இராமநாதபுரம் அரசு ரத்த வங்கியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு..

சாத்தூர் கர்ப்பிணிக்கு ரத்தம் கொடுத்த 19 வயது வாலிபர் கமுதியில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். பின்னர், இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். இடையூறுகள் தொடர்ந்ததால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், தமிழக அரசு மருத்துவமனைகளில் செயல்படும் ரத்த வங்கிகள், தனியார் வங்கி இருப்பு வைக்கப்படும் ரத்தத்தின் தன்மை ஆய்வு செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டது. இதனடிப்படையில் ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார். ரத்த வங்கியில் இருப்பு வைக்கப்பட்டு ரத்த வகை தொடர்பாக பராமரிக்கப்படும் பதிவேடு குறிப்புகள், ரத்த வகைகளின் தன்மை குறித்து டாக்டர்களிடம் கேட்டறிந்தார்.

அவர் கூறியதாவது: இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நோயாளிளுக்கு அறுவை சிகிச்சை, விபத்து  உள்ளிட்ட அவசர காலத்தில் தேவைப்படும் ரத்தம் வழங்க 600 யூனிட்  சேமிப்பு வசதி கொண்ட ரத்த வங்கி செயல்பட்டு வருகிறது. இங்கு 66 யூனிட் ரத்தம் சேமிப்பில் உள்ளது. ரத்த  வங்கியில் பராமரிக்கப்படும் ரத்த கொடையாளி பதிவேடு, ரத்த தானம் பெறப்பட்ட நாள், ரத்த வகை விபரங்கள் பதிவேடு, ரத்தத்தில் நோய் தொற்று  பரிசோதனை செய்ததற்கான பதிவேடு, அவசர தேவை அடிப்படையில் ரத்த வங்கியில் இருந்து சிகிச்சைக்காக வழங்கிய ரத்தம், நோயாளி குறித்த பதிவேடு என  அனைத்து பதிவேடுகளும் ஆய்வு செய்யப்பட்டன.  இந்த ரத்த வங்கியில் அனைத்து பதிவேடுகளும் முறையாக பராமரிக்கப்பட்டு ரத்த  வங்கி செயல்பாடு தொடர்பான அனைத்து சீர்மரபுகளும் முறையாக பின்பற்றப்பட்டுள்ளன. ரத்த வங்கிகள் மூலம் ரத்த தானம் பெறும்போதும் தேவை அடிப்படையில் நோயாளிகளுக்கு ரத்தம் வழங்கும்போதும் உரிய சீர்மரபுகளை பின்பற்றி விழிப்புடன் பணியாற்ற அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டத்தில் செயல்படும் அரசு, தனியார் ரத்த வங்கிகளின் செயல்பாடு குறித்து ஆய்வு செய்யவும், தொடர்ந்து  கண்காணிக்கவும் மருத்துவ பணிகளின் இணை இயக்குநருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ஆட்சியர் ஆய்வின் போது மருத்துவ பணிகள் இணை இயக்குநர் முல்லைக்கொடி, மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜவஹர்லால் உடனிருந்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்