Home செய்திகள் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பிரதமர் ஓய்வூதியத் திட்டம் விழிப்புணர்வு கூட்டம்..

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான பிரதமர் ஓய்வூதியத் திட்டம் விழிப்புணர்வு கூட்டம்..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட தொழிலாளர் அலுவலகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தலைமையில் பாரத பிரதமர் தொழிலாளர் ஓய்வூதியத் திட்டம் தொடர்பான விழிப்புணர்வு  கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ் தெரிவித்ததாவது: இந்தியாவில் 42 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் அமைப்பு சாரா தொழிலாளர்களாக பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். தெரு வியாபாரம், கட்டுமானத் தொழில், பழைய பொருட்களை சேகரித்து விற்பவர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், நிலமற்ற விவசாய தொழிலாளர்கள், பீடி சுற்றுபவர்கள், கைத்தறித் தொழிலாளர்கள், தோல் பதனிடும் தொழில் செய்பவர்கள் உள்ளிட்ட 150  விதமான அமைப்பு சாரா தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய தொழிலாளர்களுக்கு பிரதான் மந்திரி சரம்-யோஜி மந்தான் என்ற ஓய்வூதியத் திட்டம் அமைப்பு சாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு சட்டம் 2008ன் படி மத்திய அரசின் மூலம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சேர்ந்து மாதாமாதம் சந்தா செலுத்த வேண்டும். 60 வயதுக்கு பின் ரூ.3 ஆயிரம் மாத ஓய்வூதியம் பெறலாம். இத்திட்டத்தில் சேர்ந்து 10 வருடங்களுக்குள் சந்தா செலுத்த இயலாமல் முடித்துக் கொண்டால் சேமிப்பு கணக்கு வட்டியுடன் தொகை திரும்ப வழங்கப்படும். 10 ஆண்டுகளுக்கு மேல் சந்தா செலுத்தி முடித்துக் கொண்டால் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டியுடன் அசல் வழங்கப்படும். இத்திட்டத்தில் மத்திய அரசு தனது பங்குத் தொகையாக 50 சதவீத ஒவ்வொரு மாதமும் பயனாளியின் ஓய்வூதிய கணக்கில் செலுத்தப்படும். சம்பந்தப்பட்ட தொழிலாளர் மரணமடைந்தால் 60 வயதுக்கு பின்னர் அவரது நியமனதாரருக்கு (கணவர், மனைவி) 50 சதவீத தொகை குடும்ப ஓய்வூதியமாக வழங்கப்படும். தொழிலாளர் பதிவு செய்து 60 வயது அடையும் முன்னரே இறந்துவிட்டால் அவரது கணவர், மனைவி தொடர்ந்து தொகையினை செலுத்தி வந்து ஓய்வூதிய பயன்பெறலாம். இத்திட்டத்தின் கீழ் பயனாளியாக சேருவதற்கு தொழிலாளரின் மாத வருமானம் ரூ.15 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும். தொழிலாளி அமைப்பு சாரா தொழில்களில் ஒன்றில் ஈடுபட்டுள்ளவராக இருக்க வேண்டும். வயது வரம்பு 18-40க்குள் இருக்க வேண்டும். வருமான வரி செலுத்துபவர் இத்திட்டத்தில் சேர இயலாது.

இத்திட்டத்தில் சேருவதற்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மத்திய பொது இ-சேவை மையங்களை அணுகலாம். மேலும் இந்திய ஆயுள் காப்பீட்டு கழக கிளைகள் (எல்.ஐ.சி.),தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அலுவலகம் (இ.பி.எப்), தொழிலாளர் ஈட்டுறுதி நிறுவன அலுவலகம் (இ.எஸ்.ஐ.சி), மாவட்ட தொழிலாளர் நல அலுவலகம் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆகிய உதவி மையங்களை அணுகி பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீர ராகவ ராவ்தெரிவித்தார்.

தொடர்ந்து பரமக்குடி வட்டம் சத்திரக்குடி கிராமப் பகுதியில் மீட்கப்பட்ட செல்வன் ஐயனாருக்கு மாவட்ட தொழிலாளர் அலுவலக சார்பாக கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு நிதியின் கீழ் ரூ.20 ஆயிரம் நிவாரணத் தொகைக்கான ஆணை வழங்கினார். மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் பி.சங்கர் வேளாண் துறை இணை இயக்குநர் (பொ) எல்.சொர்ணமாணிக்கம், அமைப்பு சாரா தொழிலாளர்கள் நல  வாரியங்களைச் சார்ந்த பிரதிநிதிகள், வர்த்தக சங்க பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுனங்களைச் சார்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com