Home செய்திகள் தவறு செய்தவர் எவராக இருப்பினும் அவருக்குத் தண்டனை அளித்திடவும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடாமலும் இருக்க சர்வதேச நீதி நாள் இன்று (ஜூலை 17).

தவறு செய்தவர் எவராக இருப்பினும் அவருக்குத் தண்டனை அளித்திடவும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடாமலும் இருக்க சர்வதேச நீதி நாள் இன்று (ஜூலை 17).

by mohan

நீதியை நிலைநாட்டவும் நீதிமன்றங்களின்மீது நம்பிக்கைகொள்ளவுமே, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 17-ம் நாள் சர்வதேச நீதி நாள் கொண்டாடப்படுகிறது. இதே நாளில்தான், ரோமில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. இதனாலேதான், இந்த நாளை சர்வதேச நீதி நாளாகத் தேர்ந்தெடுத்தது ஐக்கிய நாடுகள் சபை. நீதிமன்றங்களின்மீது நம்பிக்கை உண்டாகவும், தவறு செய்தவர் எவராக இருப்பினும் அவருக்குத் தண்டனை அளித்திடவும், நிரபராதிகள் தண்டிக்கப்பட்டு விடாமலும் இருக்க, இந்த நாள் அனுஷ்டிக்கப்படுகிறது. நாடுகளைத் தாண்டியும் சர்வதேச அளவிலும் ஒரு நாட்டுக்கான நீதியைப் பெற்றுக்கொள்ள, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உள்ளது என்பதையும், அது நிச்சயம் நீதியை அளிக்கும் என்பதையும் நினைவுறுத்தவே இந்த உலக நீதி நாள் கொண்டாடப்படுகிறது.

‘எல்லாரும் ஓர் நிறை, எல்லாரும் ஓர் விலை, எல்லாரும் இந்நாட்டு மன்னர்’ என்று புளகாங்கிதம் அடைந்து பாடியவன் மகாகவி பாரதி. மண்ணில் பிறந்த எல்லோரும் சமமானவர்கள். ஆண் பெண், படித்தவர் படிக்காதவர், ஏழை பணக்காரர், உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதமே இல்லாமல் வாழ வேண்டும் என்பதே எல்லா நாட்டின் சட்டமும் விருப்பமும் ஆகும். இதை நிலை நாட்டவே, ஒவ்வொரு நாட்டிலும் நீதி வகுக்கப்படுகிறது. ஒரே ஒரு தனி மனிதனுக்காவது அவனது உரிமைகள் மறுக்கப்படும்போது, அந்த நாட்டின் சட்டம் அவனுக்கு நீதி வழங்குகிறது. இதற்காகவே நீதிமன்றங்கள் செயல்படுகின்றன. ஒருவேளை, நீதி மறுக்கப்படும்போதோ தாமதிக்கப்படும்போதோ மக்களின் வாழ்க்கை முறை அச்சத்துக்குள்ளாகிறது.

அதிக எண்ணிக்கையிலான சர்வதேச குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிவிடுகின்றனர். அதற்கு, அந்த மாநிலங்களுடைய அணுகுமுறையில் உள்ள பலவீனமும் காரணம். அதனால், ஒரு நாட்டினுடைய உள் விவகாரங்களின் கட்டமைப்புகள் வலிமை அடைந்திருந்தாலே சர்வதேச குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்புவதை தடுக்க முடியும். அதற்காகன நடவடிக்கைகள் வகுக்கும் நாளாக இந்த உலக நீதி நாள் அமையட்டும். உலகின் பல்வேறு வன்முறை சம்பவங்களில் அநீதி தலை தூக்குவது தவிர்க்க முடியாததாக உள்ளது. ஆனால், அந்த அநீதியை செய்தவர்கள் தண்டிக்கப்பட்டார்களா என்பது உலக மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அப்படி அவர்கள் தண்டிக்கப்படாத போது, உலகின் பாதுகாப்பு அமைப்புகள் நொறுங்கியதாகிவிடுகிறது. நாடுகளுக்கு இடையிலான ஒப்பந்தம், சந்திப்புகள், புரிதல்கள் எல்லாமே போலியானது ஆகிவிடுகிறது.

பெண்களுக்கு எதிரான கொடுமைகள், ஒரு நாட்டுக்குள் நடக்கும் இனப்படுகொலைகள், நாடுகளுக்கு இடையிலான பயங்கரவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்கலாம். மேலும், அதற்கு தீர்வு காணும் வழிகளை தேடும் விவாதங்கள், சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகள் மூலமாக, இந்த நாளில் உலக நீதி பற்றிய கருத்தை எடுத்துரைக்கலாம். நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை முடிவுக்கு வராமல் காஷ்மீர் பிரச்சனைபோல நீடிப்பதற்கு காரணம், அதில் உள்ள நீதியை கண்டுபிடிப்பதற்கான தாமதமல்ல. ஒரு பிரிவினருக்கு நீதியாக தெரிவது இன்னொரு பிரிவினருக்கு அநீதியாக கருதும் மனோபாவமும் அரசியல் நெருக்கடிகளும்தான்.

நாட்டில் நடக்கும் கொடுமைகளைத் தட்டிக் கேட்கவும், நீதிமுறைகளைத் தவறாது கடைப்பிடிக்கவும் இந்த நாளில் உறுதி ஏற்போம். சமாதானமும் சகிப்புத்தன்மையும் நம்முள் உருவாக எண்ணுவோம். இதுவே இந்நாளில் நமக்கு தேவைப்படும் நல்ல ஆயுதம். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!