கதிரியக்கத்தைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற ஹென்றி பெக்கெரல் நினைவு தினம் இன்று (ஆகஸ்ட் 25, 1908).

அந்துவான் என்றி பெக்கெரல் (Antoine Henri Becquerel) டிசம்பர் 15, 1852ல் பாரிசு நகரத்தில் பிறந்தார். இவர் மற்றும் இவரது மகன் சீன் உட்பட நான்கு தலைமுறை அறிவியலாளர்களை இவரது குடும்பம் பெற்றுள்ளது. 1892 ஆம் ஆண்டில் பிரான்சின் தேசிய அரும்பொருட் காட்சி சாலையில் இயற்பியல் பிரிவின் தலைவராகவும், பின்னர் 1894ல் மேம்பாலங்கள் மற்றும் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் பொறியியலாளராகவும் ஆனார். பெக்கெரல் 1896ல் யுரேனியம் உப்புக்களில் ஒளிர்வை (phosphorescence) ஆராயும் போது தற்செயலாக கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். வில்லெம் ரோண்ட்கனின் கண்டுபிடிப்புகளை ஆராயும் ஒரு சோதனையில், பெக்கெரல் ஒளிப்பாயப் பொருளான பொட்டாசியம் யூரனைல் சல்பேற்றை ஒளிப்படத் தட்டுக்களில் (photographic plates) வைத்து, தட்டுகளை கருப்புக் காகிதத்தினால் சுற்றி வைத்து சூரிய ஒளியை செலுத்தினார். வெயில் சூடேறும்படி விடப்பட்டிருந்த பொருள்களில் சில, பின்னர் இருட்டில் பளபள என்று ஒளி வீசுவதைப் பற்றிய ஆராய்ச்சியே அந்த ஒளிர்தல் என்ற தத்துவம். அவருடைய அறிவியல் ஆய்வில், யூரேனியம் அடங்கிய பொருளாகிய பிட்சு-பிலெண்ட் என்பதில் யுரேனியத்தைத் தவிர, வேறு ஏதோ ஒரு தனிமம் இருக்கிறது என்பதைக் கண்டார். ஆனாலும் பரிசோதனை தொடங்க முன்னரே புகைப்படத் தட்டுக்கள் முழுமையாகப் பாதிப்படைந்ததை (exposed) அவதானித்தார்.

யுரேனியமும் அதன் உப்புக்களும் கண்ணிற்குப் புலப்படாத கதிர்வீச்சுக்களை உமிழ்கின்றன என்றும் அவை காகிதம், மரம், கண்ணாடி போன்றவற்றின் வழியே ஊடுருவி ஒளித்தட்டைப் பாதிக்கின்றன என்றும் கண்டறிந்தார். கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக 1903ல் மேரி கியூரி மற்றும் பியேர் கியூரி ஆகியோருடன் சேர்த்து இவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. கதிரியக்கத்தின் எஸ்.ஐ முறை அலகுக்கு (S.I Unit) இவரது நினைவாக பெக்கெரல் (Bq) எனப் பெயர் சூட்டப்பட்டது. 1908ல் பெக்கெரல் அறிவியல் கழகத்தின் நிரந்தர செயலாளராக நியமிக்கப்பட்டார். ரம்ஃபோர்ட் விருது (1900), ஹெல்ம்ஹோல்ட்ஸ் விருது (1901), இயற்பியலுக்கான நோபல் பரிசு (1903), பார்னார்ட் விருது (1905) போன்ற விருதுகளை பெற்றுள்ளார். கதிரியக்கத்தைக் கண்டுபிடித்த நோபல் பரிசு பெற்ற ஹென்றி பெக்கெரல் ஆகஸ்ட் 25, 1908ல் தனது 55வது அகவையில் பிரான்சில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.