Home செய்திகள் அறிவியல் புரட்சியில் முக்கியமான கெப்ளர், மூன்றாம் விதியை அறிவித்த தினம் இன்று (மார்ச் 8, 1618).

அறிவியல் புரட்சியில் முக்கியமான கெப்ளர், மூன்றாம் விதியை அறிவித்த தினம் இன்று (மார்ச் 8, 1618).

by mohan

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த ஜோகன்னஸ் கெப்ளர், கோள்களின் சுற்று வட்டப்பாதையைப் பற்றிய தனது மூன்றாவது விதியை மார்ச் 8, 1618ஆம் ஆண்டு வெளியிட்டார். வானியலுக்கு, கெப்லரின் முதன்மையான பங்களிப்பு கெப்லரின் கோள் இயக்க விதிகள் எனப்படும் மூன்று விதிகளாகும். கண்பார்வைக் குறைவுள்ளவராக இருந்தும், மிகவும் திறமையுள்ளவராக விளங்கிய ஜெர்மானியக் கணிதவியலாளரான கெப்லரின் விதிகளின் உருவாக்கத்துக்கு டென்மார்க்கைச் சேர்ந்த வானியலாளரான டைக்கோ பிரா (Tycho Brahe) என்பவரது துல்லிய வானியல் குறிப்புகள் (அவதானிப்புகள்) மிகவும் துணை புரிந்தன.

ஐசாக் நியூட்டனுடைய பின்னாளைய கண்டுபிடிப்புகளான, நியூட்டனின் இயக்கவிதி மற்றும் புவியீர்ப்பு தொடர்பான விதிகள் என்பவற்றின் உருவாக்கத்துக்குக் கெப்லரின் கண்டுபிடிப்பு அடிக்களமாக அமைந்தது எனலாம். தற்கால நோக்கில், கெப்லரின் விதிகள், நியூட்டனின் விதிகளின் விளைவுகளாக இருந்தாலும், வரலாற்றின்படி, கெப்லரின் விதிகளே முதலில் வெளியானவை. கெப்லர் சூலை 19, 1595ல் ஒரு ஆச்சரியமான அனுபவத்தைப் பெற்றார். கிராசில் கற்பித்துக் கொண்டிருக்கும்போது, இராசி வட்டத்தில் சனிக் கோளினதும், வியாழக் கோளினதும் ஆவர்த்தனப் பொருந்துகையை விளக்கும் போது, ஒழுங்கான பல்கோணியொன்று குறித்த விகிதத்தில் வெளி வட்டமொன்றையும், உள்வட்டமொன்றையும் கொண்டிருக்கும் என அவர் உணர்ந்தார். இதற்கு அகிலத்தின் அமைப்பை அவர் காரணங் காட்டினார். அறியப்பட்ட வானியல் அவதானிப்புக்களைக் கொண்டு ஒரு சீரான பல்கோணிகளின் ஒழுங்கமைப்பைக் கண்டுபிடிப்பதில் தோல்வியடைந்த பிறகு, கெப்லர் முப்பரிமாண வடிவங்களை பரிசோதிப்பதில் ஈடுபட்டார். இதன்போது, ஒவ்வொரு பிளேட்டோனியத் திண்மமும் சீராக ஒரே (கோளத்தினால்) சூழப்பட்டதாக இருப்பதைக் கண்டுபிடித்தார்.

இவ்வாறு ஒவ்வொரு பிளேட்டோனியத் திண்மமும் முற்றாக ஒரு கோளத்தினால் சூழப்பட்டதாகவும், ஒவ்வொரு திண்மத்தினுள்ளும் இன்னொரு திண்மம் இருக்கத் தக்கதாகவும் அமைப்பொன்றை உருவாக்கும்போது, ஆறு அடுக்குகள் கொண்ட ஒரு அமைப்பாக அது இருப்பதைக் கண்டறிந்தார். இவ் ஆறு அடுக்குகளும், அப்போது அறியப்பட்டிருந்த ஆறு கோள்களான, புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன் மற்றும் சனி ஆகியவற்றைக் குறிப்பதாக அமைந்திருந்தது. பிளாட்டோனியத் திண்மங்களான எண்முகி, இருபதுமுகி, பன்னிருமுகி, நான்முகி, சதுரமுகி ஆகியவற்றைச் சரியான ஒழுங்கில் வைப்பதன் மூலம் உருவாக்கப்படும் மாதிரியுருவில், அத் திண்மங்களைச் சூழ்ந்துள்ள கோளங்களுக்கிடையிலான இடைவெளிகள் அண்ணளவாக, கோள்கள் சூரியனைச் சுற்றுகின்றன எனக் கருதும் போது அக்கோள்களின் பாதைகளுக்கிடையிலான தூரங்களுக்கு விகிதசமனாகக் காணப்பட்டது. ஒவ்வொரு கோளினதும் சுற்றுப்பதையின் நீளத்துக்கும் அதன் சுற்றுக்காலத்துக்கும் இடையில் தொடர்பொன்றைக் கண்டுபிடிக்க கெப்லருக்கு இயலுமாயிருந்தது. உட்கோள்களிலிருந்து புறக்கோள்கள் நோக்கிச் செல்லும்போது, சுற்றுக்காலங்களின் விகிதத்தின் அதிகரிப்பானது, சுற்றுப் பாதையின் நீளங்களுக்கிடையிலான வித்தியாசத்தின் இருமடங்காகக் காணப்பட்டது.

அதன் படி, கோள்களின் சுற்றுக் காலங்களின் இருமடியானது(square), சூரியனிலிருந்து அக்கோள்களின் நீள்வட்டப்பாதையில் பெரிய விட்டத்தின் தொலைவிற்கு மும்மடிக்கு(cube) நேர்விகிதத்தில் இருக்கும் என்பதாகும். இதன் மூலமாக பூமியின் உள் மையப்பகுதி மிகப்பெரிய காந்தமாக செயல்படுகிறது என்பதும், சூரியனின் ஈர்ப்பு விசையே கோள்கள் அனைத்தும் அதன் சுற்று வட்டப்பாதையில் இயங்குவதற்கு காரணமாக அமைகிறது எனவும் கணித்தார். சிறு வயதிலேயே இவர் வானியல் துறையில் ஈடுபட்டார். தனது ஆறாம் வயதில் 1577ல் பெரும் வால்வெள்ளியை அவதானித்தார். இதனை அவதானிப்பதற்காக அவரது தாயாரால் உயரமான இடமொன்றுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்பது வயதில், இன்னொரு வானியல் நிகழ்வான 1580 -இன் சந்திர கிரகணத்தை அவதானித்தார். இதன் போது, அதனை அவதானிப்பதற்காக அவர் வெளியில் அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அதன்போது சந்திரன் சிறிது சிவப்பு நிறமாகத் தென்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும் சிறுவயதில் ஏற்பட்ட சின்னம்மை நோயினால், பார்வைக் குறைபாடுள்ளவராயும், வலுவிழந்த கைகளையுடையவராயும் ஆனார். இதனால் வானியல் அவதானிப்புக்களை மேற்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி,திருச்சி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!