருநால் இவ்விதிகள் நமக்கு நன்கு தெரியவரும். அப்போது நாம் புவியடைந்த பொது மாற்றங்களுக்கும் புவியின் அண்டவியல் பொதுவிதிகளுக்கும் இடையே ஒரு நுண்ணிழை ஊடுபாவுவதை நாம் அறிவோம்.மேலும் வெர்னத்ஸ்கி. 25 ஆவது வயதில் தன் வாழ்க்கை துணைவிக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் வெர்னத்ஸ்கி குறிப்பிட்டார். வாழ்க்கை வியப்பு மிக்கது. மானுட வரலாற்றிலும், கணிதவியலிலும் எனக்குமுதலில் ஈர்ப்பு உண்டாயிற்று. எனினும் நான் இயற்கை அறிவியலை என் ஆய்வின் வழித்தடமாக மேற்கொண்டேன். இயற்கையின் வரலாற்றிலிருந்து மாந்தரின வரலாற்றுக்கு முன்னேறக் கருதினேன். கணிதவியலை பொறுத்தவரை எனக்கே என் திறமையில் அவ்வளவாக நம்பிக்கையில்லை. தனது முப்பதாம் வயதில் அவர் டால்ஸ்டாயைச் சந்தித்தார். அச்சந்திப்பின் தாக்கம் அவர் வாழ்வு முழுவதுமாக இருந்ததை நாம் உணர முடிகிறது. ஏப்ரல் 23, 1892ல் வெர்னத்ஸ்கி பின்வருமாறு எழுதுகிறார். இன்று டால்ஸ்டாய் எங்களை காண வந்திருந்தார். நெடு நேரம் நாங்கள் அறிவியல் கருத்துக்கள் குறித்து பேசிக் கொண்டிருந்தோம். நான் முதலின் நினைத்திருந்ததைக் காட்டிலும் டால்ஸ்டாயின் எண்ணங்களில் பெரும் ஆழம் உள்ளது. அந்த ஆழம் எவை குறித்ததென்றால்:1. நம் வாழ்வின் அடிப்படை, உண்மையினைத் தேடுவதாக இருக்க வேண்டும்.2. ஒருவரது வாழ்வின் நோக்கம் தான் கண்டறியும் உண்மையை எவ்வித தயக்கமும், பரிசுகளின் எதிர்பார்ப்புமின்றி வெளிப்படுத்துவதாக இருக்க வேண்டும்.வெர்னத்ஸ்கியின் குருவே வெர்னத்ஸ்கியின் அறிவியல் ஆளுமையின் மதிப்பீடுகளை பெரிதும் உருவாக்கியவர். அவர் புகழ் பெற்ற உருசிய மண்ணியலாளரான தோகுசேவ்(1846-1903) என்பவர் ஆவார். ஆனால் மண்ணியலைக் காட்டிலும் விரிவாக சென்ற அறிவியல் பார்வை தோகுசேவினது. சுற்றுப்புற சூழலியலின் உலகத்தரம் வாய்ந்த பாடநூலாக விளங்கும் சூழலியலின் அடிப்படைகள் ஆசிரியரான ஓதம், தோகுசேவினை ‘சூழலியலின் முன்னோடி அறிவியலாளர்’ என்றே குறிப்பிடுகிறார். பல தொடர்பற்றதாக தோன்றும் துறைகளிலிருந்து பெறப்பட்ட ஆராய்ச்சி விளைவுகளை அழகிய மெய்யியல் இழைகளால் ஒருங்கிணைத்து உயிக்கோளம் குறித்து புதியதோர் பார்வையை அறிவியல் சார்ந்து முன்வைத்தவர் வெர்னத்ஸ்கி. அப்பார்வையின் மூலம் புதிய இயற்கை உறவுகளை நாம் கண்டடைய முடியும். இயற்கை குறித்த நம் அறிவியல் பார்வை ஆழமும் அகலமும் கொண்டு முன்னகர முடியும். புவிவேதியியலே வெர்னத்ஸ்கியின் துறை. உயிரியல் அல்ல. இன்று போல தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத, மேலும் அரசியல் சுவர்களும் இரும்புத் திரைகளும் விடுதலையின் மூச்சுவளையை நெறித்த அக்கால கட்டத்தில், உலகெங்கும் உள்ள புவிவேதியியல் அறிஞர்களுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார். வெர்னத்ஸ்கி மிகப்பரவலும் ஆழமும் கொண்ட புவிவேதியியல் ஆராய்ச்சிகள் மூலம் இயற்கையின் சில அடிப்படை உண்மைகளை கண்டறிந்தார்.1916ல் உருசியாவில் யுரேனியக் கனிமத் தாதுவினை அவர் முதன்முதலில் கண்டுபிடித்தார். 1918ல் ரேடியம் உருசியாவில் தயாரிக்கப்பட்டது. 1922ல் பீட்டர்சுபர்க்கில் ரேடியம் மையத்தை உருவாக்கினார். 1938 வரை அதன் இயக்குநராக விளங்கினார். இம்மையத்தின் தொடக்க உரையில் அவர் ‘அணு ஆற்றல் அளப்பரிய ஆற்றலை நம் கையில் வைத்துள்ளது. அதனை ஆக்கத்துக்குப் பயன்படுத்துகிறோமா அல்லது மானுட இன அழிவுக்கு பயன்படுத்துகிறோமா என்பது நம் கையில் உள்ளது. அளப்பரிய ஆற்றலுடன் விளங்கும் அறிவியலுக்கு விழுமியங்களின் இன்றியமையாத தேவையும் ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டார். 1922ல் அவர் விண்கற்கள் குறித்த ஆய்வினையும் தொடங்கினார். அது குறித்து ஆய்வுக் கட்டுரைத் தொடரினையும் அவர் வெளியிட்டார். விண்கல் ஆய்வு கழகத்தையும் உருவாக்கினார். தன் வாழ்நாள் முழுவதும் அக்கழக செயல்பாடுகளின் வழிகாட்டியாக இருந்தார். அறிவியலுக்கு வெர்னத்ஸ்கியின் வாழ்வின் மிகப் பெரிய பங்களிப்பு, 1926ல் புனித பீட்டர்சுபர்க்ல் மிக அமைதியாக 2000 பிரதிகளே வெளியிட்ட ‘உயிரிக்கோளம்’ (The Biosphere) எனும் நூல்தான். 1929ல் இதன் பிரெஞ்ச் பதிப்பு பாரிசில் வெளியாகியது. 1986 இல்தான் முதல் ஆங்கில பதிப்பு வெளியிடப்பட்டது.வெர்னத்ஸ்கி 1922-23ல் சோபோர்னில் நடைபெற்ற புவிவேதியியல் மாநாட்டில் கலந்து கொண்டிருந்த போது அவரது உரைகளை ஒரு பிரெஞ்சு துறவியும் மற்றொரு பிரெஞ்சு கணிதவியலாளரும் கேட்டனர். லெ ராய் எனும் அந்த தத்துவ அறிஞருடனும், தெயில் ஹார்ட் தி சார்டின் எனும் அந்த துறவியுடனும் வெர்னத்ஸ்கி நட்பு கொண்டார். நூஸ்பியர் எனும் உணர்திறக் கோளம் குறித்த உருவாக்கத்தில் அவர்கள் இணக்கம் கொண்டனர். வெர்னத்ஸ்கி இறுதியாக எழுதியது ‘உணர்திறக்கோளம் (Noosphere) குறித்து சில வார்த்தைகள்’ எனும் கட்டுரையே. முதலில் உருசிய மொழியில் வெளிவந்த அது பின்னர் 1945ல் அமெரிக்கன் சயிண்டிஸ்ட் இதழில் ‘உயிர்க்கோளமும் உணர்திறகோளமும்’ எனும் தலைப்பில் வெளிவந்தது. ‘மானுடம் முழுமையுமாக ஒரு மகத்தான புவியியல் இயங்காற்றலாக படிமலர்ந்துள்ளது’ என அதில் குறிப்பிடுகிறார். வெர்னாட்ஸ்கி மிகப்பரவலும் ஆழமும் கொண்ட புவிவேதியியல் ஆராய்ச்சிகள் மூலம் இயற்கையின் சில அடிப்படை உண்மைகளை கண்டறிந்தார். புவியின் மேல்தோட்டில் காணப்படும் பருப்பொருளை அவர் பின்வருமாறு பகுப்பு செய்தார்: இப்பகுப்பு புவிவேதியியல் அடிப்படையில் செய்யப்பட்டது என்பதனை கருத்தில் கொள்க.உயிர்களில் உறையும் உயிர் வாழும் பருப்பொருள்கள். உயிர்களால் உருவாக்கி உருமாற்றம் செய்யப்பட்டதான உயிரி ஆக்கும் பருப்பொருள்கள்.உயிர்கள் பங்கு பெறாத பருப்பொருள்கள். உயிர்களாலும், உயிரற்ற வினைகளாலும் உருவாகும் உயிர்திணை-உறழ்திணைப் பருப்பொருள்கள்.இயற்கை கதிரியக்க விளைவுப் பருப்பொருள்கள்.துகளாக்கப்படும் பருப்பொருள்கள்.புவியில் காணப்படும் அண்டவெளிப் பருப்பொருள்.இன்று இந்த பகுப்பு நமக்கு எளிதான ஒன்றாக தோன்றக் கூடும். ஆனால் புவிவேதியியலும் உயிரியக்கங்களும் தெளிவாக வரையறுக்கப்பட்டிராத எல்லைகளுடன் விளங்கிய ஒரு காலகட்டத்தில் இப்பார்வை புரட்சிகரமான ஒன்றாகும். இன்றும் வளிமண்டல வேதியியல், உயிரியல், நீரியல் ஆகிய துறைகளிடையே ஒருமித்த இழைகளை நிறுவுதலென்பது எளிதானதல்ல. செங்கடலோரம் வெட்டுக்கிளிக் கூட்டம் குறித்து ஆய்வுசெய்த கர்த்தூசரின் ஆய்வுகள் அடிப்படையில் காலத்துடன் தொடர்புடைய உயிர்வாழும் பருப்பொருளின் புவிபரவலும் இடம்பெயர்தலும் குறித்த வெர்னத்ஸ்கியின் வரிகள் அவரது பார்வையின் தன்மையை நமக்கு தெளிவாக்குகின்றன. வெர்னத்ஸ்கிக்கு முன் ஒரு வேதியியலாளரும் இவ்வாறு உயிரை கண்டதில்லை. இன்றைய அறிவியல் கண்ணோட்டத்திலிருந்தும் கூட இப்பார்வை துணிச்சலானதுதான். ஒற்றைப்படை தன்மை கொண்ட உயிர் பருப்பொருட் குழுக்களையும், பன்மைத்தன்மை கொண்ட உயிர் பருப்பொருட் குழுக்களையும் அவர் வேறுபடுத்திக் காட்டினார்.இக்கணிப்புகளின் அடிப்படையில் அவரால் ஒரு புதிய அறிவியல் புலமே உருவாக்கப்பட்டது. ‘உயிர்-புவி-வேதியியிலே’ (Biogeochemistry) அது. இப்புலத்தின் அடிப்படை விதிகளாக (இவை திட்டவட்ட மாற்ற இயலாத விதிகளல்ல, மாறாக திசைகாட்டிகள் என கொள்ளுதலே நலம்.) அவர் பின்வரும் மூன்றையும் கண்டறிந்தார்.1. உயிரிவழிப் புலம் பெயர்தலுக்கு (Biogenic migration) உட்படுத்தப்படும் தனிமங்களின் அணுக்கள் உயிரிகோளத்தில் தம் அறுதிப் பேரளவு வெளிப்பாட்டைப் பெறும் வகையில் இயங்குகின்றன. 2.புவியியல் காலவோட்டத்தில் (Geological time) உயிரினங்களின் படிமலர்ச்சி எந்தத் திசை நோக்கி நகருமென்றால், எத்தகைய அமைப்புகள் உயிர்வழிப் புலம் பெயர்தலினைப் பேரளவில் ஏற்கின்றனவோ அத்தகைய அமைப்புகள் உருவாகும் திசை நோக்கியதாக அமையும்.3.முன்-காம்பிரிய புவியூழிக்குப் பின் உடனடியாக அப்போது உயிர்வழிப் புலம் பெயர்தலுக்கு உட்படுத்தப்பட்ட அணுக்கள் தம் அறுதிப் பேரளவு வெளிப்பாட்டினை எட்டும் வகையில் உயிரின எண்ணிக்கை விளங்கியது.பல படிமலர்ச்சிப் புதிர்களுக்கான விடைகளை நாம் தேட வேண்டிய திசைகளை வெர்னத்ஸ்கி நமக்கு தந்துள்ளார். தொல்பழங்கால உறைந்த உயிர் ஆராய்ச்சியாளரான ஸ்டாபன் ஜே கோல்ட் மிகவும் பிரபலபடுத்திய ஒரு உயிரியல் உண்மை காம்பிரியப் புவியூழியில் ஏற்பட்ட மாபெரும் உயிர் அமைப்பு மாற்றம். இன்று நாம் அனைத்து உயிரினங்களிலும் காணும் அடிப்படை அமைப்பு ஒற்றுமைகள் காம்பிரியப் ‘ உயிர்ப்பெரு வெடிப்பில்’ (Big Bang of Life) தான் தொடங்கியது. இதற்கான காரணிகளை படிமலர்ச்சி அறிவியலாளர்கள் ஆராய்ந்த வண்ணம் உள்ளனர். இதில் புவி-வேதி காரணிகளின் பங்கினை – அப்பங்கு நிச்சயம் தீர்மான பங்காகவே இருக்க கூடும்- அறிய வெர்னத்ஸ்கியின் விதிகள் நமக்கு பெருமளவில் உதவக்கூடும். கதிரியக்கச் சிதைவினை மனிதர்கள் கட்டுப்படுத்தி ஆற்றலுக்கு பயன்படுத்த முடியும் என கூறிய முதல் அறிவியலாளர் வெர்னத்ஸ்கியே. வெர்னத்ஸ்கி உயிரிக்கோளத்தில் மானுட எண்ணத்தின் தாக்க இழைகள் ஓடும் பகுதியை உனர்திறக்கோளம் என்றார். இந்த உணர்திறக்கோளத்தின் செயல்பாடுகளினால் ஏறபடும் புவிவேதி மாற்றங்களை உயிரிக்கோளத்துடன் இணைவித்து பார்க்கும் முயற்சியை அவர் மேற்கொண்டார்.இவர் 1930களிலும் 1940களின் தொடக்கத்திலும் சோவியத் அணுகுண்டுத் திட்டத்தில்அறிவுரையாளராகப் பணீயாற்றினார். அணுக்கரு மின்திறன் உருவாக்கத்துக்கு வன்மையாக குரல் எழுப்பினார். சோவியத் ஒன்றிய யுரேனியம் வள ஆய்வை மேற்கொண்டார். இவர் தனது ரேடியம் நிறுவனத்தில் அணுப்பிளவு ஆய்வை மேற்கொண்டார். என்றாலும் முழுத்திட்டமும் கண்காணித்து நிறைவேறுவதற்குள் இவர் இயற்கை எய்தினார். 1936ல் பெங்களூரில் இயங்கி வந்த உயிர் வேதியியல் கழகத்தில் (Society for Biochemistry) இவர் ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினரானார். இவருக்கு மதிப்பு நல்க, மாஸ்கோ வளாகமொன்றான உக்ரைன் தேசிய நூலகமும் கிரீமியாவில் உள்ள தாவரிதா தேசியப் பல்கலைக்கழகமும் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளன. உயிர்க்கோளத்திற்கும் புவியியலுக்குமான தொடர்புகளை ஆராய்ந்த முன்னோடி அறிவியலாளர் பாவெல் செரென்கோவ் ஜனவரி 6, 1945ல் தனது 81வது அகவையில் மாஸ்கோவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia

தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!